தோல்வியைக் கண்டு பயப்படாத மனோபாவம்!

 









தோல்வியை நோக்கி திட்டமிடுவோம்!

 
தலைப்பிலுள்ளதைப் போல ஒருவர் கலந்துரையாடலில் பேச முடியுமா? ரென் அப்படித்தான் பேசினார். எதிர்காலத்தில் ஒருநாள் நாம் தோல்வியை சந்திக்கப் போகிறோம். எனவே, முன்கூட்டியே நாம் அதற்கு தயாராக இருப்போம் என்று பணியாளர்களிடம் பேசினார்.
 
நடிகர்களைப் பற்றி உலகத்தமிழர்  தேசிய நாளிதழ்களில் என்ன எழுதுவார்கள்? அவரே தன் கையால் தானே சொகுசு கார் கதவைத் திறந்தார். அவரே சோடாவை தன் கையில் வாங்கிக் குடித்தார். பிரியாணி லெக்பீசை தன் வாயால் தானே மென்றார் என எழுதுவார்கள். ரென்னைப் பொறுத்தவரை இப்படி யாராவது நிறுவனரை அல்லது அதிகாரிகளை புகழ்ந்தால் வீட்டுக்குச் சென்று வேறு வேலையைத் தேடுங்கள் என அனுப்பிவிடுவார்.
 
ரென்னைப் பொறுத்தவரை தனது வேலைகளை தானே செய்வதுதான் அவருக்குப் பிடித்தமானது. மூன்றுமணிநேர விமானப் பயணம் என்றால் கூட அவருக்கு புத்தகம் ஏதாவது இருந்தால் போதும். அதைப்படிப்பார். இடையில் ஒரு முக்கல் முனகல் கூட இருக்காது. ஏதாவது சந்திப்பு இருந்தால், நகரிலுள்ள ஹூவெய் அலுவலகத்திற்கு கூட சொல்ல மாட்டார். நேரடியாக யாரை சந்திக்கவேண்டுமோ அங்கேயே வாடகை டாக்சியைப் பிடித்துப் போய்விடுவார். ஏன் இப்படி நடந்துகொள்கிறார். முதலாளி என்ற பில்டப் வேண்டாமா? வாடிக்கையாளர் தான் முக்கியம். தேவையில்லாத முதலாளி துதி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கேடு என நேரடியாகவே கூறியிருப்பவர் ரென். அதோடு அதை அவரே கடைபிடிக்கிறார்.
 
தற்போது, ஹூவெய் நிறுவனம் 170 நாடுகளில் செயல்படுகிறது. அதன் இதயமாக இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,94,000. 1987ஆம் ஆண்டு ஸ்டார்ட்அப் நிறுவனமாகவே ஹூவெய் நிறுவப்பட்டது. அப்போது பிபிஎக்ஸ் நிறுவனத்தின் விற்பனை முகவராக செயல்பட்டது. ஷென்சென் நகரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில்தான் ஹூவெய் நிறுவனம் தொடங்கப்பட்டது. வெற்றிபெற்றுவிட்டால் அது அதிர்ஷ்டத்தால் ஏற்பட்டது. தோல்வி ஏற்பட்டால், அதை எதிர்பார்த்த ஒன்றுதான் என்று பலரும் பேசுவார்கள். இந்த புதைகுழியில் ஹூவெய்யும் சிக்கிக்கொண்டது ஆச்சரியம்தான். ஹூவெய் நிறுவனத்தின் வெற்றி பலரையும் ஆச்சரியம் கொள்ள வைத்திருக்கலாம். 35 ஆண்டுகளாக நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் என பேயாய் வேலை செய்து வெற்றியை  சாத்தியமாக்கியுள்ளனர்.
 
ரென்னின் பின்புலத்தைப் பார்ப்போம்.
 
1944ஆம் ஆண்டு வறுமையான பின்புலம் கொண்ட கிராமத்தில்தான் ரென் பிறந்தார். அவரது பலம், அவரது பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தார்கள் என்பதுதான். ரென்னுக்கு ஐந்து சகோதரிகள், ஒரு சகோதரன் உண்டு.
 
ரென்னுக்கு மூன்று முறை மணமானது. இரு மனைவிகள் மூலம் இரண்டு பெண், ஒரு ஆண் என பிள்ளைகள் உண்டு. இதில் முதல் மனைவிக்கு பிறந்த மெங் வாங்சூ, ஹூவெய் நிறுவனத்தில் நிதித்துறை தலைவர், நிறுவனத் துணைத்தலைவராகவும் இருக்கிறார். இரண்டாவது மனைவிக்கு பிறந்த அனபெல் யாவோ பாலட் நடனக்கலைஞர்.
 
கட்டுமானப் படிப்பை படித்த ரென், ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். அப்போதிலிருந்தே புதிய விஷயங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர் ரென் என பலருக்கும் அறிகுறிகள் தெரியத் தொடங்கின. இவரின் பல புதிய முயற்சிகளைப் பார்த்தவர்கள் ரென் டெக் என பட்டப்பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினர். ராணுவத்தில் புகழுடன் இருந்தாலும் நிஜவாழ்க்கை வேறுவிதமாக இருந்தது. அங்கிருந்து வெளியே வந்த காலகட்டம் பொருளாதார முன்னேற்றங்களுக்கானது.
 
ரென் சில நிறுவனங்களில் வேலைக்குச்சேர்ந்தாலும் சரியாக வேலை செய்யவில்லை. திறமை இல்லை என்று காரணம் கூறி பணியிலிருந்து நீக்கப்பட்டார். பிறகுதான் ஹூவெய் நிறுவனத்தை எந்த அனுபவமுமின்றி தொடங்கினார் ரென். நிறுவனத்தை தொடங்க பலரும் நினைப்பது போல அரசு பணம் கொடுக்கவில்லை. தனது நண்பர்கள், இதுவரை சேர்த்த பணம் ஆகியவற்றை சேர்த்துத்தான் ஹூவெய் நிறுவனத்தைத் தொடங்கினார். சிறிது காலத்திலேயே அவர்களும் பணத்தை வேண்டும் என கேட்க, ரென்னுக்கு வேறு வழியில்லை. அந்த பணத்தையும் திரும்ப கொடுத்துவிட்டார். சரி ஹூவெய் என்ன வேலை செய்தது?
 
ஹாங்காங் நிறுவனம் தயாரித்த  சர்வர் ஸ்விட்சுகளை விற்கும் கடையாக, முகவராக செயல்பட்டது. நிறுவனம் நன்றாக செயல்படத் தொடங்கிய பிறகு, ஹாங்காங் நிறுவனம் தனது சப்ளையை நிறுத்திவிட்டது.  இதனால், ஹூவெய் தானாகவே ஸ்விட்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது.  
 
உழைப்பு என்றால் அப்படி இப்படி அல்ல. ஒரு மாத காலம் ஊழியர்கள் யாருமே நிறுவனத்தை விட்டு வெளியே போகவில்லை. அனைவரும், அங்கேயே தங்கி பொருட்களை உருவாக்கத் தொடங்கினார். சோர்வு வந்தால் தூக்கம், பிறகு எழுந்து குளித்துவிட்டு வேலை இப்படித்தான் முழு நாளுமே சென்றது.
 
ஹூவெய் உழைத்தார்கள் ஜெயித்தார்கள் என்பது உண்மை. அந்த காலகட்டமே அதற்கு முக்கியமான ஊக்கம் தந்தது. குறிப்பாக சீன அரசு அதுவரை தனியார் நிறுவனங்களை தொழில்செய்ய விடுவதில்லை. 1988ஆம் ஆண்டு தான் விதிமுறைகளை தளர்த்தி தனியார் நிறுவனங்களை தொழில்துறையில் அனுமதித்தனர். அதை சரியாக பயன்படுத்தி முன்னேறிய நிறுவனங்களுள் ஹூவெய்யும் ஒன்று.
 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்