பத்திரிகை ஆசிரியரின் முதல் தகுதி என்ன தெரியுமா? - ஆ.வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சொன்ன அறிவுரை

 







கோபத்தின் பிரயோஜனம்

ஆசிரியரின் மறைவுக்கு இருபது நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களை காற்றில் அசைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது.

‘’நெறைய தடவை நான் உங்ககிட்டயெல்லாம் கோபப்பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார்.

‘’ஐயோ கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க. நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்றுக்கோம்’’ என்றேன்.

‘’ஏண்டா, இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்.. இல்லையா’’ என்றார்.

சிரித்தபடியே மறுத்து தலையசைத்ததற்கு, ‘’நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தை சொல்றேனோ அவங்கள்லாம் நம்மோடயே இருந்து தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டு திருத்திண்டு நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கணும் இல்லியா.. இந்த ஆள் சரிவர மாட்டான். எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்கிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கலை சார். திருத்திக்கொண்டு வேலை செய்யறதா இருந்தா சரி. இல்லேன்னா கிளம்பிண்டே இருங்கோ அப்படின்னு தன்மையா சொல்லி கைகுலுக்கி அனுப்பிட மாட்டேனா’’ என்றார்.

விகடனின் ஒவ்வொரு துளியிலும் கலந்திருந்த அவருடைய உழைப்பு, அறிவு, அனுபவம் அவரோடு சேர்ந்து பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். காலை ஏழரை மணிக்கு அலுவலகத்தில் முதல் ஊழியராக நுழைந்து இரவு எட்டு மணிக்கு கிளம்புகிற வரையில் அவர் ஆற்றிய பணிகள்தான் பல நூறு எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் புகழையும் பெருமையையும் வாங்கிக் கொடுத்தது.

2

நிர்வாக ஆசிரியர் என்ற பதவிக்கு என்னை உயர்த்தியபோது, அறைக்குள் அழைத்துச் சொன்னார். நீங்க நிருபரா இருந்து நிர்வாக ஆசிரியர் வரைக்கும் வந்தாச்சு. எழுத்து நன்னா இருக்கு. அதனாலதான் சொல்றேன். இனிமே நீங்க எழுதறதை நிறுத்திக்கோங்கோ’’

புரியாமல் பார்த்தபோது,’’ எத்தனையோ எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களோடு கதைகளையும், கட்டுரைகளையும் படிச்சுப் பார்த்து திருத்தம் செய்து லட்சக்கணக்கான மக்களுக்கு கொண்டு போற பொறுப்பு உங்களுக்கு வந்திருக்கு. நீங்களும் ஒரு எழுத்தாளராக மனதளவில் இருந்தால், மற்றவர்களின் எழுத்தை நடுநிலையோடு படித்து ரசித்து அப்ரூவ் பண்ண மனசு வராது. நிர்வாக ஆசிரியரோடு கூடவே ஒரு எழுத்தாளனும் இருப்பான். என்னைவிட இவர்கள் சிறப்பாக எழுதுவதா? னு ஈகோ வந்தா, அது மற்ற எழுத்தாளர்களுக்கு செய்யுற துரோகமாக மாறிடும். அதனால்தான் சொல்றேன். நீங்க எழுதுறத நிறுத்திக்கோங்க’’ என்றார்.

‘’பத்திரிகை ஆசிரியரா இருக்குறதுக்கு முதல் தகுதி என்ன தெரியுமா? சாம்பார்ல உப்பு மாதிரி இருக்கணும். சாம்பாரோட எந்தத் துளியை எடுத்து ருசிச்சாலும் அதுல உப்பு இருக்கணும். ஆனா, கண்ணுக்குத் தெரியக்கூடாது. பூசணிக்கா துண்டு மாதிரி தனியா நீட்டிண்டு தெரியணும்னு அவசியம் கிடையாது. ஒரு ஆசிரியர் தன்னைத் தானே பிரதானப்படுத்திக்கிறது- அந்த பத்திரிகைக்கு எந்த வகையிலும் நல்லது கிடையாது.’’

மூல எழுத்து வடிவம் - கே.அசோகன்

தி இந்து தமிழ்திசை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்