தனது வாழ்க்கையை அழித்த தொழிலதிபரை பழிவாங்கும் மருத்துவரின் கதை! - டாக்டர் ப்ரீஸனர் 2019

 









டாக்டர் ப்ரீஸனர்
2019
தென்கொரிய டிவி தொடர்


நா யீ ஜே என்ற மருத்துவர், தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை எமர்ஜென்சி பிரிவு மருத்துவராக இருந்து காப்பாற்றுகிறார். இதன் விளைவாக, அவரது வேலை பறிபோகிறது. மருத்துவர் உரிமம் தடை செய்யப்பட சிறைக்குச் செல்கிறார்.  அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அவரது அம்மா, கைவிடப்பட்ட நிலையில் இறக்கிறார். மருத்துவர் அரசியலால் பாதிக்கப்பட, மெல்ல அவரும் செல்வாக்கான ஆட்களின் உதவியைப் பெற்று தனது வாழ்க்கையை அழித்தவர்களை பழிவாங்கத் தொடங்க ஆட்டம் ஆரம்பம். அதுதான் டிவி தொடரின் பதினாறு எபிசோடுகள். 

தொடர் புனைவு என்றாலும் தென்கொரியா முழுக்கவே சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால்தான் இருக்கிறது என காட்டுகிறார்கள். இது எந்தளவு நம்பகத்தன்மையானது என்று தெரியவில்லை. 

எமர்ஜென்சி ஸ்பெஷலிஸ்டான நா யீ ஜே, தனது வாழ்க்கை அழிய காரணமான லீ ஜே ஜூன், வெஸ்டர்ன் சியோல் சிறை மருத்துவர் ஜூன் மின் சிக் ஆகியோரை எப்படி பழிவாங்கி ஓட ஓட விரட்டுகிறார் என்பதே கதை. 





தொடரில் நீதி நேர்மை என்பதெல்லாம் நா யீ ஜே, எமர்ஜென்சி மருத்துவராக இருக்கும் வரைதான். மாற்றுத்திறனாளியை டேகான் நிறுவன கடைசி வாரிசு ஈகோ வெறியோடு தாக்க, அவர் சாலையிலேயே குற்றுயிரும் குலையுயிருமாக மாறுகிறார். மருத்துவமனைக்கு கொண்டு வந்த சிறிது நேரத்தில் இறந்துபோகிறார். அவரது மனைவியும் வயிற்றில் குழந்தையோடு காப்பாற்ற முடியாத சூழலில் அறுவை சிகிச்சை மேசையில் இறக்கிறார். இது நா யீ ஜேவை மனச்சோர்வில் தள்ளுகிறது. 

இந்த நேரத்தில் அவரை அரசியல்வாதி ஒருவரின் போலியான மருத்துவ அறிக்கையில் கையெழுத்து போடச்சொல்லுகிறார்கள். இதற்கு விலையாக அவரது அம்மாவுக்கு இலவச அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் ஆசை காட்டுகிறார்கள். நா யீ  ஜே அந்த டீலை வாய் பேச முடியாத அம்மாவுக்காக ஏற்கிறார். அந்த தவறாலும், பணக்காரனை பகைத்துக்கொண்டதற்காகவும் சிறை செல்ல நேருகிறது.  

அரசியல்வாதிகளையும் , பணக்காரர்களையும் இனி மிச்சம் வைக்கக்கூடாது அவர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொள்கிறார். இதற்காக நேர்மை என்பதை தனது நெஞ்சுக்கான நீதி என வகுத்துக்கொண்டு சில பணக்கார ர்களுக்கு  சிறையில் இருந்து வெளியே வர உதவுகிறார். அதனால் அவர்கள் பதிலுக்கு நா யீ ஜேவுக்கு பல்வேறு உதவிகளை செய்கிறார்கள்.  அதில் முக்கியமானவர் மிஸ் ஓ. 

தென்கொரிய நடிகர் நாம் கூங் மின், நா யீ ஜே பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நேர்மையாக இருந்து அரசியலால் பாதிக்கப்பட்டு பிறகு, வெறிகொண்டு திட்டம் போட்டு பழிவாங்கும் நாயகன் இவர்தான். டிவி தொடரில் ஒரு இடத்தில் உடைந்து போகிறார். அது தனது வேலை பறிபோய் சிறைக்கு செல்ல காரணமான டேகான் கடைசி வாரிசுவை காப்பாற்ற முயன்று போகும் காட்சி. மற்றபடி அனைத்து காட்சிகளிலும் காலடியில் பூமியே நழுவினாலும் தோல்வி மேல் தோல்வி வந்தாலும் மென்மையாக தும்பைப் பூ போல சிரித்துக்கொண்டே மனதிற்குள் திட்டம் தீட்டும் வன்மமான பாத்திரம்.




இதற்கு அடுத்து தொடக்கத்தில் நா யீ ஜேவுடன் மோதி, சில வெற்றிகள் பெறும் சிறை மருத்துவர் டைரக்டர்  மின் சிக். தொடக்கத்தில் தந்திரமான புத்திசாலி என்பதுபோல காட்டிவிட்டு பிறகு தொடர் முடியும்போது படு முட்டாளாக மாற்றிவிடுகிறார்கள். அந்த நேரத்தில் மின் சிக்கிற்கு கதையிலும் வேறு வழியில்லை. அவரது மருத்துவமனையை நா யி ஜே எழுதி வாங்கி அதை தர்ம வைத்திய சாலையாக மாற்றுகிறார். இதற்கு மிஸ் ஓ உதவுகிறார். குடும்ப சொத்தான மருத்துவமனை போய், சிறை மருத்துவ இயக்குநர் பதவியும் போய் விட நா யீ ஜே என்ன சொன்னாலும் செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார். மனநிலையை பிறர் புரிந்துகொள்ள முடியாதபடி மென்மையாக சிரித்தபடியே பிறரின் கழுத்தை நெரிக்கும் கிம் பியூங் சுல்லின் நடிப்பு அபாரமானது. 

தொடரின் மெயின் வில்லன் தான் அனைத்திற்கும் உச்சம். சோய் வான் யங் நடித்திருக்கிறார். இவர்தான் டாக்டர் ஜான் என்ற கொரிய தொடரில் அரசு வழக்குரைஞராக வந்து ஜானுக்கு தொந்தரவு கொடுப்பார். 

இதில் தொடர் முழுக்க அனைத்து சம்பவங்களிலும் இவர்தான் இயக்குபவராக இருக்கிறார். மரபணு நோயால் பாதிக்கபட்டு வேதனையிலும் வலியிலும் துடித்தபடி தனது உதவியாளர் சோய் மூலம் அனைத்து நிழல் காரியங்களை செய்தபடி நிதானமாக உணர்வுகளைக் கட்டுப்படுத்தியபடி நடித்திருக்கிறார். தொடரின் இறுதியில்தான் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதபடி மாறுகிறார். மற்றபடி அமைதியாக அனைத்து விஷயங்களையும் செய்துபோய்க்கொண்டே இருக்கிறார் எல்லாம் டேகான் குழுமத்தின் தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளத்தான். 

தொடரில் மருத்துவம் என்பது முக்கியமான ஒருவரின் கொலை நடக்க காரணமாக இருக்கிறது என்பதால், முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி தொடர் முழுக்க அரசியல்தான் நிறைந்திருக்கிறது. தொடரில் வருபவர்கள் அனைவருமே உனக்கு நான் இதை செய்தால் அண்ணனுக்கு நீ என்ன செய்வ? என பேரம் பேசித்தான் அனைத்தையுமே செய்கிறார்கள். இதில் விதிவிலக்காக இருப்பது அரசு வழக்குரைஞர் மட்டும்தான். தொடரில் அவரும், நா யீ ஜே மட்டும்தான் தங்களது நீதிக்கான போட்டியில் நிறைய விஷயங்களை இழக்கிறார்கள். உறுதியாக நின்று வெல்கிறார்கள். 

பழிக்குப்பழி கதை. அதையே டாக்டர் தன் புத்திசாலித்தனத்தால் செய்தால்.... 

கோமாளிமேடை டீம் 

 தொடரைக் காண 

https://www.mxplayer.in/show/watch-doctor-prisoner-tamil-dubbed

 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்