மணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து உளவு பார்த்த ரஷ்ய உளவாளிகள்!

 












உலக நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து ஒற்றறியும் ரஷ்ய உளவாளிகள்!


அண்மையில் பிரேசில் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி இரு நாட்டு காவல்துறையும், உளவு அமைப்பும் துப்பு துலக்கியதில் ரஷ்ய நாட்டின் உளவு அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் எனவும், ஆண், பெண் என இருவருமே மணமாகி பிரிந்து தனித்தனி நாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெரார்ட் டேனியல் காம்போஸ் விட்டிச், இவர் பிரேசில் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்றார். போகும் வரை தனது பெண் தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர், திடீரென மாயமானார். அவரைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. இதனால், பதட்டமான பெண்தோழி, விட்டிச் பற்றி காணவில்லை என்று புகார் கொடுத்து தேடத் தொடங்கினார். காவல்துறையோடு, சமூக வலைத்தளத்திலும் தேடுதல் நடைபெற்றது.

ஆஸ்திரிய – பிரேசிலிய பாரம்பரியத்தைக் கொண்ட விட்டிச், 3 டி பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரேசிலிய ராணுவத்திற்கு பல்வேறு கருவிகளை செய்து கொடுத்து ஆயுத வடிவமைப்பில் உதவி வந்தார். இவரது பெண்தோழி, பிரேசில் அரசின் விவசாயத்துறையில், கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

 காணவில்லை என புகார் கொடுத்த காரணத்தால் பிரேசில் வெளியுறவுத்துறை, மலேசியாவில் உள்ள ஃபேஸ்புக் இனக்குழுவினர், விட்டிச்சை வலை வீசி தேடி வந்தனர். ஆனாலும், விட்டிச் எங்கு போனார், என்ன ஆனார் என்று தகவல் கிடைக்கவில்லை. அப்போது அவரைப் பற்றிய தகவல் கிரீக்கின் ஏதேன்ஸ் நகரில் இருந்து வந்தது. உண்மையில் அதுபோன்ற அதிர்ச்சியான தகவலை விட்டிச்சின் பெண்தோழி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

வியன்னாவில் தனது தாத்தா, பாட்டியிடம் வளர்ந்ததாக விட்டிச் பெண்தோழியிடம் கூறியிருந்தார். அப்பா, ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். அம்மா, பிரேசில் நாட்டை பூர்விகமாக கொண்டவர் என பிழையில்லாத கதை கட்டியிருந்தார். அதை பொய் என்று கூறிய கிரீக் உளவுத்துறை, விட்டிச் என்ற பெயரில் போலியாக அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

 உண்மையில் விட்டிச், ரஷ்யாவில் பயிற்சி பெற்ற உளவாளி. வெளிநாட்டுக்காரர் போல நடிப்பதற்கான பயிற்சியை பெற்றவர். இவர், கிரீக் – மெக்சிகோ நாட்டை பூர்விகமாக கொண்ட புகைப்படக் கலைஞரான மரியா சல்லா என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். மரியா, ஏதேன்ஸ் நகரில் தையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். விட்டிச், மரியா என இருவருமே விளாதிமிர் புதினின் உளவு அமைப்புக்காக பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் ரஷ்ய நாட்டு உளவாளிகள் ஆறுபேர் இப்படி கண்டறியப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். உக்ரைன் போரால் ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள், பல்வேறு மேற்கு நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். எனவே, இப்போது பல்வேறு பெயர்களில் இருக்கும் ஸ்லீப்பர் செல்களான உளவாளிகளைத்தான் ரஷ்யா பயன்படுத்தியாகவேண்டிய நிலையில் உள்ளது. தூதரக அதிகாரிகள் எவரேனும்தான் உளவாளிகள் பற்றிய தகவல்களை கசியவிட்டிருக்கவேண்டும் என செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

விட்டிச்சின் குடும்ப பெயர் ஸ்மைரெவ். இவரது மனைவி பெயர் மரியா சல்லா. மரியாவின் இயற்பெயர், ஐரினா ரோமனோவா. ஐரினா, உளவுத்துறையின் திட்டம் தொடங்கும் முன்னரே விட்டிச்சை திருமணம் செய்துகொண்டார்.  அவரது குடும்ப பெயர் மரியாவிற்கும் வந்துவிட்டது. விட்டிச் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியவுடனே, மரியாவும் ஏதேன்ஸ் நகரில் இருந்து வெளியேறிவிட்டார். கடந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருவரும் நாட்டை விட்டு வெளியேறினர். இன்றுவரை அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.

ரஷ்ய உளவாளிகள் தம்பதிகளாக வாழ்ந்து உளவுபார்த்த சம்பவங்கள் உண்டு. ஆனால், திருமணம் செய்துகொண்டு தனித்தனியாக வெவ்வேறு நாடுகளில் வேறு அடையாளத்துடன் வாழ்ந்து உளவு பார்த்தது இதுதான் முதல் முறை.

மணமானவர்கள் என கிரீக் உளவுத்துறை நம்புகிறது. அவர்கள் சைப்ரஸ், கிரீஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சந்தித்து காதலை வளர்த்திருக்கலாம் என காரண காரியங்களை அடுக்குகிறார்கள். 

2

விட்டிச் பிரேசில் நாட்டின் ரியோவில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார். அங்குதான், அவருக்கு பெண்தோழி கிடைத்தார். அங்கு பெண்தோழியின் நண்பர்களிடம் போர்ச்சுகீசிய உச்சரிப்பில் பேசியுள்ளார். பலருக்கும் அது ரஷ்யனா, ஜெர்மனா, துருக்கியா என்று கூட தெரியாமல் தடுமாறியுள்ளனர். பெண்தோழியிடம் கூட மிகவும் அரிதாக தனது கடந்தகாலத்தைப் பற்றி பேசியுள்ளார். போர்ச்சுகீசீய உச்சரிப்பு, வியன்னாவில் வளர்ந்து வந்ததால் ஏற்பட்டது என கூறியுள்ளார்.

ஐரினா ஸ்மைரெவ், க்ரீசுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மெக்சிகோ பாஸ்போர்ட் மூலம் வந்துள்ளார். பெலிசில் பிறந்து வளர்ந்ததாக கூறியவர், க்ரீக்கில் பிறந்ததாக மருத்துவச் சான்றிதழையும் வைத்திருந்தார். ஆனால் அது போலியானது. பயணம் தொடர்பாக வலைப்பூ ஒன்றை வைத்ததிருந்த மரியா, அதில் பதிவிட்ட புகைப்படங்கள் பலவற்றிலும் தனது முகத்தை பூனை, தொப்பி, கேமரா என ஏதாவது ஒன்றால் மறைத்தபடியே புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்திருந்தார். க்ரீக் மொழியை மேம்படுத்த மொழி கற்பிக்கும் பள்ளியில் மாணவியாக சேர்ந்தார். பின்னாளில் அந்த பள்ளி தலைவரையே காதலித்து டேட்டிங் சென்று வந்தார்.

மிஸ்டர் அண்டர் மிசஸ் ஸ்மைரேவ் ஆகிய இருவரும், தப்பித்த வேகத்தைப் பார்த்தால் ரஷ்யாவிற்கு சென்றிருக்க வாய்ப்பு அதிகம் என க்ரீக் உளவுத்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.  கடந்த டிசம்பரில் ஸ்லோவேனியா நாட்டு உளவுத்துறையினர், அர்ஜென்டினா நாட்டுக்காரர்களாக தங்களை காட்டிக்கொண்ட திருமணமான தம்பதியை உளவாளிகள் என சந்தேகப்பட்டு பிடித்தனர். இவர்கள், ஜூம்ஜானா எனும் இடத்தில் ஆன்லைன் கலைக்கூடம் ஒன்றைத் திறந்து நடத்தி வந்தனர். இவர்கள், ரஷ்யாவின் எஸ்விஆர் உளவு அமைப்பின் அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது.

மரியாவை முழுமையாக  ரஷ்ய உளவாளி என க்ரீம் உளவுத்துறையினர் கூறவில்லை. அவரிடம் இருந்த சான்றிதழ் போலியானது என கண்டறிந்திருக்கின்றனர். விட்டிச், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டோகா வழியாக மலேசியா நாட்டிற்கு சென்றிருக்கிறார். 3டி பிரிண்டிங் தொடர்பான பயிற்சி என பெண் தோழியிடம் கூறியிருக்கிறார். பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்க தூதரகம் அருகே தனது 3டி பிரிண்டிங் அலுவலகத்தை திறப்பதற்கான முயற்சியை செய்து வந்தார். கோலாலம்பூரில் நான்கு  நட்சத்திர ஹோட்டலில் தங்கியவர்,  பெண் தோழியிடம் கேமரூன் ஹைலேண்ட் எனும் இடத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். சற்று ஓய்வெடுக்க நினைப்பதாக கூறிய விட்டிச், ஜனவரி 9 அன்று விமானநிலையத்திற்கு டாக்சியில் சென்றுள்ளார். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

மரியா, தனது தையல்கடையில் வேலை செய்த பெண்ணுக்கு தொலைபேசியில் அழைத்து அவர் அந்த கடையை வைத்துக்கொள்வதாக இருந்தால் கொடுக்கிறேன். இல்லையெனில் மூடிவிடுகிறேன் என கூறியிருக்கிறார். அவர் அழைத்த எண் கஜகஸ்தான் நாட்டுடையது.

 

ஷான் வாக்கர், ஜோர் சாயுர், டாம் பிலிப்ஸ்

கார்டியன் வீக்லி ஏப்ரல் 14, 2023


 pixabay

கருத்துகள்