மயிலாப்பூர் டைம்ஸ் - பொறுப்பு ஏத்துக்கோங்க!

 













மயிலாப்பூர் டைம்ஸ் 


பொறுப்பு ஏத்துக்கோங்க!


எங்கள் அலுவலகத்தில் சக உதவியாசிரியர்களை அடக்கி ஒடுக்க புதிய அதிகாரி ஒருவர் வந்தார். இவரது தீர்மானப்படி அலுவலகமே, மிலிடரில அகாடமிபோல செயல்பட வேண்டும். அனைத்து முடிவுகளையும் அவர் தான் எடுக்கவேண்டும். அலுவலகத்தில் தூங்கும் நேரம், வாட்ஸ் அப்பில் பிறர் மீது புகார்களை அனுப்பும் நேரம் தவிர மீதி நேரம் இருக்குமே? என்ன செய்வது? உதவி ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பற்றி செமினார் போல பேசிக்கொண்டிருப்பார். ஆனால் அவர் கட்டுரை திருத்துவதில் செய்த தவறு பிறருக்கு தெரிய வந்து கேட்டால், அமைதியாகிவிடுவார். அப்போது அவரது முகத்தை பார்க்கவேண்டுமே? 

கல்லே கூட முகத்தைப் பார்த்தால் கரைந்துவிடும். இவரது குண வழக்கங்களைப் பார்த்த மூத்த உதவி ஆசிரியர் சிம்பிளாக ஒரு வாக்கியத்தை சொன்னார். மேல இருக்கிறவன நக்கணும். கீழ இருக்கிறவனை எத்தணும். அதுதான் அவன் குணம் என்று சொல்லிவிட்டார். 

ராயப்பேட்டையில் பெரும்பாலும் பிரியாணி சாப்பிட வாங்க என்று அழைக்கும் உணவகங்கள் தான் அதிகம். அதையும் மீறி ஏதாவது உணவகம் இருக்கிறது என்றால் அது, கேரள சேட்டனின் மெஸ், அடுத்து கணேஷ் டிபன் சென்டர். கேரள சேட்டனின் கடையில் இரண்டு டேபிள்கள் உண்டு. அதில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு  எட்டுபேர் உட்காரலாம். சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட்டு எழுவது கஷ்டம். தேவனுக்கே மகிமை என்று சொல்லி பிரார்த்தனை செய்துவிட்டுதான் சாப்பிட செல்லவேண்டும். இடம் கட்டை என்பதால் பிரார்த்தனைக்கு பெரிய பிரயோஜனம் இருக்காது. 

கணேஷ் பவனைப் பொறுத்தவரை அரசு நிறுவனங்களைப் போலத்தான். அலுவலக கேபினில் அரசு ஊழியர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மக்கள் லைனில் கூட்டமாக நிற்பார்கள். அதுபோலத்தான் இங்கு சாப்பிட வருபவர்களும், பார்சல் வாங்க வருபவர்களும். 

கடையில் மூன்று பேர் இருப்பார்கள். ஆனால் யார் என்ன வேலை செய்யவேண்டும் என பேசாமல் வேலை செய்வார்கள். இதனால், என்ன வேலையை யார் செய்கிறார்கள் என்பதே தெரியாது. டீ மாஸ்டர், பாலை கொதிக்க வைத்துவிட்டு, உள்ளே போய் பாலிதீன் கவர்களை சோதித்துக் கொண்டிருப்பார். வடை, போண்டா போடுபவர், முன்னே நிற்காமல் சட்னி கட்டிக்கொண்டிருப்பார். பார்சல் கட்டுபவர், வேலை செய்வார். யாருக்காக அதை செய்கிறார் என்பது இங்கே ஆர்டர் கொடுத்தவர்களுக்கே தெரியாது. இதற்கிடையில் இந்த மூவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயம் இதல்ல. இந்த ஹோட்டல் விவகாரம் கான்ஷியஸ் பற்றியது. அதை தனி கட்டுரையாக எழுத வேண்டியுள்ளது.

திருவிக நெடுஞ்சாலையில் அப்படியே நடந்து போனால், பிஎஃப் ஆபிசைக் கடந்து சென்றால் வந்து ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வரும். அதற்கு எதிர்ப்புறம் ராஜ் பவன் என்ற ஹோட்டல் இருக்கும். ஹோட்டல் ஓனர் சாப்பாட்டிற்கு மதியம் என்று சென்றால் எண்பது ரூபாய் டோக்கனை கிழித்து நம் முன் தள்ளிவிடுவார்.

 நூறு ரூபாயைக் கொடுத்தால் பத்துரூபாய் மட்டுமே சில்லறை கொடுக்கிறாரா அல்லது இருபது ரூபாயாக கொடுக்கிறாரா என்பது அன்றைய அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. காசையும் நம் முகம் முன்னே விசிறிப்போடுவார். துறவி மனநிலையில் இருக்கிறார் போல என நினைத்துக்கொண்டு கை கழுவ போகலாம். அப்படிப் போகும்போதுதான், சுவரில் நோட்டீஸ் ஓட்டப்பட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்களின் பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. அதை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லியிருந்தனர். சோற்றில் ஊற்றிய ரசம் கீழே வராமல் பாத்தி கட்டுவதா அல்லது நாம் கொண்டு வந்த பொருட்களை பார்த்துக்கொண்டு இருப்பதா? 

ஒரு ஹோட்டலுக்கு உள்ளே வந்தாலே இரண்டு கேமராக்கள் நம்மை பதிவு செய்து விடுகிறது. அதைத்தாண்டி சூட்கேஸ், கட்டைப்பை என கையில் வைத்திருந்தால் கூட சாப்பிடும் நேரம் வரையில் ஹோட்டல்காரர்கள் பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்ன?

இன்று இந்த பொறுப்புத்துறப்பு டிவி சேனல்கள் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் தொற்றுநோய் போல பரவுகிறது. உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணியுங்கள். ஆனால் அப்படி பயணிக்கும் நேரம் நீங்கள்தான் திருடர்கள், கொள்ளையர்கள், பிச்சை கேட்கும் எல்ஜிபிடியினர் ஆகியோரிடம் சர்வஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என கூறுவது. லோக்கல் ரயில் நிலையங்களில் இதை நோட்டீசாகவே அடித்து ஒட்டிவிட்டனர். இவர்களின் பொறுப்புத்துறப்பு பந்தாவிற்கு அங்கு காவலர்கள் வேறு சீருடையில் இருப்பார்கள். என்ன சொல்ல வருகிறார்கள்?  நேரடியான பொருள் இதுதான். உங்கள் சட்டப்பையில் உள்ள காசு எனக்கு தேவை. ஆனால் நீங்கள் தேவையில்லை. நீங்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைதான் இது. 

இதேபோல இன்னொரு சம்பவத்தை சொல்லவேண்டியிருக்கிறது. அண்மையில் ஆழ்வார்பேட்டையில் சின்னிஸ் என்ற கடையில் ஷர்ட் ஒன்றை வாங்க நினைத்து ஆன்லைனில் பார்த்துவிட்டு போனேன். கோயம்புத்தூர் ஆட்கள்தான் ஓனர்கள். கடையில் பார்த்தால், இருவர் உட்கார்ந்திருந்தார்கள். வேறு யாரும் இல்லை. உடைகள் அனைத்துமே 1499 ஒன்லி தான். ஆழ்வார்பேட்டையில் இருப்பவர்களுக்கு ஒத்து வரும் பட்ஜெட்தான். ஆனால் எனக்கு துணியின் குவாலிட்டியும் அதற்கான விலையும் மேட்ச் ஆகவில்லை. பிறகு சிரமப்பட்டு நீலநிறச்சட்டை ஒன்றை எடுத்தேன். பிற இடங்களில் 40 என்றால் இந்தக்கடையில் 42 எடுத்தால் உடலுக்கு சரியாக இருந்தது. என்ன அளவுகோல் என்றே புரியவில்லை. 

இறுதியில் பில் போடும்போது, ஆதார் கார்ட்டைக் கொடுத்துவிடலாம் போல என்று நினைக்கும்படி தகவல்களைக் கேட்டனர். 1050க்கு ஷர்ட்டை வாங்கினேன். பில்லில் பார்த்தால், நிறம், மணம், திடம் என எந்த பிரச்னை வந்தாலும் எங்களுக்கு பொறுப்பில்லை என்று போட்டிருந்தது. இத்தனைக்கும் விற்ற துணி சின்னிஸ் என்ற நிறுவனத்தில் தயாரானது. அவர்களுக்கே அவர்களது துணி மீது நம்பிக்கை இல்லை என்றுதான் நினைக்கவேண்டும். அந்தளவு பயம் இருக்கிறது. சிறந்து பொறுப்பு துறப்பு என சின்னிஸ் கம்பெனியைத் தான் சொல்லவேண்டும். விலைக்கு கீழேயே பாதுகாப்பாக தங்களை காப்பாற்றிக்கொள்ள நான்கைந்து நிபந்தனைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை ஒரு போர்டில் எழுதி கடை முன்னாடி வைத்துவிட்டால், மக்களுக்கும் உதவியாக இருக்கும். இப்படிப்பட்ட கடைக்கு அவர்கள் எதற்கு வரவேண்டும்? 

பிறரை ஏமாற்றுவதை முறைப்படி எழுத்துப்பூர்வமாக பிரிட்டிஷார் போலவே செய்கிறார்கள். வாழ்த்துகள் சீக்கிரமே முன்னேறி ஊரை விட்டு போய்விடுவீர்கள். 











கருத்துகள்