மாற்றுத்திறனாளி பெண்ணைக் கொல்லத் துரத்தும் புத்திசாலி சைக்கோ! - மிட்நைட் 2021 - கொரிய திரைப்படம்
மிட்நைட்
தென்கொரிய திரைப்படம்
திரில்லர்
சொகுசு வேனில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் சுற்றுகிறான். அவன் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கிறான். அடிபட்டு கிடப்பவளை வாய் பேசமுடியாத காது கேளாத பெண் பார்த்து உதவுகிறாள். இதனால் கொலைகாரன், அவளையும் அவளது அம்மாவையும் கொல்லத் துரத்துகிறான். அவள் அந்த கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.
படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர் (வி ஹா ஜூன்), வாய் பேச முடியாத பெண் (ஜின் கி ஜூன் ) என இருவருமே சிறப்பாக நடத்திருக்கிறார்கள். அதிலும் இறுதிக்காட்சியில் திக்கித்திணறி பேச்சிலும், செய்கையிலும் தனது கனவு பற்றி விவரித்து தன்னை உயிரோடு விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சி. அடுத்து, தன்னைக் காப்பாற்ற கத்திகுத்துபட்ட பெண்ணின் அண்ணனிடம் (பார்க் ஹூன்) உதவி கோரி, இறுதியில் அவன் சுயநலமாக தனது தங்கைக்காக வாய் பேச முடியாத பெண்ணை கைவிடும்போது விரக்தியாகி அழும் காட்சி.
வள்ளுவர் கோட்டத்திலிருந்து போரூர் வரை பல்வேறு சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஓடும் தடகள காட்சியை பதினைந்து நிமிடங்களுக்கு காட்டுகிறார்கள். எழுதியது கிண்டல் போல தோன்றினாலும் இதைக் காட்சிபடுத்தியது சிறப்பாக உள்ளது. இதற்கு டெம்போ ஏற்றுவது மென்மையாக தொடங்கி நம் காது முழுக்க நிரப்பும் பின்னணி இசைதான்.
படம் திரில்லர் படம் என்றாலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை உலகம் எப்படி பார்க்கிறது, அவர்களை எப்படி கேலிபேசுகிறது என்பதையும் இயக்குநர் நேர்த்தியாக சொல்லிவிட்டார்.
பொதுவாக உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கொலை செய்து அதனால் மகிழ்ச்சியுறும் மனநிலை கொண்டவர்கள் புத்திசாலித்தனமாக யோசிக்க மாட்டார்கள் என வாதிடுகிறார்கள். இதில், வரும் கொலைகாரர் மனிதர்களின் மனதில் உள்ள சுயநலத்தை தன்னை தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் காப்பாற்றும் மனத்தை ஒரு காட்சியில் வெளிப்படுத்தி அதிர வைக்கிறார். அப்பட்டமான நிஜத்தைப் பார்த்து வாய்பேச முடியாத பெண் போலவே பார்வையாளர்களான நாமும் ஒரு நிமிடம் அதிர்ந்து போகிறோம். ஆனால், வாய் பேச முடியாத பெண், தன் வாழ்க்கையை இழந்தால் கூட காயம்பட்ட பெண்ணை காப்பாற்ற நினைக்கும் மைக்ரோ நொடி முடிவு அவளது கருணை மனதிற்கு சான்று. அதுதான் இறுதியில் காயம்பட்ட பெண்ணின் அண்ணனை குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது. சைக்கோ கொலைகாரரை என்னவானாலும் எதிர்க்கவேண்டும் என துணிகிறார்.
சைக்கோ கொலைகாரரின் பாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அதுதான் படத்தின் பெரும்பலமாக மாறியிருக்கிறது.
பரபர புத்திசாலி த்ரில்லர் படத்திற்கு சரியான சாய்ஸ்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக