ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.
பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ராஜதந்திரமாகுமா என்ன? அப்படித்தான் அல்காடெல்லுடன் இணைந்த லூசென்ட் நிறுவனத்தின் இணைவும் படுமோசமான தோல்வியானது. இது புதிதல்ல.
1928ஆம் ஆண்டு மோட்டரோலா நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் முதன்முதலாக செல்போன் என்பதைக் கண்டுபிடித்தது. ஆனால் இன்று மோட்டரோலாவை எங்கே என லென்ஸ் வைத்து தேட வேண்டியதாக இருக்கிறது. மேற்சொன்ன லூசென்ட், மோட்டரோலா என இரண்டு நிறுவனங்கள் காணாமல் போனதிலும் அதன் நோக்கத்தைத் தான் கூற வேண்டியுள்ளது. பெல் லேப்ஸ் பல்வேறு ஆய்வுகளை செய்து வந்தது உண்மை. அதன் வழியில் அதற்கு நிறைய வெற்றி, புகழ் கிடைத்தது. லூசென்ட், வருமானம் கிடைக்கும் ஆய்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தது. அதுதான் நீண்டகால நோக்கில் அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை அளித்தது.
ஹூவெய் நிறுவனம், 2000லிலேயே வெளிநாடுகளில் ஆர்டர்களை தேடத் தொடங்கிவிட்டது. அங்கு, கட்டுமானங்களை சேதப்படுத்தாமல் ஆன்டெனாக்களை, கோபுரங்களை அமைத்து தர முயன்றது. தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் 2005ஆம் ஆண்டு தொடங்கி சிறப்பாக செயல்படத் தொடங்கிவிட்டது. சாதனையின் மகுடமாக ஹூவெய் நிறுவனம் எவரெஸ்ட் சிகரத்தில் கூட தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இதனால், அங்கு தகவல் தொடர்பு வசதி எளிதாகியுள்ளது. உயரமான இடத்தில் இருந்தாலும் கூட தொலைத்தொடர்பு சேவை கிடைக்காமல் தடுமாறிய மக்கள் எளிதாக பிறருடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அதற்கு காரணம், தான் என்ன செய்கிறோம், யார் இலக்கு என்பதை ஹூவெய் தெளிவாக அறிந்துள்ளதுதான் காரணம். இதனால் விருது, முன்னணி நிறுவனம் என்ற பட்டியலில் ஹூவெய் பெரும்பாலும் இடம்பெறாது. ஆனால் தங்களது செயல்பாட்டில் பின்வாங்காமல் நிதானமாக முன்னேற முடிகிறது. அதைத்தான் முக்கியமாக ஹூவெய் நினைக்கிறது.
ஹூவெய் தொலைத்தொடர்பு சேவைகளில் வருமானம் சம்பாதித்து வந்தது. ஆனால் அதற்கென உள்ள மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் அந்தளவு தரமாக இல்லை. மக்களும் அதனை விரும்பவில்லை. உண்மையை அறிந்தபிறகு சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? இதனை அப்பிரிவு தலைவர் யூ செங்டாங் மாற்றியமைத்தார். அப்படித்தான் ஹூவெய் ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டன. இதனால் அவர்களின் ஸ்டோர்களைத் தேடி மக்கள் வரத் தொடங்கினார். ”நாங்கள் எப்படி இருந்தோம் என்ற நிலையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இன்னும் பெட்டராக, தரமாக மாற்ற முடியுமா என பல்வேறு ஐடியாக்களை தேடிக்கொண்டிருந்தோம். நாங்கள் இன்றுவரை அப்படித்தான் உழைக்கிறோம்” என செங்டாங் நேர்காணலில் கூறியிருக்கிறார். அது பொய்யல்ல என்பது ஹூவெய்யின் வளர்ச்சியில் தெரிகிறது.
ஹூவெய் பிராண்ட் சற்று ப்ரீமியமான தரத்தில் விலையும் கொண்டது. அதற்கு சற்று விலை குறைவாக உள்ள பிராண்ட் தான் ஹானர். இந்த போன்களை பலரும் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஹூவாய் நிறுவனத்திற்கு பெங்களூருவில் கூட ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு 700க்கும் அதிகமான பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள். முதலிலேயே கூறியது போல தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஆராய்ச்சிக்காகவே ஹூவெய் நிறுவனம் செலவு செய்கிறது. அதுதான் பிற நிறுவனங்களின் தோல்விக்கும், அழிவுக்கும் ஹூவெயின் வளர்ச்சிக்கும் முக்கியமான காரணம். நமது அடிப்படை நோக்கத்திலிருந்து எப்போதும் பிறழ்ந்துவிடக் கூடாது.
எரிக்ஸன், நோக்கியா, சீமென்ஸ் ஆகிய பெரு நிறுவனங்களுக்கு போட்டியாக ஹூவெய் உருவாகி நிற்பதே அதன் வெற்றி தான். தொலைத்தொடர்பு துறையைப் பொறுத்தவரை ஆராய்ச்சியும் நோக்கத்தில் பிறழ்ந்துவிடாமல் இருப்பதும் முக்கியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக