காமத்தைக் கொண்டாடும் நுண்கதைகள்! - 69 நுண்கதைகள் - சி.சரவணகார்த்திகேயன்
69 நுண்கதைகள்
சி.சரவணகார்த்திகேயன்
உயிர்மை பதிப்பகம்
ரூ.80
சி.சரவணகார்த்திகேயன் |
ஒரு மாதத்தில் எழுதப்பட்ட கதைகள் என எழுதிய ஆசிரியர் குறிப்பிடுகிறார். 69 என்பது காகத்தின் கலவி நிலை என பின்னட்டைக் குறிப்பு சொல்லுகிறது. இதெல்லாவற்றையும் தாண்டி இந்த நூலை வாங்க வைப்பது முன்னட்டையில் உள்ள அழகான ஓவியங்கள்தான். பார்த்தவுடனே ஈர்க்கும்படி செய்திருக்கிறார்கள்.
60 கதைகள் இருக்கின்றன. அனைத்துமே நுட்பமாக காமம், காதல், மனதிற்குள் ஒளித்து வைத்துள்ள சில ரகசியங்கள், பாலினத்தின் மீதான மாறாத ஈர்ப்பு ஆகியவற்றை குறியீடாக சில சமயங்களில் நேரடியாகவே வெளிப்படுத்துகிற ஒருபக்க கதைகள்.
சரவண கார்த்திகேயன் எழுதிய கதைகள் சிறியவை என்றாலும் இதில் எங்கேயும் தேவையில்லாமல் கதையை இழுத்துவிடுகிற தன்மை இல்லை. எல்லாமே இழுத்து பின்னப்பட்ட வலைப்பின்னல்களைக் கொண்ட நாற்காலி போல கச்சிதமாக உள்ளது.
இதில், குறிகளை வெட்டும் லட்சியத்தைக் கொண்ட மனிதரின் கதை சிறப்பாக உள்ளது. கணவரை விவகாரத்து செய்யும் பெண் நீதிமன்றத்தில் சொல்லும் உரையாடல்களாக விரியும் கதை, காமத்தில் நிறைவு கொள்ளாத மனம் பிறருக்கு ஏற்படுத்தும் அசௌகரியத்தைப் பற்றி பேசுகிறது.
இன்னொரு கதை, ஆண்களின் ஹாஸ்டலில் நடைபெறுகிறது. ஓரினப் பால் புணர்ச்சிதான் கதையின் மையம். அதை ஒரு சமயம் மறுக்கும் ஆணின் மனம், மற்றொரு கணம் செய்து பார்த்தால்தான் என்ன நினைக்கும் நொடியில் கதை முடிகிறது.
அலாவுதீன் அற்புதவிளக்கு பற்றிய ஒருபக்க கதை, காமம் அதன் மகிழ்ச்சி என வேறுவிதமாக யோசிக்கவும் தூண்டுகிறது. விளக்கை துடைத்தால் பூதம் எழுகிறது. உதவிகளை செய்கிறது. அதனால் அதற்கு என்ன பிரயோஜனம் என ஆசிரியர் யோசித்த கோணம் அபாரமானது. அதில் தான் நினைத்துப் பார்க்க முடியாத அழகில் நுண்கதை எழுந்து நிற்கிறது.
பெண்களின் மனம் பற்றிய கதைகளை கூறியதாக நாம் இருகதைகளைக் கூறலாம். ஒன்று தனது கணவரின் சாட் அக்கவுண்டை திறந்து பார்த்து அதில் யார் அவருடன் பேசுகிறார் என தேடுவது. அப்படி தேடி அதில் உரையாடி எதிரில் இருப்பவர் யார் என அடையாளம் கண்டதும் மனைவியின் கோபம் டக்கென மாறுகிறது. அங்கே இன்னொரு மெய்நிகர் உறவு தொடங்குகிறது. அந்த இடம் அருமை.
இன்னொரு கதையாக, அபார்ட்மென்ட் ஒன்றில் நடக்கும் கதையை கூறலாம். அதில், முத்து படத்தில் வருவதுபோல பேப்பர் ஒன்றில் கல் வைத்து செய்தியை பரிமாறுகிறார்கள். அதனை ஆண் ஒருவர் எடுக்கிறார். மணமானவர்தான். அதில் பெண் ஒருவர், தான் திருமண வாழ்வில் வெறுமையை சந்திப்பதாகவும், குறிப்பிட்ட பூங்காவில் நாம் சந்திக்கலாம் என கூறி எழுதியிருக்கிறார். மேலும் படிப்பவர் பெண்ணாக இருந்தால் நீங்களும் இதேபோல முயற்சி செய்யலாம் என்றும் கூறுகிறார். இதைப் படித்து பதற்றமான ஆண் அதாவது கணவர் அடுத்து என்ன செய்கிறார் என்பது கதையை அழகாக மாற்றுகிறது.
காமத்தைக் கொண்டாடிய நிறைய கதைகளை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். வாமு கோமுவின் சாந்தாமணி இன்னும் பிற கதைகள் இதற்கு உதாரணம். ஆனால் ரைட்டர் சிஎஸ்கே அதை நவீனமான உலகில் கொண்டு சென்று கூறுவது அதை புதுமையாக்குகிறது.
நிறைய காமம் 25 சதவீத காதல்!
கோமாளிமேடை டீம்
நன்றி
அஷ்ரத்
கருத்துகள்
கருத்துரையிடுக