உணவுக்குப் பின்னர்/ முன்னர் எப்போது நொறுக்குத்தீனியை சாப்பிடலாம்? - ஆசையோடு சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!
பொதுவாகவே,
எனக்கு உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதில் அலர்ஜி. ஆனாலும், அம்மாவுக்கு ஓட்டுநராக
சிலசமயங்களில் விழாவுக்கு போய், வண்டிக்கு அருகில் பாதுகாத்து நிற்பது வழக்கம். இந்தவகையில்
பெரியம்மா ஒருவரின் பேத்திக்கு பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. அவர் பெருநகரில்
டீ கடையோடு இணைத்து ஹோட்டல் ஒன்றை வைத்திருக்கிறார்.
அதை மெஸ் என்று கூறலாம். மைதாமாவைப் பயன்படுத்தி புதுமையாக தோசை, போண்டா, வடை சுடுவதில்
பெரியம்மா கடை மாஸ்டர்கள் விற்பன்னர்கள்.
பெரியம்மா, பெருநகரில் ஹோட்டல் மூலம் ஏராளமாக சம்பாதித்தார்.
இதன் காரணமாக, அவருக்கு, ஏராளமான ஆட்கள், நலம்விரும்பிகளாக நண்பர்களாக சேர்ந்துகொண்டனர். பேத்தியின் விழாவிற்கு ஏராளமான ஆட்கள் வந்து, இருசக்கரம்,
கார் என வசதிப்படி வந்து சிறப்பித்தனர். மண்டபத்தின் சாப்பிடும் பந்தி விரைவில் நிரம்பிவிட்டது.
அப்படியிருந்து போட்டி போட்டு சாப்பிட்டு வந்த
சித்தி ஒருவர், எனது அம்மாவிடம் ‘’எல்லாம் நல்லாத்தான் இருந்துதுக்கா. ஆனா ஒரு குறை.
ஐஸ்க்ரீம் தரலியே?’’ என்றார். ‘’ஒரு ஐஸ்க்ரீமில் என்னங்க, வெளியில் வாங்கிக்கொள்ளலாம்
வாங்க’’ என்று நான் சொன்னதில் இருந்து அவர் இன்றுவரை என்னிடம் பேசுவதில்லை. பின்னே
இலவசமாக கிடைப்பதும், சொந்தக் காசில் வாங்கி சாப்பிடுவதும் ஒன்றா?
சித்தி, மிகுந்த
சிக்கனக்காரர். பெரியம்மா நடத்தும் கடைக்கு அருகில் சொந்த வீடு கட்டி மூன்று கடைகளை
வாடகைக்கு விட்டு வருகிறார். அந்த வருமானம் போதாமல் ஹவுஸ்கீப்பிங் வேலைக்கும் போய்வருகிறார்.
இப்படியான வறுமையில சித்தி போன்ற ஏழைகளுக்கு வேறு என்ன கதி? ரேஷன் கடையில் வாங்கிய
பாமாயிலும், துவரம்பருப்பும்தான் தினசரி சமையல்.
மகா சிக்கனசாலியான
அவர்க்கு நீரிழிவு நோயும் கூட உண்டு. ஆனாலும் கூட ஐஸ்க்ரீம் தராத குறை மனதில் வித்தாய்
ஊன்றி வளர்ந்துவிட்டது. அவர் புலம்பியதில் தவறு ஏதும் கிடையாது. இன்று அனைத்து சுப
நிகழ்ச்சிகளிலும் உணவு உண்டபிறகு ஐஸ்க்ரீம், பீடா என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது.
விழா பந்தியில் சோறு தின்றுவிட்டு முத்தாய்ப்பாக
பாயசம் வாங்கிக் குடிப்பது போல ஐஸ்க்ரீமும் இன்று மக்களின் மனதில் குஷன் சேர் போட்டு
உட்கார்ந்துவிட்டது. இது சரியா, என்றால் அப்படியொரு கேள்வி எழுந்தாலே சரியில்லை என்றுதான்
அர்த்தம் என புரிந்துகொள்ளவேண்டும். உணவு சாப்பிட்டுவிட்டு செரிமானத்திற்காக சிறிது
நீர் அருந்தலாம். நான் திருநெல்வேலிக்காரன், தங்க கிளி பிராண்ட் கடலைமிட்டாய் வாங்கிச்
சாப்பிடாமல் ஆன்மா ஆறாது என்றால் உங்களுக்கு ஆரோக்கிய குறைவு விரைவில் உருவாகிவிடும்.
காலையில்
எழுந்ததும் ஒரு சொம்பு காபியில் சேவை நொறுக்கி போட்டு சாப்பிடும் வழக்கம் கோவில்பட்டியில்
இருக்கலாம்.ஆ னால் அனைத்து தமிழ்நாட்டு பகுதியில் இது ஒவ்வாது. வயல்வெளி சார்ந்த பகுதியில்
நீராகாரம் குடித்துவிட்டு போய் வேலை செய்துவிட்டு வந்து பிறகுதான் சாப்பிடுவார்கள்.
ஒருநாளைக்கு இரண்டு வேளை சோறு. இதுதான் அவர்களின் டயட். அந்தளவுக்குத்தான் அவர்களுக்கு
நேரம் இருக்கும். இதில், இறைச்சி, காய்கறி, சிறுதானியங்களின் கூழ் எல்லாமே அடக்கம்.
தினசரி சாப்பிடும்
உணவோடு டூநட், சீஸ்கேக் போன்றவற்றையும் இணைத்து சாப்பிடுபவர்களுக்கு நாளின் இடையில்
நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்கான ஆவல் எழுவதில்லைஎன வெளிநாட்டு உணவு வல்லுநர்கள்
கண்டறிந்திருக்கிறார்கள். சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உணவுக்கு முன்னேயும்,
பின்னேயும் சாப்பிடுவதில் வேறுபாடுகள் உள்ளன.
உடல் எடையைக்
குறைக்கவேண்டும். அதேசமயம், இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்ற
ஆசையைத் தவிர்க்க முடியவில்லை என நினைக்கிறீர்களா? உடனே அமுல் பார்லர் அல்லது ஸ்பென்சர்,
காமதேனு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று நெஸ்லே அல்லது அமுல் பிராண்டுகளின் கருப்பு
சாக்லெட்டுகளை வாங்கி உண்ணுங்கள்.
இந்த கருப்பு
சாக்லெட்டில் நல்ல கொழுப்பு உள்ளது. கோக்கோ அதிகமாகவும், பால் கொழுப்பு குறைவாகவும்
இருக்கும். சாக்லெட் சற்று கசப்பாக இருக்கும். கிலோ கணக்கில் மில்கிபார் வாங்கி சாப்பிட்ட
ஆட்களுக்கு இந்த கருப்புச் சாக்லெட் பிடிக்காமல் போகலாம். ஆனால் என்ன, உடல் எடையைக்
குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வறுத்த, பொரித்த சர்க்கரை கொண்ட உணவுகளுக்கு
கருப்பு சாக்லெட் சரியான தேர்வு.
காலையில்
எழுந்ததும் மார்வாடி போல பல் விளக்காமல் ஜிலேபி தின்னத் தோன்றுகிறதா? இப்பழக்கத்தை
உடனே கைவிட முடியாது. கைவிடக்கூடாது. எனவே, மெல்ல இனிப்பின் அளவைக் குறைத்து சாப்பிட்டு
நிறுத்தலாம். உடனே நிறுத்தினால் எழும் மனத்தூண்டல் பிரச்னையை சமாளிப்பது கடினம். நீங்கள் சீஸ்கேக், டூநட், மைதாகேக், பாதுஷா, லட்டு,
கேசரி, ஜிலேபி, செர்ரி என எதைச் சாப்பிட்டாலும் தன்னுணர்வோடு சாப்பிடுங்கள். அப்போது,
மோசமான பழக்கம் என்றாலும் அதை எளிதாக கைவிடமுடியும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க
முடியும்.
ஜேமி டுசார்ம், அலிசா சைபெர்ட்ஸ் ஆகியோர் டைம் வார
இதழில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக