அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்
ஜாதி ரத்னாலு
ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.
ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.
ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன். அவன் நினைப்பு எப்போதுமே சோறு, அதற்கு குழம்பு, கூட்டு, பொரியல் என்ன வைப்பது என்றாகவே இருக்கிறது. இவனுக்கு நண்பனாக உள்ளவன் ரவி, எப்போதும் காதல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டே இருக்க, போதையில் முக்காலத்தையும் மறந்து தகராறு செய்பவன்.
ஶ்ரீகாந்தின் தந்தைக்கு சேகரின், ரவியின் தந்தையர் நண்பர்கள். அந்த நட்பு அப்படியே அடுத்த தலைமுறைக்கும் வந்து சேர ஜோகிபேட் படாதபாடு படுகிறது. உண்மையில் படத்தில் மூளையைக் கசக்கி யோசிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால் படம் முழக்க சுவாரசியமான வசனங்கள், ஜாலிகேலி காட்சிகள் என அசத்துகிறார்.
இந்த கூட்டணியோடு நாயகி, பிரம்மானந்தம், பிரம்மாஜி, முரளி சர்மா இணைய அப்புறமென்ன, காமெடி கான்ஸ்டிபேஷன்தான். நவீன், பிரியதர்ஷி, ராகுல் ராமகிருஷ்ணன் என மூவருமே பொறுப்பேயின்றி திரியும் வெட்டி ஆபீசர்களாக கலக்குகிறார்கள். ஒவ்வொவருக்குமாக பாத்திர வார்ப்பு அசத்தலாக இருக்கிறது. இதில் உப கதையாக வரும் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கம்பெனி பற்றிய சமாச்சாரம், பெரிதாக படத்தில் ஒட்டவில்லை.
நகரம், கிராமம், அங்குள்ள மனிதர்கள், அரசியல்வாதிகள், அவர்களின் துறை சார்ந்த அறிவு, கல்வி அறிவு, தேர்வு, பத்திரிகையாளர்கள், குற்றம் சார்ந்த ஊடக நிகழ்ச்சிகளின் ஊதிப்பெரிதாக்கும் தன்மை என அனைத்தையும் கோமாளிமேடையில் ஏற்றி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
பிறரோடு ஒப்பிட்டு நமது வாழ்க்கையை நரகம் ஆக்கிக்கொள்ளக்கூடாது என்பதுதான் அடிப்படையான லைன்.
இப்போதுள்ள கடினமான நிலையில் நம்மை ஏராளமான முறை சிரிக்க வைக்கும் படம் என உறுதியாக சொல்லலாம். படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பாருங்கள். இல்லையென்றால் பிரெஞ்ச் வைன் வித் இங்கிலிஷ் சப்டைட்டில் என நவீன் மதுபானத்தை ஆர்டர் செய்வது போல கடினமாகிவிடும்.
தெலுங்கில் லொள்ளுசபா!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக