பகைவனுக்கும் அருளும் இதயநோய் மருத்துவனின் ரத்தசரித்திரம்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் - இறுதிப்பகுதி
பகைவனுக்கும் அருளும் நெஞ்சமுடைய மருத்துவனின் ரத்தசரித்திரம்!
டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்
இறுதிப்பகுதி
கொரிய தொடர்
எம்எக்ஸ் பிளேயர்
முன்னமே கூறியது போல வெறும் காதல் கதை என்பதாக எடுக்காமல், வடகொரியா, தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வெறுப்பு, அரசியல் சதிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கொரிய தொடர்.
துருக்கி தொடர்கள் போல வளவளவென நீளாமல் இருபது எபிசோடுகளில் கதையை நிறைவு செய்திருப்பதற்கு தொடரின் இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும்.
பார்க் குவான் இதயநோய் மருத்துவர். அவரின் அப்பா புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர். அவரின் நண்பர் சோய் செய்த அறுவை சிகிச்சை தோற்றுப்போக, மனசாட்சிப்படி அது மருத்துவமனையின், மருத்துவரின் தவறு என்று சாட்சி சொல்ல தயாராகிறார். ஆனால் மருத்துவமனை சேர்மன் மருத்துவமனையைக் காப்பாற்ற, ஊழல் பிரதமரின் செல்வாக்கைப் பெற்று பார்க் குவானின் அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கிறார். உதவி என்று அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர் திரும்பி வரக்கூடாது என்பதுதான் தென்கொரியா, வடகொரியா அரசியல்வாதிகளுக்குள் போடப்பட்ட ஒப்பந்தம். இது பார்க் குவானின் அப்பாவுக்குத் தெரியாது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கிறார். அதையும் அவரது மகன் பார்க் குவானின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி செய்ய வைக்கிறார்கள். இப்படி அறுவை சிகிச்சைக்கே நம்பிக்கை வைக்கும் நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலை எப்படியிருக்கும்? பார்க் குவானின் அப்பாவை அங்கேயே கடத்தி வைத்துக்கொண்டு அவரின் திறமையை வைத்து பிற நாடுகளில் இருந்து நிதியைப் பெறுகின்றனர். பார்க் குவானுக்கும் ஜே என்ற பெண்ணுக்கும் அங்கே காதல் உருவாகி வளர்கிறது.
இந்த காதல் காட்சிகள் மிக குறைவானவையே. அதனால் பார்க்கும், ஜேவும் காதல் செய்கிறார்கள் என்றாலும் அதில் அத்தனை ஒட்டுதல் பார்வையாளர்களுக்கு வரவில்லை. காரணம், காதல் வடகொரியாவில் நடக்கிறது என்பதை புரிந்துகொண்டிருததால் கூட இருக்கலாம்.
ஜப்பானிலிருந்து வடகொரிய வந்த குடும்பம் அவர்களுடையது. அது அரசுக்கு தெரிய வரும்போது அவர்களை வதை முகாமில் வைத்து சித்திரவதை செய்கின்றனர். பார்க் குவானின் காதலும் உடைகிறது. பார்க் குவான் இதயநோய் மருத்துவராக பியோங் ஜியோங் மருத்துவமனையில் பணியாற்றுகிறான். அந்த மருத்துவமனைக்கு ஒரே குறிக்கோள்தான். அதிபரின் உடல்நிலையைப் பராமரிக்கவேண்டும். அதற்காக நாடு முழுக்க இருந்து வரும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை என்று கூட்டி வந்து அறுவை சிகிச்சைகளை செய்து பழகுகின்றனர். இதனால் ஏராளமான நோயாளிகளில் கொல்லப்படுகின்றனர். பார்க் குவானும் இதுபோல நிறைய பேரின் உடல் உறுப்புகளை மாற்றி வைத்து சிலரைக் காப்பாற்றி பலரைக் கொல்லுகிறான். குற்றவுணர்ச்சியோடுதான் இதனை செய்கிறான். ஆனால் சொல்வதை செய்யவில்லை என்றால் துப்பாக்கி குண்டு தலையில் பாயும் என வடகொரிய தளபதி மிரட்டுகிறான்.
அப்போது அங்கு ஜேவின் அப்பாவும், ஜேவும் வருகிறார்கள். ஜேவின் சிறுநீரகம் பழுதாகி இருப்பதால் அவள் இறக்கும் நிலையில் இருக்கிறாள். அரசு அவளது அப்பாவைக் காப்பாற்ற கட்டளையிடுகிறது. அவரைக் காப்பாற்றினால் விசாரணை செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதனால் பார்குக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு போய் இருவரையும் பார்க்கிறான். அப்போது ஜேவின் அப்பா, தனது சிறுநீரகத்தை எடுத்து தனது மகளுக்கு பயன்படுத்து. அவளை பார்த்துக்கொள் என சத்தியம் வாங்கிக்கொள்கிறார். இந்த சம்பவம் ஜேவுக்கு தெரியாது.
வடகொரிய அரசு இந்த அறுவை சிகிச்சையை வைத்து மருத்துவம் சார்ந்த திட்டங்களுக்கு நிதி சேகரிக்க நினைக்கிறது. அதற்காக வெளிநாடு செல்லும்போது, அங்கிருந்து தப்பிக்க பார்க்கின் தந்தை திட்டமிடுகிறார். ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரே தடை தான்தான் என்பதை உணர்பவர், அவன் இருக்கும் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ராணுவத்தால் சுடப்பட்டு இறக்கிறார். இதனால் தானும் அறுவை சிகிச்சை செய்து மயக்கத்தில் இருக்கும் ஜேவும் தப்பித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு பார்க் வருகிறான். அங்கிருந்து தப்பிக்கிறார்கள். ஆனால் தென்கொரியாவில் உள்ள அரசியல்வாதியின் சதியால் பார்க் தனது காதலியை பிரிய நேரிடுகிறது. அவனது உயிரை மர்ம நபர் ஒருவர் காப்பாற்றுகிறார். இதுதான் முதல்பகுதியின் ஆதாரக் கதை.
இதற்கடுத்த இரண்டாவது பகுதியில் சிறையில் இருந்து மீளும் பார்க்கை தண்ணீர் கேன் தொழில் செய்யும் பெண் பார்க்க வருகிறாள். அவள்தான் அவனுடைய நேசமிக்க நம்பிக்கைக்குரிய தோழி. அவனது மருத்துவமனைக்கு முதலீடு போட்டிருப்பவளும் அவள்தான். மருத்துவமனை வேலை போக மீதி நேரத்தில் தண்ணீர் போடுகிறான் பார்க். எதேச்சையாக மியாங் சாங் எனும் மருத்துவமனைக்கு போகும்போது அங்கு நோயாளியை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான். இதனால் அவனது புகழ் பரவுகிறது. அவனை வைத்து அங்கு இதயநோய் பிரிவிலுள்ள டாக்டர் ஹானை வீழ்த்த முன்னாள் தலைவர் மூன் முயல்கிறார். இதில் பல காமெடி களேபரங்கள் நடக்கின்றன.
பார்க்கைப் பொறுத்தவரை மருத்துவமனை, அறுவைசிகிச்சை இதெல்லாம் காதலி ஜேவை தேடுவதற்கு மட்டும்தான். வேறு விஷயங்களைப் பற்றியெல்லாம் அவன் கவலையே படுவதில்லை. அவன் அப்பா சொல்லிக்கொடுத்த ஒரே விஷயம் அவன் மனதில் உள்ளது. நீ எப்போதும் டாக்டர் என்பதை மறந்துவிடாதே. டாக்டர் எப்போதும் தனது கடமையைச் செய்யவேண்டும். இந்த வாசகம் எப்போதும் அவனுக்குள் மீன் போல நீந்திக்கொண்டிருக்கிறது.
அவனது அப்பாவை வடகொரியாவுக்கு அனுப்பி அவர்களது வாழ்க்கையை அழித்த பிரதமர் மீண்டும் பார்க்கை தனது வழிக்கு கொண்டு வந்து தென்கொரியாவின் அதிபர் ஆக நினைக்கிறார். அதற்காக பார்க்கை மியாங் சாங் மருத்துவமனைக்கு கொண்டு வர நினைக்கிறார். இதற்காக டாக்டர் ஹான், டாக்டர் பார்க் குழுக்களிடையே போட்டி நடத்தப்படுகிறது. பார்க்கைப் பொறுத்தவரை உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். யார் காப்பாற்றினால் என்ன என்றுதான் நினைக்கிறான். இதே நேரத்தில் அங்கு டாக்டர் ஹான் காதலிக்கும் கிராக்கு டாக்டர் ஓ வை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறான். அவளுக்கு ஒருபுறம் கோபம் வந்தாலும் மறுபுறம் பார்க்கின் குறும்பை மனதில் ரசித்துக்கொண்டே இருக்கிறாள். ஏன் இந்த நெருக்கம் ஹானுடன் ஏற்படவில்லை என்று யோசிக்கிறாள். மருத்துவமனை சேர்மனைப் பொறுத்தவரை தனது மருத்துவமனையை டாக்டர் ஹானிடம் கொடுத்துவிட்டு அவரது பெண் டாக்டர் ஓவை அவனுக்கு திருமணம் செய்துவிடவேண்டும் என்பதுதான் தொலைநோக்கு லட்சியம்.
இதற்கு தடையாக பார்க் வந்துவிடுவானோ என நினைத்து அவனை வேலையை விட்டு நீக்க நினைக்கிறார். ஆனால் சிபாரிசு காங்க்ரீட்டாக இருப்பதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இந்த தொடரில் நம் மனதைக் கவரும் நிறைய பாத்திரங்கள் உண்டு. வேடிக்கை மருத்துவன் பார்க், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ஜே, தொடரின் இறுதிவரை பார்க்கை காதலித்துக்கொண்டே இருக்கும் டாக்டர் ஓ, காசு, புகழ் இதற்காக யாரையும் பலிகொடுக்கலாம் என்று நினைக்கும் டாக்டர் ஹானில் ஸ்லீப்பர் செல் மருத்துவர் யின், அவரது நேர்மையான மனைவி நர்ஸ், பேசியே போரடிக்கும் அங்கீகாரத்திற்கு அலையும் டாக்டர் மூன், தனது பெற்றோரைக் கொன்ற சேர்மனை பழிவாங்கத் துடிக்கும் இறுக்கமான உடல்மொழி கொண்ட லீ அல்லது டாக்டர் ஹான், யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தனது வாழ்க்கையை மட்டுமே நினைக்கும் பிரதமர், அவரின் லாலிபாப் விரும்பியான பாடிகார்டு, பார்க்கின் மனநலம் பாதித்த அம்மா, இறுதிவரை நாட்டுக்காக தேசபக்தியோடு வாழ்ந்து தென்கொரியாவை அழிக்க நினைக்கும் வடகொரிய வீரன். என இப்படி தொடரிலுள்ள பாத்திரங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு லாலிபாப்பை சிறுவன் தனக்கு கொடுத்த அன்பிற்காக அவனை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் அதிக வசனங்களே இல்லாத பாடிகார்டு பாத்திரம் அசத்தல். விசுவாசம் என்பதை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பவர் இறுதியில் வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்வியோடு லாலிபாப்பை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் காட்சி சிறப்பாக உள்ளது. டாக்டர் ஹானைப் பொறுத்தவரை மருத்துவமனையின் நம்பிக்கையை உடைத்து அதைச் சேர்ந்தவர்களை சிறைக்கு அனுப்பவேண்டும். அதுதான் அவரது நோக்கம். ஆனால் டாக்டர் ஓவை காதலித்ததால், அவளது அப்பாவை உண்மையைச் சொல்லிவிட்டு நெஞ்சுவலி வந்தபிறகு காப்பாற்ற சிபிஆர் செய்வது மனிதநேயம் பார்வையாளர்களின் மனதில் உருவாகும் காட்சியாகியிருக்கிறது.
டாக்டர் யின் பாத்திரம் சிறியது என்றாலும் ஏற்படுத்தும் விளைவு அற்புதமானது. பேராசைக்கும் மனசாட்சிக்கு்ம் இடையில் அல்லாடும் பாத்திரம். தனது மனைவி நர்ஸாக இருக்கும் அறுவை சிகிச்சை அறையில் அவளது கண்களை பார்க்க முடியாமல் தடுமாறுவது, எதிர்காலத்தில் தனக்கு உதவி கிடைக்கும் என டாக்டர் மூனின் அறுவைசிகிச்சையில் குளறுபடி செய்வது, டாக்டர் பார்க்கின் நேர்மையைப் பார்த்து மனம் குமுறுவது, இறுதியில் பார்க்கின் நேர்மையைப் பார்த்தே மனம் திருந்துவது என அதிக வசனங்கள் இல்லாமல் பாத்திரத்தை பிரமாதமாக நடித்திருக்கிறார் இந்த தென்கொரிய நடிகர். இவர்தான் ஆலிஸ் வெப் தொடரில் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் கோ பாத்திரத்தில் பின்னி எடுத்திருப்பார்.
வில்லத்தனத்தை பொறுத்தவரையில் வடகொரியா, தென்கொரியா இரு நாடுகளிலும் ஏராளமான ஆட்கள் உள்ளனர். இதில் டாக்டர் ஹானைப் பொறுத்தவரை தனது லட்சியம் முக்கியம். அதற்குப்பிறகுதான் அடுத்தவர்களுக்கு சகாயம் என்பதில் சரியாக இருக்கும் இறுக்கமானவர். தொடரில் இவரது உடல்மொழி மாறுவது பார்க்கை சந்திக்கும்போது, அவர் இவரது அறுவைசிகிச்சையைப் பாராட்டும்போதும் மட்டும்தான். அடுத்து சேர்மன், எது நடந்தாலும் மருத்துவனை சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் வீ்ம்புக்கார வஞ்சனை கொண்ட மனிதர். தான் நினைப்பதைச் செய்வதற்கு அவர் எந்த எல்லைக்கும் போகிறார். இந்தவகையில் மூனுக்கு தான் பெரிய பதவியில் அமரவேண்டுமென எண்ணம் இருந்தாலும் கூட சதி வேலைகளில் ஈடுபடத் தெரியாத மனிதர். தான் ஜெயிப்பதற்காக யாரையும் கொல்ல நினைப்பதில்லை. மற்றபடி டாக்டர் மூன் கூட தனது திறமையை விட சேர்மனிடம் விசுவாசமாக இருந்து பெரிய பதவியை அடைய நினைப்பவர்தான். பிரதமரைப் பொறுத்தவரை அவர் ஒரு ஊழல் முதலை. தனது காரியம் முடிந்தவுடன் ஆதாரம் இருக்ககூடாது என மனிதர்களை கொன்றுவிட உத்தரவு கொடுப்பவர். இவர்தான் ஒட்டுமொத்த பாத்திரங்களையும் சதுரங்க காய்களைப் போல நகர்த்துபவர். தொடரிலேயே மிக பலவீனமான பாத்திரம் தென்கொரிய அதிபருக்கு வழங்கியுள்ளனர். வடகொரியாவுக்கு தென்கொரியாவின் வரிப்பணத்தை கொடுத்து அமைதியை வாங்க முடியாது. என மக்களுக்காக சிந்திப்பவர், இறுதிக்காட்சியில் அப்படியே பச்சோந்தியாக மாறுவது அவரது பாத்திர படைப்பின் அடிப்படையை சிதைக்கிறது.
தொடரில் ஒட்டாத விஷயங்கள் டாக்டர் பார்க், டாக்டர் ஜே ஆகிய இருவரின் காதல் காட்சிகள். அதை விட மருத்துவமனையில் நடக்கும் குறும்பான பார்க், கிராக் அல்லது டாக்டர் ஓ உரையாடல்களும், சண்டையும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியில் கூட பார்க்கை அவனது காதலி ஜே கட்டிப்பிடித்தபிறகுதான் கிராக் டாக்டர் ஓ, ஹானின் கரங்களைப் பிடிப்பார். தொடரில் தண்ணீர் கேன் போடும் நம்பிக்கைத் தோழி, கிராக் டாக்டர் ஓ, டாக்டர் ஜே என மூன்று காதலிகள் உண்டு. இறுதிப்பகுதியில் அரசியல்வாதியின் துரோகத்தால் பார்க், ஜே என இருவரும் வடகொரிய வீரனால் சுட்டுக்கொல்லப்படுவதே சரியானதாக இருந்திருக்கும். இருந்தாலும் தொடரில் நன்மை வெல்லவேண்டும் என்று கூறும் நிர்பந்தம் இருப்பதால் தலையில் சுடப்பட்ட பார்க்கும் நெஞ்சில் சுடப்பட்ட ஜேவும் ஆற்றுநீரில் விழுந்துகூட அவர்களை காப்பாற்றி இறுதிப்பகுதியை நேர்மறையாக்கியுள்ளனர். ஆனால் அது பொருத்தமாக இல்லை.
பகைவனையும் காப்பாற்றும் வினோத மருத்துவன்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக