ஒலியே இல்லாத உலகை உருவாக்க முயல்பவனின் வாழ்க்கையில் வரும் இசை! குவ்வா கோரிங்கா -

 



குவ்வா கோரிங்கா

தமிழில் 

காதல் பறவைகள்




சத்தமே பிடிக்காமல் அலர்ஜியாக இருப்பவன், தாயின் இசை ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வயலின் இசைக்கும் பெண் என இருவரும் அருகருகே அறை அமைந்தால் எப்படியிருக்கும். 

அதுதான் படத்தின் கதை. 

படத்தில் லாஜிக் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பார்க்காமல் இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக சத்யதேவ், பிரியா லால் ஆகியோரின் இரு அறைகளும் ஒருவர் பேசுவதை எளிதாக பிறர் கேட்பது போல இருப்பது. 

இதுதான் படத்தின் முக்கியமான அம்சம். 

சத்யதேவைப் பொறுத்தவரை அவருடைய இயல்பில் எளிதாக படத்தில் நடித்து விடுகிறார். ஆனால் பிரியா லால் விஷயத்தில் இது சரியாக நடக்கவில்லை. அதாவது, தன்னை பிரியா பயன்படுத்திக்கொண்டார் என்பதை அவரது அப்பா மூலம் சத்யதேவ் அறியும் காட்சி. அதற்கு பின்னான பிரியா லாலின் காட்சிகள் அழுத்தமானவை. அதில் பிரியா அந்தளவு அழுத்தமாக நடிக்கவில்லை. 

படத்தில் சத்யதேவின் பாத்திரத்திற்கு சைலன்சர், பிரியாவுக்கு வயலின் என்று பெயர். நிஜப் பெயரை விட இதுவே படத்தின் தன்மைக்கு மிக பொருத்தமாக ஒத்து வருகிறது. சத்யாவுக்கு, அதிக சத்தம் வராத ஒரு எஞ்சினை தயாரிப்பதே கனவு. அதற்காக அவர் கல்லூரியில் படித்தபடியே உழைத்து வருகிறார். பிரியாவுக்கு அவர் வயலினை முறைப்படி வாசிக்க கற்று அதில் தேர்ந்தவராக வரவேண்டும். இப்படி வயலின் கற்க, தனது திருமண வாழ்க்கை விருப்பத்தை பணயமாக வைத்துவிட்டு நகருக்கு வருகிறார். வந்த இடத்தில் சத்யதேவின் நட்பும், வழிகாட்டுதலும் அவரை மேம்படுத்துகிறது. பிரியாவின் மூலமாக சத்யாவும் மெல்ல ஒலியின் உலகிற்கு பழக்கமாகிறார். 

இந்த கதை இல்லாமல் சத்யதேவின் நண்பர் பிரியதர்ஷியின் காசனோவா வாழ்க்கை எப்படி காதலால் மாறுகிறது என்பதையும் இயக்குநர் அழகாக சொல்லியிருக்கிறார். காதல் உறவு என்பது இருவருக்குமான ஊக்கத்தை அன்பு நிறைந்திருந்தால் மட்டுமே தரும் என்பதை இறுதியாக சொல்லி முடிக்கிறார். 

படத்தில் நாயகன், நாயகி ஆகியோர் எதிர்கொள்ளும் முரண் என்பது வாழ்க்கையில் அவர்களாக உருவாக்கி வைத்துள்ள பிம்பங்கள்தான். அதை உடைத்து விட்டு உலகைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுதான் கதையின் இறுதிப்பகுதி. 

தெலுங்குப் படம் என்றாலும் கூட இதில் தேவையில்லாத மசாலா விஷயங்கள் ஏதுமில்லை. தமிழ் டப்பிங்கில் படத்தின் பாடல்களை தவிர்ப்பது இதயநலனையும் காதுகளையும் காக்கும். 


சைலன்ஸாக ஒரு காதல் கதை! 


கோமாளிமேடை டீம் 



Directed byMohan Bammidi
Written byMohan Bammidi
Bammidi Jagadeeswara Reddy (dialogues)




கருத்துகள்