வீட்டிலேயே வேலை செய்யும் முறை தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது! - எதை பெற்றோம்? எதை இழந்தோம்?
வொர்க் பிரம் ஹோம்!
கொரோனா வேகமாக பரவியபோது ஐடி நிறுவனங்களோடு பிற நிறுவனங்களும் சங்கடத்தோடு வேறு வழியின்றி அறிவித்த விஷயம் வீட்டிலேயே வேலை செய்யலாம் என்பதுதான். நிறைய நிறுவனங்கள் ஆபிசிலுள்ள கணினிகளை கூட சொந்த செலவில் பணியாளர்களின் வீடுகளுக்கு மாற்றிக்கொடுத்தன. இணைய இணைப்பிற்கும் வசதி செய்தன. சில நிறுவனங்கள் இதனை செய்யாமல் அரசு போல வேலையைக் காப்பாற்றிக்கொள்ள இதைச் செய்வது எல்லாம் உங்கள் பொறுப்பு என ஒதுங்கிக்கொண்டன.
அதிக தொலைவிலிருந்து மெட்ரோ ரயில், உள்ளூர் ரயில் பிடித்து வருபவர்களுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. ஆபீசில் உட்கார்ந்து மதிய உணவிற்கு நம்ம வீடு வசந்தபவன் போகலாமா இல்லையென்றால் பாரதி மெஸ்ஸா என கூகுள் செய்தவர்களின் உற்பத்தித்திறன் கூட கூடியது உண்மை. கூகுள் மீட், ஜூம் மீட்டிங் என கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. நெருங்கிய அலுவலக நண்பர்களுடன் போனில் பேசினாலும் நேரடியாக அவர்களைப் பார்த்து பேசுவது போல சூழல்கள் அமையாத்து பலருக்கும் சிக்கலாகவே இருந்தன.
உங்கள் நண்பர்கள் ஆபீசில் ஜெராக்ஸ் எடுக்கும்போது, நோட்டில் கையெழுத்து போடும்போது, வாட்டர்பாட்டிலில் தண்ணீர் பிடிக்கும்போது, மதிய உணவு நேரம், டீ குடிக்கும்போது என பார்த்து சின்னதாக வெட்டிப்பேச்சு பேசியிருப்பீர்கள். இந்த நேரங்களையெல்லாம் நாம் மென்பொருளில் நாம் சரிசெய்துவிட முடியாது. பத்து பேர் இருந்தாலும் கூட உங்கள் மனமறிந்த தோழர் ஒருவர் இருப்பார். அவரிடம் பேசும் அனைத்து விஷயங்களையும் உங்களால் போனிலோ, அல்லது வீடியோ கால், ஜூம் அழைப்பிலோ பேசிவிட முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் புதிய எதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
தீனி முக்கியம்
ஆபீஸ் என்பதே பல்வேறு குணச்சித்தர்கள் கொண்ட வளாகம். இதனால் ஒருவருக்கு பசி அடங்குகிற நேரத்தில் இன்னொருவருக்கு சந்தோஷ் டீ ஸ்டால் பஜ்ஜி வாங்கி வந்தது திங்கலாமா என யோசனை போகும். அருகில் அமர்ந்து வேலை பார்க்கும் சகோதரிகளுக்கோ ரொட்டிசியஸ் பேக்கரியில் சாண்ட்விச், சமோசா, இஞ்சி டீ என மனம் பரபரக்கும். ஆக மொத்தம் நமது இரண்டாவது வீடான ஆபீசில் எப்போது ்தீனிப்பஞ்சம் இருக்காது. சூப்பர் மார்க்கெட்டும் அருகில் இருப்பதால், ஏதாவது ஒன்றை மென்றுகொண்டோ கடித்துக்கொண்டோ, உறிஞ்சிக்கொண்டோதான் இருப்பார்கள். உள்ளே உறுமும் ஏசியின் குளிருக்கு வேறு என்னதான் செய்வதாம்? இதை தவிர்த்து நண்பர்களின் பிறந்தநாள் விழா வந்துவிட்டால் ஐஸ்க்ரீம் கேக், பிரியாணி என ட்ரீட்டுகள் களைகட்டும். சில பெரிய நிறுவனங்கள் ஸ்நாக்ஸ்களை நீங்களே எடுத்து சாப்பிட்டுக்கொள்ளும் வகையில் தனி கேபினே அமைத்திருப்பார்கள். மனிதர்களிடம் வேலை வாங்க வேறு வழி என்னாதான் இருக்கிறது
தனிப்பட்ட நேரம்
என்னதான் நேரம் குறைவு உற்பத்தித்திறன் அதிகரித்திருக்கிறது என்றாலும் பஸ், ரயில் என எதில் பயணம் செய்தாலும் அந்த நேரம் ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கானது. அந்த நேரத்தில் போனில் ஓஷோ பற்றி படிக்கலாம், தரவிறக்கிய அருண் நரசிம்மனின் அமெரிக்க தேசி நாவலை, சல்மான் ருஷ்டியின் ஆங்கில நாவல்களை, சேட்டன் பகத்தின் கட்டுரைகளை, புதிதாக வந்த சினிமாக்களை கூட பார்த்துக்கொண்டு செல்லலாம். இந்த நேரம் என்பது பயணத்தில் முக்கியமானது. அலுவலகத்தில் அன்று என்ன கடுமையான வேலைகள் இருந்தாலும் கூட அதனை ஓரளவு எதிர்கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும். இப்போது இதுபோன்ற விஷயங்கள் கிடையாது. ஆபீசிற்கும் வீட்டு வேலைகளுக்குமான இடைவெளி மெல்ல குறைந்து வருகிறது.
புதிய நிலைமைக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்வது மட்டுமே ஒரே வழி. இதற்கு தடுப்பூசி திருவிழா உதவுமா என்று தெரியவில்லை. அதற்கேற்ப நமது மனநிலையை சரியாக வைத்துக்கொள்வது முக்கியம்.
மின்ட்
ஹரிஷ் பட்
கருத்துகள்
கருத்துரையிடுக