வரலாற்றை மாற்றும் ஆட்சியதிகாரம்!

 









அதிகாரம் எந்த இடத்தில் பொய் சொல்லும்?  செல்வம், அரசியல்கட்சி அலுவலகம், காவல்துறை, ராணுவம்? இதில் எந்த பதிலைத் தேர்ந்தெடுத்தாலும் தவறுதான். ஏனெனில் அதிகாரம் என்பது அறிவை உருவாக்கும் இடத்தில் தான் பொய்களை ஏராளமாக கூறும். ஏன், அறிவை அதிகாரம் தேர்ந்தெடுக்கிறது? அதுதான் மக்களை உஷார் படுத்துகிறது. அவர்களை உயர்ந்தவர்களாக்குகிறது. எச்சரிக்கை செய்கிறது. 

இங்கு அறிவு என்பது கருவிதான். அதை யார், எப்படி, என்ன பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். ரஷ்யா, தனது பள்ளி பாடப்புத்தகங்களில் உக்ரைன் மீது எதற்கு போர் தொடுக்கிறோம் என்பதற்கான காரணங்களை கூறியிருக்கிறது என கார்டியன் பத்திரிகை கூறியிருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர்களின் தேவைக்கேற்ப பாடங்களை மாற்றியமைத்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வே அறிக்கைகள், என நிறைய விஷயங்களை மாற்றியமைத்தனர். இப்படித்தான் இந்தியர்களின் மூளையை மாற்றியமைத்து தங்களுக்கு ஆட்சிக்கு சாதகமாக மாற்றினர். நாம் இன்றுவரையில் கூட அவர்கள் உருவாக்கிய பல்வேறு விஷயங்களிலிருந்து முழுமையாக மாறவில்லை. 

சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி நீண்டகாலம் ஆட்சியில் இருந்தது. அவர்கள், சமூக அறிவியல், வரலாற்று புத்தகங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தேசிய இயக்கங்கள் பற்றிய விஷயங்களை பாடமாக மாற்றினர். வரலாறு என்பது ஆற்றல் கொண்டது. இது வாசிக்கும் வாசிப்பாளர்களின் மனதில் தாக்கத்தை செலுத்தி சிந்தனையை மாற்றுகிறது. இந்த வகையில், மாநில அளவில் கூட பல்வேறு அரசுகளும் வரலாற்றை மாற்றி எழுத முயன்று வருகின்றன. குறிப்பாக ராஜஸ்தான். 

காங்கிரசிற்கு பிறகு வலுவான வெற்றியால் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, தனது பாணியில் பாட நூல்களை மாற்றி வருகிறது. அண்மையில் பத்தாவது சிபிஎஸ்இ பாடநூலில் இருந்த ஃபைஸ் என்ற கவிஞர் எழுதிய ஜனநாயகம், பன்மைத்தன்மை என்ற கவிதையை நீக்கியுள்ளது. அறிவை கட்டமைக்கும் அரசியலில் சிலவற்றை உள்ளே சேர்ப்பதோடு, சிலவற்றை அழிப்பதும், சிலவற்றை கைவிடுவதும் கூட முக்கியமானது. 

வரலாற்றில் சில விஷயங்களை நினைவுபடுத்துவதும் சங்கடமான விவகாரங்களை மறக்க வைப்பதும் முக்கியம். பாஜக, சில விஷயங்களை மறக்க வைக்க முயன்று பாடங்களை மாற்றி வருகிறது. அந்த கட்சியிலிலுள்ள சிந்தனைக் குழுக்கள் இதற்கான பணியை செய்து வருகின்றன. பிராந்திய மொழி, தாய்மொழி தொடர்பான கல்விக்கொள்கை சீர்திருத்தங்களை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. பாஜக அரசு நவீனத்தையும் தொன்மையையும் இணைக்கும் பாலமாக கல்விக்கொள்கையை உருவாக்கியுள்ளது. 

ராமாயணம், மகாபாரதம், கீர்த்தனை, பஜனைகள் என ஏற்கெனவே அதன் லட்சிய இலக்கை உருவாக்கி, பல லட்சம் மக்களை ஈர்த்துள்ளது. ஆர்எஸ்எஸ் இதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த அமைப்பு நடத்தும் பள்ளிகள், ஷாகா வகுப்புகள் இந்து கலாசார தன்மையை ஊக்குவிக்கும் தன்மை கொண்டவை. இவை, மக்களிடையே செல்வாக்குடன் உள்ளன. இதை வழிமொழிந்து இந்தி சினிமாக்கள் தேசியவாத சினிமாக்களை எடுத்து வருகின்றன. குறிப்பிட்ட கருத்துகளை பிரசாரம் செய்து அதனை சமூக அறிவாக மாற்றும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் காலப்போக்கில் தீவிரமாக இருக்கும். பாஜக அந்த வகையில்தான் தனது கருத்துகளை பல்வேறு இடங்களில் கூறி வருகிறது. 



பத்ரி நாராயண்

டைம்ஸ் ஆஃப் இந்தியா





கருத்துகள்