தற்கொலை செய்துகொண்ட கொலைக்குற்றவாளித் தந்தையை நிரபராதி என நிரூபிக்கப் போராடும் மகன்! ஹீலர்
ஹீலர்
கொரிய டிவி
தொடர்
ராகுட்டன்
விக்கி
தொண்ணூறுகளில்
அரசுக்கு எதிராக வேன் ஒன்றில் சென்றபடி செய்திகளை ஒலிபரப்பும் புரட்சி பத்திரிகையாளர்களாக
இருந்த ஐவர்களில் மூவர் மட்டுமே உயிரோடு இருக்கின்றனர். இருவர் இறந்துவிடுகிறார்கள்.
அதிலும் ஒருவர், அவரது ஆருயிர் நண்பராலேயே கொலை செய்யப்பட்டார் என காவல்துறை குற்றம்
சாட்டுகிறது.
அந்த குற்றச்சாட்டு
விலக்கப்படுவதற்கு முன்னரே, குற்றம் சாட்டப்பட்ட நண்பர் ஜியோன் சிக் தற்கொலை செய்துகொள்கிறார்.
இதனால் நண்பர்களுக்குள் என்ன நடந்தது என யாருக்கும் தெரிவதில்லை. நண்பரால் கொல்லப்பட்டதாக
கூறப்படும் ஒ ஜில் என்பவரின் மனைவி, அந்த நண்பர்கள் கூட்டத்தில் உள்ள கிம் மூன் சிக்
என்பவரை மணந்துகொள்கிறார். அவளுக்கும் கொல்லப்பட்ட ஓ ஜில் என்பவருக்கும் பிறந்த பெண்
குழந்தை, கிம் மூன் சிக் காரில் கூட்டிவரும்போது திடீரென தொலைந்துபோகிறது.
கிம் மூன்
சிக், குப்பைக்கிடங்கு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார். ஆனால், அவரது ஆருயிர் நண்பர்கள்
இறந்தபிறகு கொரியாவில் மகத்தான அரசியல் சக்தியாக, ஊடக தொழிலதிபராக மாறுகிறார். இது
அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தற்கொலை செய்துகொண்டவரான
ஜியோன் சூக்கின் மகன் உயிருடன் இருக்கிறார். ஆனால் அவரது அம்மா, இன்னொருவரை மணந்துகொள்கிறார்.
தனிமைப்படும் சியோ ஹியோன் ஹூ, ஹீலர் என்ற பெயரில் காசுக்கு வேலை செய்யும் திருடனாக
மாறுகிறார். அதுதான் அவரது முக்கிய பிழைப்பு. ஜியோன் சூக்கின் நண்பரான டீச்சர், சியோவுக்கு
தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுத்து அவனை திருடனாக மாற்றுகிறார். தொடரில் சண்டைகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களில் தாவி ஓடுவது, கார் சேசிங் தொடர் சோர்வு ஏற்படுத்தால் இருக்கிறது.
இவருக்கு அஜூம்மா என்ற ஹேக்கர், இன்னும் சிலர் உதவியாக
இருக்கிறார்கள். காசுக்காக சேர்ந்த திருட்டுக்கூட்டம்.
யார் பெயரையும்
கேட்காமல் வேலையை ஏற்றுக்கொண்டு செய்து முடிப்பது, பணத்தை எதிர்தரப்பு வங்கிக்கணக்கில்
போட்டுவிட்டால் ஒப்பந்தம் முடிந்தது. ஹீலரின் இமெயிலுக்கு தேவையான தகவல்களை அனுப்பினால்
போதுமானது. வேறு எந்த கேள்விகளும் கேட்க கூடாது. ஹீலரும் கேட்க மாட்டார். இப்படி செய்யும்
வேலை ஒன்றில் அவரது அப்பா பற்றிய தகவல்கள் தெரியவருகிறது.
ஹீலருக்கு
ஒரே நோக்கம். தனது அப்பா பெயரில் இருக்கும் அவமானத்தை துடைத்து எறிவதுதான். ஆனால்,
அவரது அப்பா பற்றி வேலை ஒன்றை ஏற்றுச் செய்யும்போதுதான் தெரிய வருகிறது. அந்த வேலை
நாட்டின் முக்கியமான ஜேஇ 2 என்ற நாளிதழ் நிறுவனத்திற்கு தொடர்புடையது. அதை நடத்துபவர்
செல்வாக்கு மிக்க ஊடக தொழிலதிபர் கிம் மூன் சிக். இவரது தம்பி ஏபிஎஸ் என்ற டிவியில்
நட்சத்திர செய்தியாளராக இருக்கிறார்.
கிம் மூன்
ஹோ என்பதுதான் நட்சத்திர செய்தியாளரின் பெயர். இவர், தனது அண்ணன்தான் நண்பர்களைக் கொன்று,
தனது அண்ணியின் பெண் குழந்தையை கடத்தி கொன்றுவிட்டார் என உறுதியாக நம்புகிறார்.
மூன் ஹோவைப் பொறுத்தவரை செய்தியை மக்களுக்கு பிரயோஜனமாக
இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். அதை நாட்டிலுள்ள ஊடக முதலாளிகள் எதிர்க்கிறார்கள்.
ஆனாலும் சமாளித்து வேலை செய்கிறார்.
ஏபிஎஸ் டிவியில் கிம் மூன் ஹோ வேலை போகாமல் இருக்க
காரணம், அவரது பிரிவு தலைவராக அவரின் காதலி காங் மின் ஜே இருப்பதுதான். அவர் அவரது
முன்னாள் காதலிதான். . காங் தனது காதலைக் கூறும்போது, தனக்கு முதல் காதல் இன்னொரு பெண்
மீது என்று சொல்லி அவரின் இதயத்தை கிம் நொறுக்கிவிடுகிறார். அதனால், காங் மின் ஜே சொல்லவும்
முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார். நேர்மையான காதலனை வேலைக்காக கண்டிப்பதும்,
பிறகு கொஞ்சுவதும் கெஞ்சுவதுமாக வேலை செய்கிறார். தனது காதலை முழுமையாக விட்டுக்கொடுக்கவும்
தயாராக இல்லாமல் தவிக்கிறார். இது ஒரு கதை. முக்கியப் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும்
தனிக்கதை உண்டு.
ஏபிஎஸ் டிவிக்கான
முக்கிய அடையாளமே கிம் மூன் ஹோதான். அவரது அண்ணன் கிம் மூன் சிக்கைப் பொறுத்தவரை அவருக்கு
புரட்சியில் பெரிய ஆர்வம் இல்லை. அவருக்கு புரட்சி பத்திரிகையாளர் குழுவில் உள்ள இளம்பெண்ணை
பிடித்திருக்கிறது. ஆனால், அதற்குள் அவர் அதில் உள்ள ஓ ஜில் என்ற சக செய்தியாளரை காதலித்து
மணந்துகொள்கிறாள். ஜியான் என்ற பெண் பிள்ளையும் பெற்றுக்கொள்கிறாள். அவளை எப்படியாவது
மனைவியாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது கிம் மூன் சிக்கின் லட்சியம். அவரது வாழ்வின்
பலவீனமும் அவள்தான்.
இவருக்கு
உத்தரவுகளை இடுபவர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர். எல்டர். அவர்தான் கிம் மூன் சிக்கிற்கு
தேவையான விஷயங்களை செய்துகொடுத்து அவரை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்.
இதற்கென தன்னுடைய ஆளை அவரது உதவியாளராக வைத்திருக்கிறார். அவர் மூலமே கிம்மை கண்காணித்து
கட்டுப்படுத்துகிறார்.
ஊடகம், அரசியல்,
பொதுபாதுகாப்புத்துறை என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆட்கள் கிம் மூன் சிக்கின் புறம்
இருக்கிறார்கள். கூடுதலாக, குற்ற காரியங்களை செய்யும் டபுள் எஸ் கார்ட் எனும் பாதுகாப்பு
நிறுவனத்தையும் கிம் வாங்கிவிடுகிறார்.
இவர்களை எதிர்க்கும்
மறுபுறம், பெரிய சக்தி ஏதுமில்லை. கிம் மூன் சிக்கின் தம்பி கிம் மூன் ஹோ இருக்கிறார்.
சியோ ஹியூங் ஹூ, தனது தந்தைக்கு துரோகம் செய்து
அவரை கொலை செய்த கிம் மூன் சிக்கை பழிவாங்க அவரது தம்பி கிம் மூன் ஹோவுடன் கைகோர்க்கிறார்.
கூடவே அவரது காதலி சா ஷின் சம்டே என்ற பத்திரிகையில் இணைய பத்திரிகையாளராக இருக்கிறாள்.
கிம் மூன் ஹோ, ஏபிஎஸ டிவியில் தனது வேலையை ராஜினாமா செய்பவர், சம்டே இணையப்பத்திரிக்கையை வாங்குகிறார்.
சா ஷின்,
பேக்கரி கடை நடத்தும் முன்னாள் வழக்குரைஞரின் மகள். அவளுக்கு உடல், மன ரீதியாக நிறைய
பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அதைக் கடந்து இணைய பத்திரிகையாளராக சாதிக்க நினைக்கிறாள்.
அவளுடைய ரோல் மாடல், ஏபிஎஸ் டிவியில் வேலை செய்யும் கிம் மூன் ஹோ. உண்மையில், கிம்
மூன் ஹோ அவளுக்கு மாமா முறை.
அவளை அவர்
பல்லாண்டுகளாக தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தேடுவதற்கு காசு வாங்கிக்கொண்டு ஹீலர்
உதவி வருகிறான். ஒருமுறை கிம் மூன் சிக் கொடுத்த வேலை சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டு,
அதன் அருகில் ஹீலரின் மின்னஞ்சல் முகவரி கிடக்கிறது. இதனால் காவல்துறை ஹீலரை கொலைகாரன் என கருதி வலை வீசி தேடுகிறது.
இதற்கு ஹீலர்
செய்யும் விதிமீறல்தான் காரணம். அவன், ஒருவரை கடத்தி பாதுகாப்பாக மீட்டு வரும்போது
அவர் சொல்லும் தகவல்படி தனக்கு வேலை கொடுத்த ஜேஇ 2 நாளிதழ் நிறுவனத்தை அறிகிறான். இதனால்
கோபமாகும் கிம் மூன் சிக், ஹீலரை மாட்டிவிட்டு கொல்ல நினைக்கிறார். இந்த செயல்பாடுதான்
சியோவுக்கு அவனது அப்பா பற்றி அறிய உதவுகிறது.
இந்த விளையாட்டு
எதுவரையில் செல்கிறது என்பதை இருபது எபிசோடுகள் பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும்.
இந்த டிவி
தொடரில் ஹீலருக்கான இடமே அதிகம். பத்திரிகை, ஊடகங்கள் எல்லாம் பின்னர்தான் வருகின்றன.
அதிலும் காவல்துறையை இந்தளவு முட்டாளாக, ஊழல் படிந்தவர்களாக எப்படி காட்டுகிறார்கள்
என்று தெரியவில்லை. ஒருமுறை பத்திரிகையாளர் கிம் மூன் ஹோ, ஆதாரங்களுடன் போலீஸ் அதிகாரி
ஊழல் செய்வதாக கூறுகிறார். ஆதாரங்களை கொடுக்கிறார். ஆனால் அவரை காவல்துறையினர் கைது
செய்து வழக்கு போட்டு சிறையில் தள்ள முடியவில்லை. நாளிதழ் உரிமையாளரின் உதவியாளர் விவகாரத்திலும்
இதுபோலத்தான் நடக்கிறது.
ஹீலரை பிடிக்க
ஒரு சைபர் போலீஸ் அதிகாரி கடைசிவரை முயன்று கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் ஒரு திருடனை
பிடிக்க ஏன் இத்தனை முயற்சி என்று கேட்டால் அவரிடம் அதற்கு பதில் இல்லை. சிறு திருட்டுகளை
செய்பவனை எதற்கு பிடிக்க அந்தளவு தீவிரமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.
அடுத்து அஜூம்மா
செய்யும் ஹேக்கிங் விஷயம். அவர் கணினியில் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் அதற்காக எத்தனை
கேமராக்களை அவர் இயக்க முடியும். விமான பயணத்தில் சென்ற பயணிகள் பட்டியலில் பெயரை மாற்றுகிறார்.
வான்டட் பட்டியலில் உள்ள ஹீலர் புகைப்படத்தை மாற்றுகிறார். இத்தனைக்கும் இவருக்கு எதிராக
டபுள் எஸ் கார்ட் முழு அமைப்பு வேலை செய்தாலும் தோற்கடிக்க முடியவில்லை. கூடுதலாக அஜூம்மாவின்
பழைய காவல்துறை நண்பர்களும் அவரை கைது செய்த துடிக்கிறார்கள். இடது கையில் ஸ்வெட்டர்
பின்னிக்கொண்டே வலது கையாலேயே அஜூம்மா அத்தனையும் சமாளிக்கிறார். பிரமிப்பாக இருக்கிறது.
டிவி தொடர்
சலிப்பாக இல்லை. சியோ ஹியூங் ஹூ வின்பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவரது
ஆசிரியர் பாத்திரம், அப்பா, ஹீலருக்கான குழு என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
சம்டே பத்திரிகை
வேலையில் சேர்ந்தபிறகு பார்க் பூ, ரிப்போர்டர் சா யூன் ஷின் ஆகியோருக்கு இடையிலான உரையாடல்,
நன்றாக இருக்கிறது. தன்னை பலவீனமாக பார்க் பூ காட்டிக்கொண்டு செய்யும் செயல்கள், காட்சி
ரீதியாக சிறப்பாக வந்திருக்கிறது.
இறுதிப்பகுதியை
அவசரமாக எடுத்திருக்கிறார்கள். அரசு அதிகாரிகள், காவல்துறை என அனைத்தையும் கட்டுப்படுத்த
திறன் கொண்ட எல்டரை எதிர்க்க ஒரு நல்ல திட்டம் கூடவா இல்லை. ஹீலர் போடும் திட்டம் மிக
பலவீனமானது. கிம் மூன் சிக், அவரது மனைவி பிரிந்துபோனதால் மனச்சிதைவுக்கு உள்ளாகிவிடுகிறார்.
கிம் மூன் ஹோ தனது காதலி காங்குடன் சேர்ந்துவிடுகிறார். சியோ தனது ரிப்போர்ட்டர் காதலி
சா யூன் ஷின்னுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார். போன தலைமுறையில் சா யூன் ஷின்னின் அப்பா,
ரிப்போர்ட்டர். சியோவின் அப்பா, புகைப்படக்காரர். அதே விஷயம் இப்போது திரும்ப அப்படியே
நடக்கிறது.
அஜூம்மா என்பவர்
யார், அவர் ஏன் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிரான சைபர் குற்றங்களை செய்யும் ஹேக்கராக
மாறுகிறார், ஷா ஷின்னுக்கு வன்முறையைக் கண்டால் இளைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதற்கு
என்ன காரணம், ஹீலரை வெறித்தனமாக தேடும் சைபர் அதிகாரியின் மனதில் என்ன இருக்கிறது,
கிம் மூன் ஹோவின் மனதில் உள்ள முதல் காதலி யார், என்பதற்கான பதில்களை தொடரில் தேடினால்
சுவாரசியமாக உள்ளது. அதை நீங்கள் ஆப் வழியாகப் பார்க்கலாம்.
ஷா ஷின்னின்
அப்பாவுக்கும், சியோவுக்கும் இடையிலான நகைச்சுவை மோதல் உரையாடல், அவரின் கஃபே முழுக்க
முன்னாள் குற்றவாளிகளே நிறைந்திருப்பது, சம்டே நியூஸ் இணையப் பத்திரிக்கையின் எடிட்டரின்
பதட்டமான கத்திக்கொண்டே இருக்கும் இயல்பு, பதற்றமும் சோகமும் ஏற்படும்போது ஷா ஷின்
சத்தமாக பாடலை பாடுவது, தனது அப்பா காதலியின் குடும்பம் சிதைய காரணமாக இருந்தார் என
அறிந்து சியோ காதலை கைவிடுவதா இல்லையா என தவிப்பது, பார்க் பூவைப் பார்க்காமல் ஷா ஷின் போனைப் பார்த்தபடியே
அழைப்புக்காக காத்திருப்பது, சியோ ஹூ மீது சொல்ல முடியாத பாசத்தைக் காட்டும் அஜூம்மா,
டீச்சர் என சோர்வில்லாமல் ரசிப்பதற்கு நிறைய
விஷயங்கள் இருக்கின்றன.
தொடரில் ஹீலர்,
காசுக்காக நியாயம் தர்மம் பார்ப்பதில்லை என கிம் மூன் ஹோ பேசுகிறார். உண்மையில் ஷா
ஷின் பொழுதுபோக்கு செய்திக்காக செய்யும் விஷயங்களை எதில் சேர்ப்பது, சைபர் அதிகாரி
மனம் முழுக்க வன்மத்தை வளர்த்துக்கொண்டு குறிப்பிட்ட ஆட்களை பிடிக்க அலைவது எதற்கு?
இருபுறத்தில் உள்ள ஆட்களுக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது. தீவிரம் உள்ளது.
ஷா ஷின்னைப்
பொறுத்தவரை முன்னணி செய்தியாளர் ஆகவேண்டும். அதுதான் அவளது கனவு. தற்காலிகமாக பொழுதுபோக்கு
செய்திகளுக்கு சினிமா, டிவி பிரபலங்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில்
அவளது பின்புலத்தை அறிய முயலும் ஹீலரால் கவரப்படுகிறாள். அவன் காசுக்காக வேலை செய்யும்
ஒருவன். ஆனால், அவன் மீது இன்னதென்று சொல்ல முடியாத ஈர்ப்பைக் கொண்டிருக்கிறாள் ஷா ஷின். அவளின் வன்முறையான இளமைக்காலம் யார் மீதும்
நம்பிக்கை வைக்காதே என்று கூறினாலும் அவள் சியோவை/ ஹீலரை மட்டுமே நம்புகிறாள். அவளது
நம்பிக்கை சியோவை மாற்றுகிறது. தனது திருட்டுத் தொழிலை விட்டுக்கொடுக்க முயல்கிறான்.
ஆனால் அது நடப்பதில்லை. அவனது அப்பா பற்றிய உண்மையை சியோ கூறுவது, அதைக்கேட்டு ஷா மெல்ல
பின் நகர்வது, அதைப் பார்த்து சியோ முகம் வெளிறிப்போவது என சில காட்சிகள் காதலையும் பிரிவையும் அற்புதமாக காட்டியுள்ளன.
ஜி சங் வூக், பார்க் மின் யங் ஆகியோர் நாயகன், நாயகியாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டிவி தொடரில் சா ஷின் அழகு பற்றிய வசனங்கள் வருகிறது. உண்மையாகவே பார்க் மின் யங் அவ்வளவு அழகாக இருக்கிறார். ஜி சங் வூக் தனது தற்காப்புக்கலை மூலம் அதிரடிக்கிறார்.
வேட்டையாடும்
இறந்த காலம்
கோமாளிமேடை
டீம்
Genres: Romance, Action, Comedy, Thriller
Directed by: Lee Jung-sub; Kim Jin-woo
Executive producer: Bae Kyung-soo
Original language: Korean
Original network: KBS2
https://asianwiki.com/Healer
கருத்துகள்
கருத்துரையிடுக