நோக்கத்தை தொலைத்தால் அவ்ளோதான்!

 






ஐரோப்பிய பாணி ஹூவெய் அலுவலகம், டாங்குவான் நகரம், சீனா









2019 படி படம் - LA Times





தொழிலைத் தொடங்குபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தொழில் முதலீடு என்பது பல்வேறு வாய்ப்புகளைக் காட்டும். இதில் சரியாக மனதை கட்டுப்படுத்தி செயல்படாதபோது சூதாட்டத்தில் இந்த முறை இந்தமுறை என அனைத்து பணத்தையும் சூதாடி தொலைப்பது போன்ற சூழல்தான் உருவாகும்.
 
இதைப்பற்றி ரென், நான் லாஸ் வேகாஸ் நகருக்கு செல்வேன். சூதாட்ட கிளப்புகளுக்கு சென்றால் கூட அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கவே செல்வேன். நான் சூதாடியது கிடையாது. அப்படி மனம் விரும்பினாலும் அதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று சொன்னார்.
 
சீனாவில் யூடிஸ்டார்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இருந்தது. அப்போது ஜப்பானில் நடைமுறையில் இருந்த பிஹெச்எஸ் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை வழங்கியது.சீனாவில் பிஹெச்எஸ் தொழில்நுட்பம் புதிது, போட்டி  நிறுவனங்கள் இல்லை ஆகிய காரணங்களால் நன்றாக இயங்கியது. ஆனால் ஆராய்ச்சி, புதுமை இல்லாத காரணத்தால் கிடைத்த லாபம் காலப்போக்கில் குறைந்து பத்தாண்டுகளுக்குள் நிறுவனம் நஷ்டத்தில் வீழ்ந்து மூடப்பட்டது.



 
சீனாவிற்கு பிஹெச்எஸ் வசதி தேவைப்பட்டபோது, அத்தொழில்நுட்பத்தில் உலக முன்னணி நிறுவனங்கள் எவையும் முதலீடு செய்ய விரும்பவில்லை. ஹூவெய்யும் கூட அதில் எதிர்கால வளர்ச்சி இல்லை என உறுதியாக நம்பியது. யூடிஸ்டார்காம் தன்னை மக்களின் தேவைக்கேற்ப மேம்படுத்திக்கொள்ளவில்லை. இதனால், 2005ஆம் ஆண்டு அதன் சந்தைப் பங்களிப்பு 60 சதவீதமாக குறைந்தது. பிறகு மெல்ல அதன் பங்களிப்பு தொலைத்தொடர்புத் துறையில் குறைந்து கொண்டே வந்தது. இறுதியாக 2007ஆம் ஆண்டில் அதன் தலைவர் வூ யிங் பதவி விலகியபோது யூடிஸ்டார்காம் நிறுவனத்தில் செய்வதற்கு ஏதும் மிஞ்சியிருக்கவில்லை.  இதனால்தான் மக்களை வணிகத்தில் முக்கியமாக நினைக்காத நிறுவனங்கள், சில ஆண்டுகளிலேயே அதிலிருந்து கீழே விழுந்துவிடுவார்கள். யூடிஸ்டார்காம், வூ யிங் என நிறுவனம், தலைவர் என இரண்டுமே அந்த காலங்களில் புகழ்பெற்றிருந்தனர். நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், பார்ச்சூன் 1000 பட்டியல் என பல்வேறு சாதனைகள் செய்தாலுமே கூட ஆராய்ச்சி இல்லாத காரணத்தால் நிறுவனத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
 
 
ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது பணம் சம்பாதிக்க என்று நினைப்பவர்கள் தொழில்துறையில் சாதிப்பது கடினம். மக்கள் சந்திக்கும் பிரச்னையை தொழில்முனைவோர் ஏதேனும் ஒரு வகையில் தீர்க்கிறார்கள். செய்யும் செயலை எளிமையாக்குகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களை மக்கள் நினைவு கொள்கிறார்கள். ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுள் என எந்த பெருநிறுவனங்களை வேண்டுமானாலும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உருவாக்கிய பொருள் என்பது எளிமையானதுதான்.
 
1994ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனம் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் தொலைபேசிகளுக்கான ஸ்விட்ச் அமைப்பை (C&C08) சுயமாக உருவாக்கியது. அதுவரை வெறும் வணிக நிறுவனமாக பிறரது பொருட்களைத்தான் வாங்கி விற்று வந்தது. ஸ்விட்ச் அமைப்பை உருவாக்கிய பிறகுதான் நிறுவனரான ரென், ஊழியர்கள் என அனைவருக்குமே சந்தையில் தாக்குப் பிடிப்போம் என்ற நம்பிக்கை பிறந்தது. எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் உழைப்பது என்பதை இப்படித்தான் ரென் ஊழியர்களுக்கு கற்றுக்கொடுத்தார். எங்களது செயல்பாடு என்பது பணத்தை மட்டும் கருத்தில் கொண்டதல்ல. நாங்கள் மனிதநேயத்தை முக்கியமானதாக நினைக்கிறோம் என ஒரு நேர்காணலில் பெருமையாக கூறுகிறார்.
 
ஹூவெய் தயாரிக்கும் பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு விற்க சந்தை நிர்பந்தம் இருந்தது. அப்போதும் அவர்கள் தரத்தை, மக்களை நம்பினார்கள். இதனால் ஹூவெய்யின் பொருட்கள் தரமாக இருக்கும், நாம் கொடுப்பது சரியான விலை என மக்களை நம்பவைத்தது ஹூவெய்யின் சாதனைதான். இதற்கு அவர்கள் பல்லாண்டுகளாக உழைத்துள்ளனர். ஹூவெய் நிறுவனம் நகரங்களை அல்ல கிராமங்களை அங்கு வாழும் மக்களை முதன்மையாக கருதுகிறது. எனவே, தொலைத்தொடர்பு சாதனங்கள் பழுதுபட்டால், இயற்கை பேரிடரால் உடைந்துபோனால் அதை சரிசெய்ய பெரும் அக்கறையை ஹூவெய் நிறுவன ஊழியர்கள், பொறியாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
 
இன்றைக்கு உலகளவில் ஆராய்ச்சிக்கு அதிகளவில் செலவு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஹூவெய் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிராண்ட் மதிப்பில் 9 வது இடம். இதன் வர்த்தக மதிப்பு 71.2 பில்லியன் டாலர்கள் (2022 மார்ச் படி) ஹூவெய் தொடக்க காலத்தில் தயாரித்த டெக் பொருட்கள் விலை குறைவானவை. தரம் குறைந்தவை. ஆனால் சிறந்த வாடிக்கையாளர் சேவை என பாரட்டப்பட்டவை. பின்னாளில் வாடிக்கையாளர் சேவை என்ற அம்சத்தை கைவிடாமல் தரத்தை மேம்படுத்தி வாடிக்கையாளர்களை இன்றுவரை ஈர்த்து வருகிறது. மார்ச் 2022ஆம் ஆண்டில் வெளியிட்ட ஹூவெய் மேட் எக்ஸ் எஸ் 2 என்ற போன் வெளியீட்டிலும் பல்வேறு புதிய அம்சங்களை பற்றி பேசும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கொரிய நிறுவனமான சாம்சங்கை எதிர்த்து பொருட்களை விற்பது என்றால் சும்மாயில்லை அல்லவா?  வாடிக்கையாளர்தான் ராஜா என்றால் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கே கூட கோபம் வரலாம். ரென் அதுதான் அனைத்துக்கே அடிப்படை என்ற எண்ணம் கொண்டவர். அப்படித்தான் ஹூவெய் வாடிக்கையாளர் சேவைத்துறை செயல்படுகிறது.
 
பெய்ஜிங்கில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் ஜெர்மனி வீரர் நோமி ருஸ்டாவா(Noemi rustau) பங்கேற்றார். பார்வைத்திறன் குறைபாடுள்ளவர். இவருக்கு வழியை இவரது வழிகாட்டி தனி மையம் ஒன்றில் அமர்ந்து கூறினார். இதற்கு ஹூவெய்யின் 5 ஜி தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் உதவியது. இதன்படி நோமியின் ஹெல்மெட்டில் ஸ்மார்ட்போன் பொருத்தப்பட அவர் செல்லும்படி இணையம் மூலம் மையத்தில் உள்ள வழிகாட்டிக்கு தெரிய, அவர் குரலால் வழிகாட்ட நோமி பனிச்சறுக்கை வெற்றிகரமாக விளையாண்டு வென்றார்.  ஹூவெய் தனது தொழில்நுட்பங்களை எளிய மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவே முயல்கிறது.
 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்