பணவீக்கத்தால் பசியில் படுக்கும் ஏழை குடும்பங்கள்!

 








பணவீக்கம் மார்ச் மாதத்தில் 7.68 சதவீதமாக உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் வட இந்தியாவில் ரொட்டியுடன் சாப்பிட காய்கறிகள் இல்லாமல் உப்பை மட்டும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வருகிறார்கள். இறைச்சி, பால், முட்டை என குழந்தைகளுக்குத் தேவையான எதையுமே அவர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழல் உள்ளது. 

பணவீக்கம் காரணமாக பருப்பு, காய்றிகளை மூன்று வேளை உணவில் ஒரே முறை சேர்த்துக்கொள்ளும் படி நிலைமை மாறிவிட்டது. மும்பையைச் சேர்ந்தவர் அஃப்சனா. இவர் தனது வீட்டுக்கு அருகில் இருந்த குழந்தைகளுக்கு ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார். இவரது கணவர் துணிக்கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். இருவரின் ஊதியமாக மாதம் 50 ஆயிரம் கிடைத்து வந்தது. அதை வைத்துத்தான் சேமிப்பையும் ஒரு லட்சம் வரையில் உயர்த்த முடிந்தது. இவர்களுக்கு மூன்று பெண்கள் உண்டு. 

மூன்று குழந்தைகளுக்கும் முதலில் கறி, காய்கறி, பால், முட்டை என கொடுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இடையில் குறுக்கிட்ட லாக்டௌன் காலம் இதுவரையிலான வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. அஃப்சனா சேர்த்து வைத்த சேமிப்புகள் காலியாகிவிட்டன. அடுத்து, அவரின் கணவருக்கு வேலை போய்விட்டது. அடுத்து அஃப்சனா ட்யூசன் சொல்லிக் கொடுத்திருந்தார். அந்த வேலையும் பறிபோனது. பிறகு அஃப்சனாவின் கணவர் பழங்களை விற்று வந்தார். அதையும் பின்னாளில் நிறுத்திவிட்டார். இப்போது அவர்களது உறவினர்கள் கொடுத்த கடனிலும் , பல்வேறு உதவிகளாலும்தான் வாழ்ந்து வருகிறார்கள். 

வீட்டு வேலைக்கு சென்றுவரும் பிரேம்லதாவின் நிலைமையும் இதுபோலத்தான். ஆனால் இவருக்கு அதிக உதவிகள் கிடைக்கவில்லை. இவருடைய கணவர் கட்டிட வேலைகளுக்கு செல்பவர். இருவரும் ஒருநாள் விட்டு ஒருநாள் உருளைக்கிழங்கை வாங்கி அவித்து ரொட்டியுடன் சாப்பிடுகிறார்கள். மீதி நாட்கள் வெறும் ரொட்டிதான். கிடைக்கும் பணத்தை வாங்கி ஒரு நாளுக்கு இரவில் மட்டும் ஏதேனும் சமைக்கிறார்கள். குழந்தைகளும் இருக்கிறார்கள் அல்லவா? இறைச்சி என்பதெல்லாம் எப்போது சாப்பிட்டோம் என்றே நினைவில்லை என்கிறார் பிரேம்லதா. குழந்தைகளுக்கு பால் வாங்க இவர் செலவிடுவது பத்து ரூபாய்தான். அதை வாங்கி நீரில் கலக்கி கொடுக்கிறார். அதில் சர்க்கரை கொடுக்கக் கூட முடியாத நிலை. 

பட்டினி ஆய்வு டிசம்பர் 2021 - ஜனவரி 2022 காலத்தில் நடத்தப்பட்டது. அதில், 79 சதவீத வீடுகளில் பட்டினி அளவு 25 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 41 சதவீத குடும்பங்களில் உணவு என்பது ஊட்டச்சத்து கொண்டதாக இல்லை என்பதும் வெளியாகியுள்ளது. 

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரசாத் பஸ்வான். இவர், அரிசி மூட்டைகளை தூக்கும் வேலையை செய்து வந்தார். வீட்டில் சாப்பிடு தானியங்களே இல்லாத நிலை. லாக்டௌனில் வேலை போய்விட, வீட்டில் இருக்கும் உணவை பிள்ளைக்கும் மனைவிக்கும் கொடுத்துவிட்டு உடல் நலிவுற்று சில மாதங்களில் இறந்து விட்டார். பொது விநியோக முறையில் கிடைக்கும் ரேஷன்தான் இவரது மனைவி, மகள் மஞ்சு தேவியைக் காப்பாற்றுகிறது. மஞ்சுதேவியின் அம்மா, ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அங்கு மிஞ்சும் உணவுதான் இவர்கள் இருவருக்குமே இரவு உணவாக இரண்டு ஆண்டுகளாக உள்ளது. இந்த நிலையில் ஊட்டச்சத்தை எங்கே எதிர்பார்ப்பது? 

உடல் மன ஆரோக்கியம் சீராக இருந்தால் மட்டுமே குழந்தைகளின் கல்வி, சமூக பங்களிப்பு என மற்ற விஷயங்களைப் பற்றி அரசு யோசிக்க முடியும். அரசு இந்த விவகாரத்தில் உணவு பாதுகாப்பு பற்றிய கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். 

டைம்ஸ் ஆஃப் இந்தியாய

ஹிமான்சி தவான் 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்