அன்பெனும் தானியம் இந்திய மண்மீது - இந்தியா 75 -

 







வெறுப்பு எப்படி பரவுகிறது என்றால் தொடர்ச்சியாக நரம்பில் சலைன் ஏற்றுவது போல மெல்ல மெல்ல தினமொரு செய்தியைக் கொடுத்து வெறியேற்றுகிறார்கள். அண்மையில் கிறிஸ்துவ மிஷனரியில் படித்த நண்பரொருவர், தான் படித்த இடம், கற்ற விஷயங்களைக் கூட மறந்துவிட்டு வீரத்துறவியின் காவி உடையே கட்டுமளவு துணிந்துவிட்டார். கலாசாரம் மாறாமல் இருக்கவேண்டும், தன்னைத் தவிர பிறர் அனைவரும் கட்டாயம் நேர்மையாக இருக்கவேண்டும் என சத்தியம் தர்மம் மானம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுபவர். 

ஒருநாள் நான் இன்னொரு நண்பரிடம் மதமாற்றம் பற்றி பேசும்போது, திடீரென உள்ளே புகுந்தவர் கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே அதை செய்கிறார்கள். மக்களும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு விலை போகிறார்கள் என்று சலித்துப்போய் கோபம் மேலிட பேசினார்.

 நான் எனது விவாத நண்பரைப் பார்த்தேன்.அவர் புருவங்கள் சுருங்க வீரத்துறவி நண்பரைப் பார்த்தார். 

சூழலைப் பற்றி அவருக்குப் புரிய வைக்க  நானே பேசினேன்.   பிழைப்புவாதிகள் எல்லா இடத்திலும் உண்டு.இதில் குறிப்பிட்ட மதம் என்று வரம்புகள் எல்லாம் கிடையாது. ஒருவருக்கு தன்னுடைய மதம், சாதியில் கௌரவமில்லை. இழிவாக நடத்துகிறார்கள். இன்னொரு மதத்தில் இணைந்தால் அவருக்கு கல்வி, மருத்துவம், குறிப்பாக அவர் கௌரவமாக வாழ்வதற்கு வழி கிடைக்கிறது. அதை தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றேன். வீரத்துறவி நண்பர் ஒன்றுமே பேசாமல் அமைதியாகிவிட்டார். 

இதில் வாசிப்பவர்கள் அறிய வேண்டிய விஷயம், இந்த விவகாரத்தைப் பேசியவர்கள் அனைவருமே இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள் தான். 

வெறுப்பை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பது பற்றிய சில ஐடியாக்களை டைம்ஸ் ஆப் இந்தியாவின் சாகரிகா கோஸ் கூறியிருக்கிறார். அவற்றை சுருக்கமாக பார்ப்போம். 

உண்மையை நம்புங்கள்

இன்று தந்தி, தினமலர் போல ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. இதில் ஒரு செய்தி வந்துவிட்டதால், சாய்பாபா செய்தியை பத்து பேருக்கு அனுப்புவது போல அனுப்பி வருகிறார்கள். இதனால்தான் தவறான வெறுப்பு வாத செய்திகள் எளிதாக பரவுகின்றன. இவை சமூகத்தில் பொது அமைதியைக் குலைக்கின்றன. அப்படி ஒன்றுதான் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருகுகிறது என்பது. மத்திய அரசின் குடும்ப நலத்துறை எடுத்த ஆய்வில் கடந்த காலங்களில் 4.4 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு சதவீதம் தற்போது 2.3 சதவீதமாக சரிந்துள்ளதைக் காட்டியுள்ளது. குழந்தை பிறப்பதைத் தடுக்கும் பல்வேறு சாதனங்களை முஸ்லீம்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இந்துக்களை தாண்டி அல்ல அவர்களது அருகில் கூட முஸ்லீம்களின் எண்ணிக்கை வரவில்லை. 

பன்மைத்துவம்

பள்ளி, கல்லூரி, அலுவலகம், குடியிருக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் பன்மைத்துவம் கொண்ட இடங்களை அமைக்கவேண்டும். இதற்கான விழாக்களையும் உருவாக்கி நடத்த வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் தயக்கங்கள் உடைந்து ஒன்றாக வாழ்வது சாத்தியமாகும்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்பட்டு வாழ்வது கடினம். 

பொருளாதாரத்தில் அனைவருக்கும் இடமுண்டு

மொராதாபாத், போஹ்ரி, கோஜா முஸ்லீம்கள் தயாரிக்கும் பொருட்களை இந்து மத வணிகர் தான் வாங்கி விற்கிறார்கள். இது ஒரு எடுத்துக்காட்டுதான். பல்வேறு தொழில்களை முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள். இவர்களோடு இந்துகளும் உண்டு. இப்படி அனைவரும் இணைந்து உழைத்தால் தான் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் என்பதை  யாரும் மறந்துவிடக்கூடாது.

ஆன்மிக அனுபவங்களை பகிர்தல்

மீரட்டில் உள்ள பள்ளி ஒன்று இந்து, முஸ்லீம் மாணவர்கள் தங்களது ஆன்மிக நூல்களிலுள்ள நல்ல கருத்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள ஊக்கப்படுத்தியுள்ளது. அனைத்து மதங்களிலுள்ள கருத்துகளையும் கூறுவதோடு பிற மதத்தினர் அதனை வாசிப்பதும் நல்லது. இதன்மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ உதவும். அனைத்து மதம் சார்ந்த நண்பர்களின் விழாக்களைக் கொண்டாடுவதும் கலாசார பரிமாற்றமாகவே இருக்கும். மேலும் அரசியலமைப்புச்சட்டத்தை வாசித்து அறிவதும் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள உதவும். 

வெறுப்பு வாத வழக்குகள்

சுட்டுக்கொல்லப்பட வலதுசாரி குழுக்கள் தயங்குவதில்லை. ஆனாலும் வெறுப்பு வாத வழக்குகளை முன்னணி வழக்குரைஞர்கள் எடுத்துக்கொண்டு வாதாடி குற்றவாளிகளை கைது செய்ய உதவலாம். இதன்மூலம் சமூக அமைதி காப்பாற்றப்படும். 

மௌனம் யாரையும் காப்பாற்றாது!

இல்லாத இறைச்சிக்காக ஒருவரை சித்திரவதை செய்து அடித்து கொல்லும்போது நீங்கள் அமைதியாக இருந்தால், அக்கொலைக்கு நீங்களும் உதவி செய்தீர்கள் என்றே அர்த்தம். சித்திரவதை செய்யப்படுபவர் யாராக எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உதவி கோரினால் அவருக்கு உதவுவது முக்கியம். 

TOI

based on sagarika ghosh article

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்