அந்தரங்க ரகசியங்கள் உடைபட நண்பர்கள் கூட்டத்தில் நடைபெறும் கொலை! 12 Th Man - ஜீத்து ஜோசப்

 









12th Man

மோகன்லால் (நடிகர், தயாரிப்பு)

இயக்கம் - ஜீத்து ஜோசப் 






கல்லூரி நண்பர்கள் பதினொரு பேர், ரிசார்ட் ஒன்றுக்கு வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்யப்போகும் நண்பன் கொடுக்கும் பார்ட்டி அது. அங்கு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். அது வினையாக அதன் விளைவாக ஏற்படும் குழப்பமும், கொலையும் அதுதொடர்பான விசாரணையும்தான் படம். 

பதினொரு நபர்களை படத்தின் டைட்டில் கார்ட் போடும்போதே அறிமுகப்படுத்திவிடுகிறார்கள். இதனால் கதையில் இவர்களைப் பற்றி தனியாக சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. கல்லூரி கால நண்பர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் இன்னொருவர் மீது புகைச்சலும் பொறாமையும் இருக்கிறது இதனை வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துகிறார்கள். முக்கியமான மேத்யூ, ஷைனி ஆகியோர் தான் படத்தை நகர்த்திச்செல்லும் முக்கியமான பாத்திரங்கள். 

மேத்யூ, ஃபிடா ஆகியோர் கல்லூரி கால தோழர்கள் மேலும் தொழிலும் ஒன்றாக் இருக்கிறார்கள். இவர்களை ஷைனி ஒன்றாக இருக்கிறார்கள், பழகுகிறார்கள் என எப்போது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். தேள் போல கடினமான வார்த்தைகளை எளிதாக பேசுகிறார். 

இதில் ஃபிடா திருமணமாகி விவாகரத்தானவர். அவர் மீது ஷைனி கொள்ளும் பொறாமை, வெளிப்படையாக அனைவருக்குமே தெரிகிறது. பார்ட்டியில் நடைபெறும் விளையாட்டு நண்பர்களுக்கு இடையில் மனதில் மட்டும் இருந்த பொறாமையை, கோபத்தை இன்னும் கூர்மையாக்குகிறது. அனைவரும் தங்கள் போன்களை எடுத்து மேசையில் வைத்து, அதில் வரும் அழைப்புகளை ஸ்பீக்கரில் போட்டு பதில் சொல்லவேண்டும். வெளிப்படைத்தன்மைதான் இதில் முக்கியம். ஃபிடா விளையாட்டை அறிமுகப்படுத்தி வைக்க அனைத்து நண்பர்களின் அந்தரங்க வாழ்க்கையும் வெளிவரத் தொடங்க, பலரும் பதற்றம் கொள்ளுகிறார்கள் இதில் சாம் மட்டும் சாமர்த்தியமாக தப்பிக்கிறார். மற்றவர்கள் எல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலும் புதிதாக திருமணமாகப்போகும் பார்ட்டி கொடுக்கும் இளைஞரே தனது நண்பருக்கு செய்யும் உதவியால் மாட்டிக்கொள்கிறார். அதனால் நேரும் விளைவுகள்தான் படத்தை நடத்திச் செல்கிறார். 

இதில் மோகன்லால் எங்கு வருகிறார்?

அவர்தான் சஸ்பென்சனில் உள்ள காவல்துறை அதிகாரி. விடுதியில் தங்கியிருக்கிறார். அவர்தான் நடந்தது என்ன பாணியில் துப்பறிகிறார். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். எப்படி என்பதற்கு நிதானமாக படத்தைப் பார்க்கவேண்டும். 

ரிசார்ட், ஒரே அறை என காட்சிகள் நகர்கின்றன. படம் கொஞ்ச நேரத்திற்குள் அறைக்குள் வந்துவிடும் என்பதாலோ என்னமோ ஜீத்து ஜோசப் நிறைய இயற்கைக் காட்சிகளை முதலிலேயே காட்டி நமக்கு ஆசுவாசம் தந்துவிடுகிறார். 

படத்தின் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொருவரின் பார்வைக்கோணத்திலும் அவர்கள் செய்த விஷயங்களைக் காட்டி முன்னும் பின்னும் கதை சொல்லும்போது எடிட்டிங் மிக இசைவாக ஒத்துழைக்கிறது. 

மனிதர்களின் அந்தரங்கம் எந்தளவு முக்கியமானது. அந்த வாசல்கதவு உடைக்கப்பட்டு திறந்தால் எவ்வளவு அசிங்கங்களை பார்க்க வேண்டியிருக்கும், எத்தனை மனங்கள் உடைந்து நொறுங்கும் என்பதைப் படம் மெல்ல காட்சிபடுத்தியிருக்கிறது. உண்மையில் படம் முடிந்த பிறகுதான் நண்பர்களுக்குள், தம்பதிகளுக்குள் உள்ள ரகசியங்களை அவர்கள் எப்படி உணர்வார்கள், வெளிப்பட்ட சிக்கல்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என் மனதிற்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடுகின்றன. இயக்குநர் இதனை கச்சிதமாக உருவாக்கியுள்ளார். சொன்ன கதை இது, சொல்லாத கதையை பார்வையாளர்கள் நாமேதான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். 

படத்தின் தொடக்கமும், நிறைவும் ஆங்கிலப்பாடல் ஒன்றை பாடகி மிகுந்த லாவகத்துடன் பாடுகிறார். கேட்க நன்றாக இருக்கிறது. 

நிதானமாக திரில்லர் படம் ஒன்றைப் பார்க்க விரும்பினால், மோகன்லாலின் இப்படத்தைப் பார்க்கலாம். 

கோமாளிமேடை டீம் 

நன்றி

பத்திரிகையாளர் த.சக்திவேல்



 


கருத்துகள்