அமெரிக்கா எனும் அசோகவனத்தில் அலைகழியும் ராமன்! - அமெரிக்க தேசி - அருண் நரசிம்மன்

 

 

 

  america-thesi-80828.jpg

 

 

 

அமெரிக்க தேசி


அருண் நரசிம்மன்


தமிழினி


திருச்சி ஶ்ரீரங்கத்தில் படித்த இயற்பியல் பட்டதாரி அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பு படிக்கச் சென்று அந்த கலாசாரத்தில் கலந்து என்ன கற்றுக்கொண்டார், பெற்றுக்கொண்டார் என்பதுதான் கதை.


தேசிகன் நரசிம்மச்சாரி என்ற கதைநாயகனின் பெயர்தான், அமெரிக்கன் தேசி என்று மாறியிருக்கிறது. நூல் ஏறத்தாழ சேட்டன் பகத்தின் நாவல் போன்றதுதான் என்று மேலோட்டமாக தோன்றும். ஆனால் வாசிக்கும்போது, அந்த நினைப்பே உங்களுக்குள் வராது. காரணம், அருண் நரசிம்மன் அந்தளவு தமிழ் இலக்கிய விஷயங்களை உள்ளே நுட்பமாக வைத்திருக்கிறார். தமிழ் பாசுரங்களை, திருக்குறள்களை சூழலுக்கு ஏற்ப நுணுக்கமாகப் பயன்படுத்தியிருப்பதால் நாவல் எழுநூறு பக்கத்திற்கு நீண்டாலும் பெரிய சோர்வு ஏற்படவில்லை. நிறைய இடங்களில் அவல நகைச்சுவை காட்சிகளை புன்னகையுடன் படிக்க முடிகிறது. எழுத்தாளரின் சொல்லாட்சி ஆச்சரியப்படுத்துகிறது.


தேசிகன் என்ற வடகலை பிராமணர், அமெரிக்காவில் தான் காணும் அனைத்து விஷயங்களுக்கும் எதிர்மறையான தன்மை கொண்ட அனுபவங்களை திருச்சி ஶ்ரீரங்கத்தில் கொண்டிருக்கிறார். இந்தியாவில் பல்வேறு விஷயங்களுக்கு கொடுக்கும் மதிப்பு என்பது அமெரிக்காவில் கிடையாது. நண்பராக இருந்தாலும் கூட குழந்தைகளை பார்த்துக்கொள்ள பணம் இதோ என கொடுப்பவர்கள் அமெரிக்கர்கள். எதுவும் இங்கே இலவசம் கிடையாது என்பதுதான் முதலாளித்துவ த த்துவம்.. ஆனால் இதே ரீதியில் உறவுகளையும் அணுகினால் பரஸ்பர மென் உணர்வுகள் நசிந்து காமமே இறுதியாக எஞ்சுகிறது. இதனை தேசிகன் தனது முனைவர் படிப்பின் இறுதியில் கண்டுகொள்கிறான். புஷ்பவல்லி, மரியா, டாலி, லெம்லெம் தாமஸ், ஷைலஜா, ஜென்ஸி என இந்த பெண்களிடம் உள்ள வேறுபாடு, புரியும்போது அமெரிக்க வாழ்க்கை போதுமென தேசிகனுக்குத் தோன்றுகிறது.


அமெரிக்காவுக்கு உள்ளே வரும்போது எதுவெல்லாம் அதிர்ச்சிகரமானதாக அவனுக்கு தோன்றியதோ இறுதியில் அனைத்தையும் உள்ளவாறே ஏற்றுக்கொண்டு தனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்தவனாக தெளிவு பெற்றவனாக நாடு திரும்புவதுதான் இறுதிப்பகுதி.


நாவலைத் தொடங்கும்போது, உடனே வாசிக்கும் நம்பிக்கை கூடிவரவில்லை. ஆனால் ரஷ்யாவைச் சேர்ந்த பவெல் கூலிஷ் பாத்திரம் வந்தவுடன் வாசிப்பு சுவாரசியமாக மாறிவிட்டது. அதற்குப்பிறகு எழு்நூறு பக்கம் என்பது விறுவிறு வேகமாக கடந்துவிட்டது.


தேசிகனைப் பொறுத்தவரை இயற்பியல் படித்தவன். ஆய்வு மாணவன் என்பதோடு கூடுதலான மற்றொரு தகுதியும் உள்ளது. அதுதான் மனிதர்களை இதயத்தால் அணுகுவது. தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியும் யோசிக்கிறான். இந்த தன்மைதான் அவன் யாரையும் ஈர்க்கவேண்டும் என்று கருதாமலேயே மரியா, ஷொஸே, வரதன், லெம்லெம் தாமஸ், பவெல், எலுவா, சிங்கர், ஜென்ஸி, ஷைலஜா, சம்பத் ஆகியோரை ஈர்க்கிறது. சாதி, இனம், மதம் ஆகியவற்றை விதந்தோந்து பேசுபவர்களை விலக்கியும் வைக்கிறது. இதயப்பூர்வமான நேர்மைதான் பாதகமான எண்ணத்தை தரும் என்றாலும் கூட ஜென்சியிடம் தனது இச்சைக் கனவைக் கூறவைக்கிறது. கனவில் வந்த பச்சை புடவை இல்லை என்று கூறுபவளுக்கு கார்டைத் தேய்த்து புடவையை வாங்கி அனுப்பும் தைரியத்தையும் வழங்குகிறது. தேசிகன் தனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களும் அமெரிக்காவில் அவனுக்கு உதவுகிறது. ஆராய்ச்சிப்படிப்பு தவிர சமையல், இசை, பயணம் செய்வது என பல்வேறு விஷயங்கள் நண்பர்களுடன் ஒன்றுசேர உதவுகிறது. பவெல், ஷொஸே, பில், சிங்கர், அனந்த நரசிம்மாசாரி ஆகியோருடன் பேசும் உரையாடல்களை தேசிகனின் மனத்தை தெளிவாக்குகிறது. சில இடங்களில் ஏராளமான தகவல்களை கூறுவது போல இருந்தாலும், கதைக்கு அவை பொருத்தமானவையே. தேசிகனின் மனவோட்டத்தை உணர அவை வழிகாட்டுகின்றன.


கதை பிராமணர்களின் வாழ்க்கை சார்ந்து இருந்தாலும் அதில் உள்ள முட்டாள்தானங்களை, மூடநம்பிக்கைகளை முடிந்தவரை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்கள். அங்குள்ள தமிழ்சங்க அரசியல், அங்கு வருபவர்கள், இதழ் நடத்துபவர்களின் எண்ணங்கள் ஆகியவற்றை இந்தளவு வெளிப்படையாக பேசுவது நிச்சயம் பலருக்கும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் தேசிகனின் பாத்திரத்தை திடமாக வடிவமைப்பதும் இந்த வகை பாத்திரங்களும் உரையாடல்களும்தான். . பால்ய வாழ்க்கை பற்றிய பல்வேறு விஷயங்கள் தேசிகனின் அனுபவங்களாகவே இருக்கின்றன. எனவே இவற்றைப் புரிந்துகொள்வதில் பெரிய தடையில்லை.


தேசிகனைப் பொறுத்தவரை அடிப்படையான மதிப்புகளை மதிக்க விரும்புகிற ஆள். டலஸ் வானுயர கட்டிடங்களிலும் அதற்கான பொருள் , வடிவம், செயல் என்ன என்பதை தேடுகிறவன். அதனை கோவில் கோபுரங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவன். அமெரிக்க நுகர்வு கலாசாரம் முதலில் அதிர்ச்சி அளித்தாலும கூட மெல்ல அதனைப் புரிந்துகொள்வதால்தான் பவெல் மனைவி அவனை விட்டுவிட்டு பணத்துடன் தனியாக சென்றுவிட்டது தெரிந்து முதலில் அதிர்ச்சியாகிறான். பின்னாளில் ஷொஸே மனைவி அஸ்ரட் அதே முடிவை எடுக்கும்போது வனெஸா, கேப்ரியலுடன் இயல்பாக பேச முடிகிறது. ஷொஸே கதறி அழும்போதும், அமைதியாக அதனை காதுகொடுத்து கேட்டு நண்பனாக ஆற்றுப்படுத்த முடிகிறது. அமெரிக்க வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும் தேசிகன் கடுமையாக நடந்துகொள்கிறான். அதுகூட அவனது அறிவு நண்பர்களாக நினைத்தவர்கள் துரோகம் செய்து அதனை களவாடி பெயர் பெறும்போதுதான். ப்ரௌட், டாலி பாத்திரங்கள் தனக்கு தேவையானவற்றை தேசிகனிடம் கேட்டுப் பெறுகிறார்கள். இதை தேசிகன் தனது குருவிடன் சொல்லுமிடம் சிறப்பாக வந்திருக்கிறது.


திருச்சியில் சந்தித்த புஷ்பவள்ளி, அமெரிக்க அசோகவனத்தில் ராமனாக திரியும் தேசியை ஆழமாக யோசிக்க வைக்கிறாள். அவளின் ஸ்பரிசம், வியர்வை வாசம், அவளின் குரல் என அனைத்து பெண்களிடமும் தேசி அதைத்தான் தேடி வருகிறான். இறுதியில் ஜென்ஸி பற்றிய கனவை அவளிடம் சொல்லும்போதும், அது தொடர்பான சங்கிலி விளைவாக அவளது வீட்டிற்கு சென்று வனெஸா அழைப்பால் தப்பி வரும்போதும் அவனது மனது புஷ்ப வள்ளியின் மடியில்தான் இருக்கிறது. சில மனிதர்களின் அன்பை புரிந்துகொள்ள காலமும் நிறைய மனிதர்களின் உறவும் தேவைப்படுகிறதுதானே?


இயற்பியல் பட்டம் பெற்றவன், நுட்பமான மனம் கொண்டவன் அதோடு வாசிப்பதில் பேரார்வம் கொண்டவன் என்பதோடு ஒட்டி புரிந்துகொண்டால், தேசிகனின் பாசுரம், திருக்குறள் ஆர்வம் தனியாக தெரியாது. தேசிகனின் மனம் தன்னைப் புரிந்துகொள்ளக் கூடிய அறிவுப்பூர்வ துணையை அமெரிக்கா முழுக்க தேடியபடியே இருக்கிறது. அப்படி அமைபவர்களாக பவெல், ஷொஸே, சிங்கர், ஆராய்ச்சியாளராக வேலை கொடுக்கும் பில் ஆகியோர் அமைகிறார்கள். லெம்லெம் தாமஸிடம் அவனுக்கு வேண்டியதை விருந்தாக கொடுத்து பெற்றதற்கு அடுத்தநாளே காதலுக்கும், காமத்திற்குமான வேறுபாட்டை உணர்ந்து மனதில் பெரும் விலகலை உணர்கிறான். இதன் காரணமாக ஷைலஜாவின் உடல் ரீதியான நெருக்கத்தை கூட எளிதில் தள்ளி வைக்க முடிகிறது. அனைத்திற்கும் விலை கொண்ட கான்க்ரீட் வனத்திலும்

கூட மனிதநேயத்தின் ஈரம் இழக்காமல் இருக்கிறான். பிஹெச்டி பட்டத்திற்கான நன்றியறிதல் எழுத்து இதற்கு சான்றாக உள்ளது.. எழுத்தாளர் அருண் நரசிம்மன் யார் என்று தெரிந்துகொண்டவர்களுக்கு இந்த நூல் சுயசரிதையோ என்று தோன்றும். ஆனால் நாவலை வாசிப்பு அனுபவமாக காணும்போது இதுபோன்ற கேள்விகளில் நாம் தேங்கி நிற்க வேண்டியிருக்காது. தேசிகனின் கனவுக்காட்சி சற்று நீளம் அதிகமாக உள்ளது போல தோன்றுகிறது. அக்காட்சி கூட தனது வாழ்வில் வந்த அனைத்து பெண்களையும் திரும்ப ஒருமுறை பார்ப்பது போல தேசிகன் நினைத்திருக்கலாம்.


ஆஸ்பிட்டல் பார்ன் க்ளீன் தேசிகன், அந்திய தேசத்திலும் தன்னை அறிந்துகொள்வதும் முதிர்ச்சி பெற்றவனாக மாறி இந்தியாவிற்கு திரும்பும் பயணம்தான் அமெரிக்க தேசி. நாவல்.


அருண் நரசிம்மனின் அடுத்த நாவல் இருக்கிறதா என தேட வைக்கும்படி அருமையாக எழுதியுள்ளார்.


கோமாளிமேடை டீம்

நூலை வாங்க

https://www.udumalai.com/america-thesi.htm?url=america-thesi

எழுத்தாளரின் வலைத்தளம்

https://arunn.in/






 

 

 

கருத்துகள்