ட்ரோன்களின் பயன்பாடு!

 

 

 

Drone, Man, Drone Pilot, Copter, Quadrocopter

 

 

 

ட்ரோன்களின் பயன்கள் என்னென்ன?


விவசாயிகளுக்கு உதவி


அதிக நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு ட்ரோன் பெருமளவு உதவும்.. நிலங்களை எளிதாக ட்ரோன் மூலம் கண்காணிக்கலாம். ஆய்வு செய்யலாம். பயிர்களின் வளர்ச்சியை வெளியே தெரியாத ஒளியைப் பீய்ச்சும் சென்சார்கள் மூலம் அறியலாம். படம் எடுக்கலாம். இதனை குறைந்த செலவில் செய்யமுடியும் என்பது முகியமான அம்சம்.


தட்பவெப்பநிலை ஆய்வு


புயல், சூறாவளி வரும் சமயங்களில் அதனை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் பணியில் ட்ரோன் உதவுகிறது. இதன்மூலம் நாட்டில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக தடுக்கலாம். குளோபல் அப்சர்வர் எனும் ட்ரோன் இதற்கு உதவுகிறது. புயல் சூழல்களில் ஏற்படும் பாதிப்புகளை எளிதாக முன்னமே அடையாளம் கண்டு அது பற்றிய படங்களை எடுத்து அனுப்புகிறது. இந்த ட்ரோன் 55 ஆயிரம் அடி தொலைவில் ஆறு நாட்கள் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது. 600 மைல் தொலைவுக்கு ஆய்வு செய்கிறது என ஆய்வாளர்கள் சான்றிதழ் கொடுக்கிறார்கள்.


ஆபத்திற்கு உதவி


சாலை வசதிகள் பாதிக்கப்பட்ட சூழலில் தேவையான ஆபத்துதவி பொருட்களை எப்படி எடுத்துச் செல்வது? அதற்குத்தான் ட்ரோன்கள் உதவுகின்றன. ஸ்வூப் ஏரோ எனும் ட்ரோன், இந்தவகையில் வனுடாவு நாட்டிற்கு தடுப்பூசிகளை எடுத்துச்சென்று சாதித்தது. 80 தீவுகளுக்கு இந்த வகையில் உதவிகளை இந்த ட்ரோன் வழங்கியது. இதனை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கியிருந்தனர். இதனால் தேவைப்படும்போது ட்ரோன் பாகங்களை உருவாக்கிக்கொள்ள முடிந்தது. நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு 2.5 கி.கி. எடையுள்ள பொருட்களை கொண்டு சென்றது. இதில் உள்ள பாதகமான அம்சம், புயல்களில் ஏரோ ட்ரோன் தாக்குப்பிடிக்காமல் தொடர்பை இழந்துவிடும் என்பதுதான்.



எல்லை பாதுகாப்பு


நாட்டின் எல்லைகளை பாதுகாப்பு படை பாதுகாக்கிறது என்பது உண்மைதான். ஆனால் மனித கண்களுக்கு புலப்படாத பல்வேறு சதிகளை கேமரா கண்கள் மூலம் பார்க்க முடியும். அமெரிக்க இந்த வகையில் மெக்சிகோ எல்லையோரம் அங்கிருந்து அத்துமீறி அவர்களது நாட்டில் நுழைபவர்களை கண்காணித்து வருகிறது. இதில் போதைப்பொருட்களை தடுக்கும் பணியும் முக்கியமானது.


எண்ணெய் அகழ்ந்தெடுப்பு மேற்பார்வை


கடலில் எண்ணெய் அகழ்ந்தெடுப்பதை பார்வையிடுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதனை சைபர்ஹாக் என்ற ட்ரோன் தீர்த்து வைத்துள்ளது. எண்ணெய் அகழ்ந்தெடுப்பதில் சிறிய தவறு நேர்ந்தாலும் கூட பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி ட்ரோன் மூலம் இப்பணியை மேற்பார்வை செய்வதால் நிறுவனத்திற்கு நிறைய லாபங்கள் உள்ளது. பறந்துகொண்டே ட்ரோன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றையும் பார்க்கலாம்.




தொன்மை அகழாய்வு


தொன்மையான அகழாய்வு இடங்களை ஆய்வு செய்வது கடினமானது. அந்த இடங்களை பறவை பார்வையில் பார்த்து புகைப்படங்கள் எடுப்பது, வீடியோக்களை பதிவு செய்வது ஆகியவற்றுக்கு ட்ரோன்கள் சரியாக உதவுகின்றன. ரஷ்யாவின் துக்கெடா எனும் பகுதியில் இந்தவகையில் ட்ரோன் பணியாற்றியுள்ளது. அர்மேனியா நாட்டில் உள்ள கல்லறை அமைக்கப்பட்டுள்ள பகுதியை டிஜேஐ பாண்டம் 2 ட்ரோன் மூலம் பதிவு செய்துள்ளது ஆராய்ச்சிக்குழு.


விநியோக சேவை


ட்ரோன்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்வது உலகம் முழுக்க தொடங்கிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் இதற்கு தடைகள் விதிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் ட்ரோன்கள் மூலம் பொருட்கள் விற்பனை என்பது யதார்த்தமாக இருக்கப்போகிறது. அமேசான் நிறுவனம் பிரைம் ஏர் என்ற பெயரில் ட்ரோன்களை பொருட்களை விநியோகம் செ்ய்வதற்கு பயன்படுத்த முயன்று வருகிறது. சாலைகளில் பொருட்களை கொண்டு சென்று விநியோகிப்பதை விட இந்த வகையில் எளிமையாக மக்களிடம் பொருட்களை கொண்டு சென்று சேர்க்கலா்ம். போக்குவரத்து நெரிசல் பற்றி கவலைப்படாமல் நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை செய்யலாம்.


ட்ரோன் கலை


2018ஆம் ஆண்டு பியோங்சாங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ட்ரோன்கள் மூலமே ஒலிம்பிக் வளையங்களை உருவாக்கினர். இது அப்போது பெரும் சாதனையாக கருதப்பட்டது. இன்டெல் நிறுவனத்தின் பணியாளர்கள், அனிமேஷன் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.


2015ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இசைக்குழு ம்யூஸ், ட்ரோன்ஸ் என்ற பெயரில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்தனர். உலகம் எப்படி ட்ரோன்கள் மூலம் இயங்கப்போகிறது என்பதுதான் இதன் கான்செப்ட். எதிர்காலத்தில் ட்ரோன்கள் மூலமே லைவ் ஓவியங்கள் உருவாக்கப்படலாம். இசைக்கச்சேரிகள் நடத்தப்படவும் வாய்ப்புள்ளது.


ட்ரோன் பந்தயம்


அனைத்து விஷயங்களிலும் ட்ரோன்கள் நுழைந்துவிட்டபிறகு, பந்தயங்களும் நடத்தப்படத்தானே வேண்டும்? எதிர்காலத்தில் ட்ரோன்களின் பந்தயமும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தப்பட வாய்ப்புள்ளது. இத்தகையை முயற்சியை பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியது.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்