மயிலாப்பூர் டைம்ஸ்! - குடியால் கெட்ட வேலு சித்தப்பாவின் வாழ்க்கை!

 

மயிலாப்பூர் டைம்ஸ்

எதிர்பாராத மரணம்


இதோ  இன்று காலையில்தான் அம்மாவிடம் பேசினேன். அவள் எப்போதும், தனக்கு நேர்ந்த அனுபவங்களை துல்லியமாக காட்சிப்பூர்வமாக விவரிப்பாள். தூங்கி எழுந்தபோது எப்படியிருந்தது, முகத்தின் இடது கண் எப்படி கண்ணாடியில் தெரிந்தது, இடதுகாலை எடுத்து வைக்கும்போது வீட்டின் தரை குளிர்ந்திருந்தது வரையில் சொல்லுவாள். ஆனால் இறப்பு என்பது யாரையும் மருட்டுவதுதான். இறப்புச்செய்தியை சொல்லும்போது, குரலில் ஆழ்ந்த அமைதி எப்படி பூக்கிறது என்று ஆய்வுதான் செய்யவேண்டும். 

அவள் சொன்னது வேலுச்சித்தப்பாவின் இறப்புச்செய்தியை. வேலு சித்தப்பாவைப் பொறுத்தவரை, அவருக்கு வாழ்க்கையில் மது பாட்டில்தான் எல்லாமே என்று ஆகி வெகுகாலமாகிவிட்டது. திருமணமாகி மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே, அடித்து துரத்திவிட்டார். அவர் மனைவியும் தாய் வீட்டுக்கு சீராட்டு போய்விட்டார். இன்று அவரது மகனுக்கு 11 வயது. வேலை செய்வதே குடிப்பதற்குத்தான் என்று சொல்லுமளவு குடிநோயாளியாகிவிட்டார். இவருக்கு நேர்ந்த இறப்பை இங்கு பதிவிடும்போது, படிக்கும் ஒருவருக்கு என்ன தோன்றும்? 

சிரோசிஸ். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோய்விட்டார் என தோன்றும். அதுதான் இல்லை. ஆப்பிளால் மரணத்தை தழுவியிருக்கிறார். குடி என்பது அவரது தினசரி ஆகிவிட்ட காலத்தில் அதை குற்றம் சொல்ல முடியுமா? குடி நோயாளிகளான மது பிரியர்கள் எல்லோருமே என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள். 

இரவில் உணவுடன் மது அருந்திவிட்டு வீடு வந்திருக்கிறார்.அவர் நாங்கள் வசிக்கும் வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் தான் வசிக்கிறார். பக்கத்தில் உள்ள ஐஸ் பேக்டரி தான் அடையாளம். லட்சுமி மங்கலம் என்பதுதான் அதன் பெயர். அப்போது ஐஸ் பேக்டரியின் பிராண்ட் பெயர் என்ன?  கமான் நண்பர்களே மூளைக்கு வேலை கொடுங்க. ஆம் லஷ்மி தான். கரெக்ட்டாக கண்டுபிடிச்சுட்டீங்க. 

இரவில் அருந்திய மது வயிற்றை அரிக்க, வாங்கி வைத்த ஆப்பிளை எடுத்து அகோர பசியுடன் கடித்து விழுந்திருக்கிறார். அதையும், நாய் கறித்துண்டுகளை கிடைச்சிருச்சேய் என ஆர்வத்துடன் விழுங்குவது போல விழுங்க, ஆப்பிள் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டு விட்டது. இதனால் மூச்சுவிடுவது நின்றுபோய், கண்கள் செருக, நிலைதடுமாறி வீட்டின் வாசல் அருகே விழுந்துவிட்டார். 108 ஆம்புலன்ஸ் நகர்ப்புறங்களுக்கு ஓகே. ஆனால் கிராம புறங்களில் அவர்கள் வந்து சேர்ந்து நோயுற்றவரை தூக்கிச்செல்லும்போதே அது அமரர் ஊர்தியாகிவிடுகிறது. நிதானமாக வழி தேடி வருவார்கள். 

அருகில் வசித்த கவுண்டர் வீட்டு பெண்மணிதான், வேலுச்சித்தப்பாவின் நிலையைப் பார்த்து, காப்பாற்ற நினைத்திருக்கிறார். ஆனால், மூச்சு சரிவர இயங்காமல் போக என்னாகும்? மூளைக்கு செல்லும் ரத்தம், ஆக்சிஜன் சரிவரக் கிடைக்கவில்லை. எனவே, வீட்டின் வாசலிலேயே அவரது உயிர் ஏறத்தாழ போய்விட்டது. நோயாளியை விபத்தில் காப்பாற்றும் கோல்டன் ஹவர் என்ற தியரி எடுபடவில்லை. விடைபெற்றுச் சென்றுவிட்டார் வேலு சித்தப்பா. 

எப்போதும் துடிப்பாக வேலை செய்வார். பேசுவதும் அப்படித்தான். கோபமாக பேசுவது போலத்தான் இருக்கும். மனதில் பட்டதை பேசுவார். நானும் அவரும் நேருக்கு நேராக பேசியது மிக குறைவு. அவரது வாழ்க்கையும் எனது வாழ்கைகயும் வேறு வேறானது. 

வேலுச்சித்தப்பா, தான் என்ற எண்ணத்தில் தீவிரம் கொண்டவர். அந்த ஈகோ அவரது வாழ்க்கை சிதைந்து போக காரணமாக இருந்தது. சித்தி நிறைய விஷயங்களை சமாளித்து போக முயன்றிருக்கிறார். தைரியசாலி. சித்தப்பாவின் டிவிஎஸ் 50 துடியான வண்டி. ஒருமுறை சித்தியை வைத்து ஓட்டியபோது என்னால் அதன்  வேகத்தை சமாளிக்க முடியவில்லை. எனவே, சித்தியை  ஓட்டச்சொன்னேன். அவர் பிரமாதமாக ஓட்டினார். அவர் தான் ஓட்டினார் என்று நான் சித்தப்பாவிடம் சொல்லவில்லை. அது அவருக்கு பிடிக்காது. மனைவியை எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் நடத்தவேண்டுமென எங்கு கற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. கடைசி வரையில் அவரது திருமண வாழ்க்கை எஜமான், அடிமை போலத்தான் இருந்தது. 

குடிப்பழக்கம் என்பது கிராம மனிதர்களைப் பொறுத்தவரை வருமானத்தை அழித்துவிடுகிறது. இதை சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு கோபம் வரும். சித்தியும் பொறுத்துப் பார்த்தார். ஆனால் உடல் அளவிலான வன்முறை அவரை வெறுத்துப்போக செய்ய தனியாக பிரிந்து சென்று வாழ்ந்தார்.. வாழ்கிறார். சித்தப்பாவின் இறப்பில், அவரது மனம் என்ன நினைத்துக்கொண்டிருக்கும் என யோசிக்கிறேன். விடுதலையான உணர்வா, ஏதுமற்ற வெறுமையா எனக்கு உண்மையாக தெரியவில்லை. 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்