மகளை குழுவாக வல்லுறவு செய்தவர்களை நீதியின் முன்னே நிறுத்திய பாந்த் சிங்! - துணிவின் பாடகன் - தமிழில் கமலாலயன்
துணிவின் பாடகன்
பாந்த்சிங்
நிருபமா தத்
தமிழில் கமலாலயன்
காம்ரேட் டாக்கீஸ்
மார்க்சிய லெனினிய கட்சியைச் சேர்ந்த பாந்த் சிங், இரண்டு கைகளையும் ஒரு காலையும் ஜாட் சாதி வெறியர்களால் இழந்தவர். அதற்கு முன்னரே அவரது மகள் ஆதி திராவிட பெண்மணியின் உதவியால் இரு ஜாட் இனத்தவரால் பாலியல் குழு வன்புணர்வு செய்யப்பட்டவர். அதற்காக அந்த பெண் நடத்திய சட்டப்போராட்டம், கிடைத்த நீதி, அதற்குப் பிறகு அதன் விளைவாக பாந்த்சிங் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்பட்டது எல்லாம் வேதனையான சம்பவங்கள்.
இந்த நூல் நேரடியாக பாந்த் சிங் என்பவருடைய வரலாற்றைப் பற்றி சொல்லவில்லை. கடுகு பூக்கள் பூத்த வயல் என்று காட்சி வர்ணனை தொடங்கும்போதே மனதிற்குள் ஏனோ சோக உணர்வு ஏற்படுகிறது. இது அந்த காட்சி காரணமாகவா, பாந்த்சிங்கின் வாழ்க்கையை நினைத்தா என்று தெரியவில்லை. நிருபமா தத் பல்வேறு கிராம்ங்களுக்கு சென்று மஹ்ஜாபி சீக்கியர்கள் எப்படி ஜாட் சாதிவெறியர்களால் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் வீட்டிலுள்ள வயது வந்த பெண்களை வல்லுறவு செய்வது அங்கு சமூக அங்கீகாரமாக உள்ளது. ஆதி திராவிட பெண்ணை வல்லுறவு செய்துவிட்டு அதற்கு பரிகாரமாக தீட்டு கழிய பிராமணப் பெண்ணுடன் உறவு கொள்வது எனும் பழக்கம் உள்ளது உண்மையில் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. இத்தகைய சூழ்நிலை நேரடியாகவே நூலாசிரியர் அனுபவிக்கும் அளவுக்கு பஞ்சாப் கிராமச்சூழல் உள்ளது.
இந்த நூல் நிச்சயம் இந்தியர்கள் மறக்க நினைக்கும் கொடுங்கனவாகவே இருக்கும். அந்தளவு யதார்த்தமாக நிறைய நுணுக்கங்களுடன் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக பாந்ந்சிங்கை காப்பாற்றும் உயர்சாதி நண்பர், அவரை ஓயாது ஏழை விவசாயி என்று கூறிக்கொண்டே இருக்கும் நிகழ்ச்சி, ஆதி திராவிடர் என்பதால் குற்றுயிரான நிலையிலும் கூட அவருக்கு சிகிச்சை தராமல் அதற்கு லஞ்சம் கேட்கும் மருத்துவர், பல்ஜித் வழக்கை ஆராய்ந்த மனித உரிமைக்குழு, நுட்பமாக அதனை சாதி இந்துக்களுக்கு ஆதரவாக எழுதுவது, பாந்த்சிங்கை தாக்குதவற்கான திட்டத்தை அறிந்த அவரது சகோதரர் கூட காசுக்கு விலைபோய் பிறழ்சாட்சியாவது என ஏராளமான சம்பவங்கள் படிக்கவே மன உறுத்தலைத் தருகின்றன.
பாந்த் சிங்கிற்கு அவரது மகள் குழு வல்லுணர்வு செய்யப்பட்டது, உயிர்போகுமாறு தாக்கப்ப்ட்டது ஆகியவற்றிலு்ம் துணை நின்றது இயக்க தோழர்கள் மட்டுமே. உண்மையை வெளியே கொண்டு வர டைம்ஸ் ஆப் இந்தியா, தெஹல்கா ஆகிய ஊடக நிறுவனங்கள் மட்டுமே துணிவு கொண்டிருந்தன. பிற ஊடகங்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்தன். அல்லது செய்தியைத் திரித்து பல்ஜித்தை வேசி என கூற முயன்றுகொண்டிருந்தன.
நூல் முழுக்க பாந்த் சிங்கின் மன உறுதிதான் வாசனுக்கு நம்பிக்கை தருகிறது. அந்த நம்பிக்கையில்தான் வாசகர்கள் நூலைப் படிக்கமுடியும். காரணம் சாதி வன்முறை அந்தளவு கொடூரமானதாக உள்ளது. 2006ஆம் ஆண்டு பாந்த்சிங் கடுமையாக தாக்கப்படுகிறார். என்ன காரணம், சமூக ரீதியில் அவர் ஏழை என்பதை அவரது உடை வெளிப்படுத்தவில்லை. அவரது புரட்சிகரமான எண்ணம், உயர்சாதி நிலவுடைமையாளர்களிடம் தனது பெண்களை வேலைக்கு அனுப்ப மறுக்கிறார். பெண் குழந்தைகளை படிக்க பள்ளிக்கு அனுப்புகிறார். அந்த ஊரிலுள்ள உயர்சாதியினருக்கு கோபம் வருவதற்கு இதுவே காரணமாக உள்ளது.
ஆதி திராவிடர் என்றாலும் இவர்களுக்குள் உள்ள உறவுக் கட்டமைப்பு உறுதியானது. பாந்த்சிங் பல்வேறு பொருட்களை வாங்கி விற்பவராக மாற்றுவது இதுவே. அங்குதான் தனது வருங்கால மனைவி ஹர்பன்ஸை சந்திக்கிறார். பாந்த்சிங் இயல்பாகவே நீரில் சர்க்கரை போல கலந்துபோய் பேசுபவர். அந்த சூழல்களை வர்ணிக்கும் இடம் அபாரமாக உள்ளது.
பாந்த்சிங் கல்வி அறிவு பெற்றவரி்ல்லை. அவரது குருவான ராம்சந்த் உதாசியின் பாடல்களைத்தான் பல்வேறு இடங்களில் பாடுகிறார். அவரது குரல் கேட்கும் இடங்களில் எல்லாம் நம்பிக்கை பரவுகிறது. அவரது பெண்கள், பையன்கள் எல்லோருமே பாந்த் சிங் கொடுத்த சாதிக்கு எதிரான துணிச்சலை எப்போதும் இழக்கவில்லை. தனது விலைமதிப்பற்ற உறுப்புகளை பறிகொடுத்தாலும் கூட பாந்த் சிங் குரலில் தைரியத்தை இழக்கவேயில்லை. கை, கால்கள் வெட்டுண்டபோது, எப்படி மருத்துவமனை செல்லும்வரை மயக்கமடையாமல் இருந்தாரோ, அதேயளவு துணிச்சல் அவரது பாடல்களில் உள்ளது.
நூலில் பாந்த் சிங் பாடும் பாடல்கள் உள்ளன. அவற்றைப் படியுங்கள். நிச்சயம் கடுகுப் பூக்கள் பூக்கும் வயதில் நம்பிக்கையோடு சிவப்பு நிற தலைப்பாகையோடு கண்ணில் தெரிவார்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக