இளைஞர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் அமைப்பு! -YPP
தமிழ்நாட்டில் அரசியல் என்பது அனைத்து இடங்களிலும் உண்டு. தேவையில்லாத கலவரங்களை தடுக்க சில டீக்கடைகளில் அரசியல் பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று நிறைய இடங்களில் இளைஞர்கள் அரசியல் பார்வை கொண்ட இயக்கங்களை கட்டி எழுப்பி வருகிறார்கள். அப்படி ஒன்றுதான் யங் பீப்பிள்ஸ் ஃபார் பாலிடிக்ஸ் .
அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்சொன்ன இளைஞர் இயக்கத்தின் மாநாடு நடைபெற்றது. நூலகத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. ஒய்பிபி இயக்கம், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்க கௌரவித்தது. விருது பெற்றவர்களும் இந்த வகையில் முதல் முறையாக விருதுகளை பெறுவதலால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
நிகழ்ச்சியில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தியாகராஜன், நர்த்தகி நடராஜ், பிரிட்டிஷ் ஹை கமிஷனர் ஆலிவ் பல்ஹாட்செட் ஆகியோர் பங்கேற்றனர். இதில், அமைச்சர் மனோ, தனது இளமைக்கால அரசியல் விஷயங்களை நினைவுகூர்ந்தார். கூடவே, கேரளா போல மாணவர்களை அரசியலுக்குள் ஈடுபடுத்தும் இயல்பு இங்கு உருவாகவில்லை அது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
ஒய்பிபி இயக்கத்திற்கான யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டது. இதில் பணிபுரிபவர்களுக்கான பயிறசியை பத்திரிகையாளர் சுசில் குமார், ஆவணப்பட இயக்குநர் அனுராக் சிங் ஆகியோர் அளித்தனர். அதிக நிதிவசதி, அமைப்புகளின் பின்புலமின்றி இந்த இளைஞர் இயக்கம் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. விருதுபெற்ற இளம் தலைவர்களில் சிலரைப் பார்ப்போம்.
சுமயா
இவரது பூர்வீகம் தூத்துக்குடியிலுள்ள காயல்பட்டினம். உணவு, கலாசாரம் சார்ந்து எழுதியும் இயங்கியும் வருகிறார். நான் உணவைச்சுற்றியுள்ள அரசியலில் ஈடுபட்டுள்ளேன். உணவு என்பது விரும்புவதை சாப்பிடும் வாய்ப்புகளை அளிப்பதில் உள்ளது. உயர்சாதிகள் தங்களுக்கான உணவு வாய்ப்புகளை கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தலித்துகள் என்ன சாப்பிடவேண்டும் என்ன செய்யவேண்டுமென கூறிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்துமே சாதியை மையமாக கொண்டே இந்தியாவில் நடைபெறுகிறது என ஆவேசமாகிறார் சுமயா.
யுவன் - சூழல் நீதி
கடல்புற பல்லுயிர்த்தன்மை பற்றி எழுதுவது, பேசுவது என செயல்பட்டு வருகிறார் யுவன். அண்மையில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பல்லுயிர் அறக்கட்டளை அமைப்பைத் தொடங்கியுள்ளார். நமது கல்வி, அரசியல் அமைப்பு சூழல், மனித மதிப்பு அடிப்படையில் அமைந்துள்ளது. நான் இளைஞர்களின் ஆற்றலை ஊக்கத்தை நம்புகிறேன். இதுதான் கலாசாரம், சமூகம், அரசியல் சார்ந்து செயல்படுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.
திலகவள்ளி - சட்டம்
எழுத்தாளர், கவிஞர், பெண்ணுரிமை செயல்பாட்டாளர், வழக்குரைஞர். திலகவள்ளி, அரசு பள்ளிகளில் பாலின பாகுபாடு, குழந்தைகளின் மீதான பாலியல் சீண்டல் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்கிறார். இளைஞர்களின் மனதில் பாலினம், நீதி பற்றிய கருத்துகளை எளிதாக விதைக்க முடியும். மாணவர்கள், மாணவிகள் என இருவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். நாம் வர்க்கம், சாதி ஆகியவற்றைப் பொறுத்து சமநிலையை உருவாக்க கடுமையாக பாடுபட வேண்டும்.
ஓவியர் - சாஜன்
சமூநீதிக்கான ஓவியத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறார் சாஜன். ஓவியத்தை தனது கருத்துக்களுக்கான இடமாக மாற்றி பலரையும் கவனிக்க வைத்துள்ளார் சாஜன். நமது சமூகம் பாகுபாடு கொண்டது. பல்வேறு விஷயங்களிலும் இங்கு பலருக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. இந்த நிலையைத் தான் நாம் கேள்வி கேட்கிறோம். கலை மக்களுக்காகவே என்ற நிலையில் நான் அதை அணுகுகிறேன். மக்களின் மனசாட்சியை உலுக்கும்படி படைப்புகளை உருவாக்க முயல்கிறேன்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கனிமொழி கபிலன்
https://www.instagram.com/youngpeopleforpolitics/?hl=en
கருத்துகள்
கருத்துரையிடுக