சிவா முத்தொகுதி - 
மெலூகாவின் அமரர்கள்
அமிஷ் திரிபாதி
தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன்
வெஸ்ட்லேண்ட் பதிப்பகம்

ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும். 

இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை. 




மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எதற்காக பழங்குடிகளை அழைத்து வந்து காஷ்மீரில் (அதைத்தான் மெலூகர்களின் நகராக கூறுகிறார்கள்.) குடியமர்த்துகிறார்கள் என்பதுதான் கதையின் முக்கியமான இழை. 

சிவாவைப் பொறுத்தவரை போர் என்பது பெரிய விஷயமல்ல. அதற்கான திட்டங்களும் ஆட்களை அதற்காக முடுக்குவதும் நண்பன் வீரபத்ரனுடன் திட்டமிடுவதும் எளிதாகவே இருக்கிறது. ஆனால் மக்களை எதிரிகளிடமிருந்து காக்கும் பொறுப்பு அவனது தோளில் பெரிய சுமையாக இருக்கிறது. எனவே, மானசரோவரிலிருந்து பிணையாக பிடித்து வைத்த நந்தியின் கூற்றை ஏற்று அவர் மெலூகர்களின் நகருக்கு வருகிறார். அங்கு அவர்களுக்கு சோமரசத்தை தொற்றுநோய்க்கான மருந்து என்ற பெயரில் கொடுக்க, மக்கள் பலருக்கும் காய்ச்சல் வருகிறது. 



இதில் சிவாவுக்கு மட்டும் உடலில் காய்ச்சல் வரவில்லை. ஆனால் தொண்டை மட்டும் நீலநிறமாக மாற பயந்துபோகிறார். இதைப் பார்க்கும் ஆயுர்வேத மருத்தவர் ஆயுர்வதி, அவரது காலை த் தொட்டு வணங்குகிறார். அவரை காட்டுமிராண்டி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்.   ஆனால் சிவா வியந்துபோகிறார். தொண்டையில் ஏதோ பாதிப்புள்ளது. அதற்கு மருந்து தரவேண்டிய மருத்துவர் தன் காலில் விழுகிறார். என்னென்னவோ பேசுகிறார் என குழம்புகிறார். பிறகுதான் புராணக் கதைகளை பற்றிய அவருக்கு தெரிய வருகிறது. 

நந்தி, சூரியவம்சி பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் மகிழ்ச்சி. இனி எதிரிகளான சந்திரவம்சிகளை அடித்து நொறுக்கி விடலாம் என்ற கனவில் இருக்கிறார்கள். இந்த நிலையில் சிவா தன்னை யார் என்று எப்படி தெரிந்துகொண்டார் என்பதை 300 பக்கங்களுக்கு மேல் செல்லும் நாவலைப் படித்து நாம் தெரிந்துகொள்ளலாம். 

சிவா, கோவிலிலில் வாசுதேவர்கள் எனும் பண்டிதர்களை சந்தித்து பேசும் அனைத்து காட்சிகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. உரையாடல்களும், அதிலிருந்து நாம் தெரிந்துகொள்வதும் அற்புதமாக உள்ளன. இலையின் பச்சை நிறத்தைப் பற்றி பண்டிதர் பேசும் காட்சி. அடுத்து, ராமர் கோவிலில், பிச்சைக்காரர் பற்றி சிவா யோசிப்பதும், பிறகு அவரிடம் அமர்ந்து உணவு உண்பதும் அதிலிருந்து பெறும் தெளிவும் படிப்பவர்களை வசியம் செய்கிறது. 

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் முகமூடி அணிந்த நாகர் ஒருவர் பற்றிய மர்மம் கதையின் முக்கியமான இடங்களை வாசிக்க தூண்டுகிறது. போர்செய்யும் காட்சிகளையும் அமிஷ் முடிந்தவரை சிறப்பாக விளக்கியிருக்கிறார். காட்சிகளை நாம் நேரடியாக பார்ப்பது போன்ற இயல்புநிலையை உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார். 

நடனம் பற்றி சிவா சதிக்கும் விளக்கும் காட்சி சிறப்பாக வந்துள்ளது. அதில் நிலம் பற்றியும் அதில் இருந்து நாம் பெறும் சக்தி பற்றிய கூற்று அற்புதம். 

இந்த நூலை படிக்கும்போது டிவி சேனல்களில் வந்த சிவபுராணம் வகையறாக்களை படித்துவிட்டு படித்தால் கஷ்டமாக இருக்கும். காரணம், இதில் சிவன் சாதாரண பழங்குடி மனிதராகவே வருகிறார். அழுகிறார். எதிரிகளால் காயம்படுகிறார். விஷத்தால் தாக்கப்பட்டு மயங்கி வீழ்கிறார். கனவு கண்டு அலறி எழுகிறார். மரிஜூவானாவை சல்லத்தில் இட்டு புகைக்கிறார். இதில் சிவா மிகத்தூய ஆன்மா கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இல்லையெனில் வாசிக்கும்போது மனதில் பிம்பங்கள் உடைந்து நொறுங்கி வீழ்வதைப் பார்ப்பீர்கள்.  

சிவா என்பவர் எப்படி நீலகண்டராக மாறுகிறார் என்பதற்கான முதல் நிலை இது. 


கருத்துகள்