மகனின் அறுவை சிகிச்சைக்காக மோசடியில் இறங்கும் பொருளாதார பேராசிரியர்! - தி சாய்ஸ் - துருக்கி தொடர்
தி சாய்ஸ்
துருக்கி
பத்து எபிசோடுகள்
writers.....
Nuket Bicakci | ||
Özlem Yücel | ||
Damla Serim |
மூளையில் கட்டி ஏற்பட்டதால் அடிக்கடி கண்பார்வை மங்கி, கைகளில் பலமின்றி மயங்கி விழும் மகனைக் காப்பாற்ற பொருளாதார பேராசிரியர் செய்யும் மோசடி வேலைகள்தான் கதை..
இர்பான் சாயூன் என்ற பொருளாதாரப் பேராசிரியர்தான் கதை நாயகன். பொருளாதாரமும், பணமும் பற்றிய அத்தனை நுணுக்கங்களும் அறிந்த பேராசிரியர். ஆனால் பல்கலைக்கழகம் ஒன்றில் தற்காலிக வேலை பார்த்து வருகிறார். பல்கலைக்கழக அரசியலால் வேலை இழக்கிறார். அதேசமயம் அவரது மகன் டென்னிஸிற்கு மூளையில் கட்டி எனும் தகவலையும் அறிந்துகொள்ள மனமுடைந்து போகிறார். அவனைக் காப்பாற்ற நாற்பது ஆண்டுகளாக நேர்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையையும் தூக்கிப்போட்டுவிட்டு மோசடிக்காரனாக மாறுவதுதான் மையக் கதை.
இதைச்சுற்றி அவனை காதலித்துவிட்டு பின்னர் தூக்கியெறிந்த இலாய், எப்போதும் மோசடிகளில் ஈடுபடும் இர்பானின் நண்பர் எக்மன், தன் காலைப் பிடித்து கெஞ்சுபவர்களுக்கு வேலை தரும் அகங்கார தொழிலதிபர் சுலைமான், அவரின் வளவள பேச்சு பேசும் மனைவி குத்ரெட், இரக்கமே இல்லாத மகன் ஹக்கன், இர்பானை வஞ்சகமாக திருமணம் செய்த அவரது மனைவி எடா, இர்பான் மூலம் வேலை கிடைத்த ஏழைப் பெண் அய்ஸி என பல்வேறு கதாபாத்திரங்கள் நம்மை வசீகரிக்கின்றன.
பொருளாதாரம், அதில் குற்றம் செய்த மனிதர்கள், பணம் சம்பாதிப்பது எப்படி என பல்வேறு விஷயங்கள் தெரிந்த பல்வேறு நூல்களை எழுதிய பேராசிரியரான இர்பான், மனைவி எடா எப்படியாவது சம்பாதியுங்கள் என வற்புறுத்த மோசடிக்கு ஒப்புக்கொண்டு துரோக நண்பன் எக்மனுக்கு சரி என்று சொல்வதிலிருந்து கதை வேகம் பிடிக்கிறது.
ஏழை மனிதர்களுக்கு இறங்குவது, பணக்காரர்கள் என்றாலே வெறுப்பது, சதிகளால் தனது வங்கிக்கணக்கு முடக்கப்பட அதை விடுவியுங்கள் என போலீஸ் ஸ்டேஷனில் கெஞ்சுவது, வட்டிக்கு கடன் வாங்க போகும்போது சுலைமானிடம் நான் உங்களிடம் கெஞ்சி காலைப் பிடிக்க வரவில்லை. கடன் வாங்கத்தான் வந்திருக்கிறேன். பணத்தை திருப்பித்தந்துவிடுவேன் என துணிச்சலாக பேசுவது, மகனிடம் மென்மையாகப் பேசி அவன் பிடிவாதத்தை தளர்த்துவது என இர்பான் சயூனாக பின்னி எடுத்திருக்கிறார் இப்பாத்திரத்தில் நடித்த நடிகர்.
இத்தனைக்கும் இவர் பேரழகன் கிடையாது. வழுக்கை விழுந்த மனிதர்தான். சோகம், ஆர்வம், கோபம், விரக்தி என பல்வேறு உணர்ச்சிகளை பார்வையிலேயே கடத்துவதற்கு முயல்கிறார். இவருக்கு ஈடாக இந்த தொடரில் நடிக்கும் பாத்திரம் இலாய்தான். இர்பானைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவிலிருந்து மாறியவர்,சூழல் வசத்தால் தொழிலதிபர் சுலைமானின் காதலியாக மாறுகிறார்.. பணத்திற்கு குறைவில்லையென்றாலும் மனத்தில் நிம்மதியில்லாமல் தடுமாறுகிறார். கூடவே, சுலைமானின் மனைவி ஏற்படுத்தும் குடும்ப சிக்கல்களால் பதற்றத்துக்குள்ளாகிறார். தனது தங்கை நெஹருடைய வாழ்க்கையும் தன்னைப்போல ஆக கூடாது என பல்வேறு முயற்சிகளை செய்து காப்பாற்ற முயன்றும் அது பயனில்லாமல் போக அவர் என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
எக்மன், இவன் இர்பானின் பால்ய நண்பன். சிறுவயது தொடங்கி இவன் செய்யும் பல்வேறு குளறுபடிகளை இர்பான் சரி செய்வான். எக்மனின் பல்வேறு மோசடிகளுக்கு சிலுவை ஏற்கும்படி ஆகிறது. இர்பானின் காதல் வாழ்க்கையும் நாசமாக எக்மனே காரணமாக இருக்கிறான். அதனை தொடரைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அது முக்கியமான திருப்பம் கூட.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக