தனியாக அமர்ந்து வேலை செய்வது உன்னத அனுபவம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்
4.1.2022
அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி
மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த
வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன்
அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு
சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை.
இந்த பத்தியை எழுதுகிற சமயம், அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி
கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு
எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம்.
என்னால் வெப்பமான எனது அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி
வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை
வாங்கும் தேவை உள்ளது.
கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில்
கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ஆங்கிலம் என்பது இன்றும் வேலைவாய்ப்பிற்கு வழியாக உள்ளது
எப்படி என்பதை விளக்கியிருந்தார்.
போனில் பிடிஎஃப் ஆக ‘சிறகுக்குள் வானம் – ஆர். பாலகிருஷ்ணன்’
எழுதிய நூலைப் படித்தேன். நூலை நன்றாக எழுதியிருக்கிறார். நூலின் அத்தியாயங்களில் நிறைய
கவிதைகளும் உண்டு.
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக