கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

 






சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ



இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன.

பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறுவனங்கள், தொழிலதிபர்கள்  ஆகியோர் போற்றி புகழப்பட்டாலும் கண்டுபிடிப்புகள் என்ற துறையில் பின்தங்கித்தான் இருக்கிறோம்.

இப்படி கூறுவதால், இந்திய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்து சாதிக்க முடியாது என்பதல்ல. புதிய நிறுவனங்களை பிராண்டுகளை உருவாக்கி விற்கலாம். அவற்றின் பங்கு மதிப்பை உயர்த்தலாம். வருமானத்தை உயர்த்தலாம். இந்திய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கலாம்.

 உலகில் வேறு எந்த நாட்டினரையும் விட இந்திய பணியாளர்களே கடினமாக உழைக்கிறார்கள். ஆனாலும் சாம் ஆல்ட்மேன் கூறிய உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் கண்டுபிடிப்பு துறையில் நாம் முன்னேற முடியும்.

இந்திய தொழிலதிபர்கள், தமது நிறுவன ஊழியர்களுக்கு கண்டுபிடிப்பின் அருமை பெருமைகளைப் பற்றி நீண்ட சொற்பொழிவை ஆற்றுகிறார்கள். ஆனால் நிஜத்தில் கண்டுபிடிப்புகள் நிகழவே இல்லை என்பதே நம்புவதற்கு கடினமான உண்மை. இந்தியாவில் கண்டுபிடிப்புகளுக்கு தடையாக உள்ள காரணிகளை அறிவோம். வாருங்கள்.

படிநிலை கலாசாரம்

அதிகார படிநிலை சிந்தனை, மூத்தவர்களுக்கு மரியாதை என்பது இந்தியாவில் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிந்தனை என்பதை விட அனுபவம் கொண்டவர்களின் கருத்து முதலில் ஏற்கப்படுகிறது. அவர்களே முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள்.

கண்டுபிடிப்பு என்பது எந்த இடத்திலும் உருவாகி வரலாம். அதிகார படிநிலை, மூத்தவர்களுக்கு மரியாதை என்ற ரீதியில் நாம் பெற்றோர்களையும், நிறுவன இயக்குநர்களையும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. நிறுவனத்தில் உள்ளவர்களும் தங்களுக்கு கீழே பணியாற்றும் இளையவர்கள் புதிய ஐடியாக்களை கூறினால் அதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். புதிய சிந்தனைகளை இந்த வகையில் திட்டமிட்டு அழிக்கிறார்கள். இதனால், இளைஞர்கள் புதிய சிந்தனைகளை பிறருக்கு கூறாமல் வேலை செய்யத் தொடங்குகின்றனர். கண்டுபிடிப்பு என்பதற்கு புதுமையான மன அமைப்பும், செயல்பாட்டு முறையும் தேவை.

கடந்தகால பெருமை

பாரம்பரியம், தொன்மை என்பது மதிப்பிற்குரியது. பொக்கிஷமான பழங்கால புராண எழுத்துகளில்ல் அறிவு உருவாகி வளர்ந்தது உண்மை. இந்தியாவில் பழமையாக இருக்கும் ஒரே காரணத்தால், எழுதப்பட்டட சிந்தனை உடனே சிறந்ததாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட கருத்தில் இருக்கும் சமூகத்தில் புதிய கண்டுபிடிப்புகளைத் தவறானது என மக்கள் கருதுகிறார்கள். இந்த சூழலில் கண்டுபிடிப்புகள் எப்படி வளரும்?

அறிவியல் மனப்பான்மை

மேற்குலகின் அறிவியலில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இல்லை. ஆனால், நமது தொன்மையான புராணங்களில் அன்றே புதிய சிந்தனைகள் உண்டு என பேசுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். மாணவர்கள் அறிவியல் மனப்பான்மைப்படி அனைத்தையும் கேள்வி கேட்டு வளர வேண்டும். ஆனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பலரும் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்லவும், மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகவுமே முயன்று வருகிறார்கள். அறிவியல் ரீதியான சிந்தனை என்பது, ஆபத்தான வழியில் திருப்தியுறாமல் பயணிப்பதுதான். அதுதான் அதன் இயல்பும் கூட.  இந்த இயல்பிலான அறிவியல் மனநிலை, இந்தியர்களுக்கு குறைவாக உள்ளது..

காப்பி பேஸ்ட் கலாசாரம்

இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப்கள் பெரும்பாலும் மேற்குலகின் வெற்றிபெற்ற வணிக நிறுவனங்களின் காபி பேஸ்ட்தான்.  இந்தியாவில் உள்ள மக்கள்தொகை, அவர்களின் தேவைக்கு இதுபோல காப்பி செய்யப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடு தேவையாக இருக்கிறது. எனவே, இந்நிறுவனங்கள காப்பியடிக்கப்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தாலும் அவை வெற்றி பெற்றுவிடுகின்றன. எனவே, இதைப்போலவே புதிய நிறுவனங்களும் ஏராளமாக உருவாகின்றன. ஆனால், புதிய ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் நிறுவனங்கள் உருவாகவில்லை.

சுதந்திரமற்ற சமூகம்

இந்தியா சுதந்திரமான நாடு என்றாலும் இங்கே மாற்று கருத்துகளை, பார்வையை, கலையை முன்வைப்பது கடினமாகவே இருக்கிறது. கண்டுபிடிப்பு கலாசாரம் என்பது சுதந்திரமான கருத்துகளை அனுமதிக்கிற இடமாகவே இருக்கிறது. இருந்து வருகிறது.

சாம் ஆல்ட்மேன் கூறிய கருத்துகளை ஆட்சேபிப்பதை விட அவர் கூறியதில் உள்ள உண்மையை அடையாளம் காண்பது முக்கியம். அறிவியல் சிந்தனைகளை ஈகோவை விட்டு ஆதரிப்பதோடு அதற்கு விருதுகளை வழங்கவேண்டும். இந்திய தொழிலதிபர்கள் இதற்கான முயற்சிகளை செய்யவேண்டும். கடந்த கால விஷயங்களின் மீது பெருமை கொண்டிருப்பது போலவே புதிய கண்டுபிடிப்புகளின் மீதும் பெருமை கொள்ளும்படி செயலாற்ற வேண்டும். கண்டுபிடிப்புகள் என்பவை, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது.  

 

 

 

 

சேட்டன் பகத்

டைம்ஸ் ஆப் இந்தியா


கருத்துகள்