இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

 





எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர்







டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார்.

இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன.

தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது.

இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு செல்லும்போது  ஏற்படும் பிரச்னைகள் பற்றி கூறியுள்ளீர்கள் அல்லவா?

இருளர்கள் பாம்பு, தவளை, எலிகளை விற்று பிழைத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றை சாக்கில் கட்டி கொண்டு செல்லும்போது, அதை அறிந்த நடத்துநர்கள் அவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுவிடுகிறார்கள். 1970களில் இருளர்கள் மீது பேருந்து, ரயில், தங்கும் விடுதிகள் கடுமையான தீண்டாமையும் அவமானங்களும் இழைக்கப்பட்டன. பேருந்துகளில் அவர்கள் கொண்டு செல்லும் மூட்டைகள் பற்றி ஏராளமான ஜோக்குகள் உலவி வந்தன.

இன்று இருளர்கள் ஆராய்ச்சிக்கு தேவையான பாம்புகளை பிடித்துக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கென கூட்டுறவு சங்கம் உள்ளது. அதற்கு சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட வேன் கிடைத்துள்ளது. இன்று இருளர்கள் பலரும் மோட்டார்சைக்கிள்களை வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் வேலைக்கு செல்கிறார்கள். பாம்புகளைப் பார்த்தால் அதைப் பற்றி வாட்ஸ் அப் வழியாக புகைப்படம் எடுத்து பகிர்ந்து அதன் இனம் பற்றி உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் இதுவும் கூட சங்கத்தில் உரிமம் பெற்ற சிலருக்கு மட்டுமே சாத்தியமாகி உள்ளது.

நாவல் தனது போக்கில் பாதி வழியிலேயே அரசியல் தன்மை கொண்டுவிடுகிறது. தேனீ குடும்பத்திற்கு, வனப்பாதுகாப்பு சட்டம் பற்றிக் கூறப்படுகிறது. பாம்பை பிடித்து கொன்று அதன் தோலை உரித்து விற்பவர்களை சிறையில் அடைப்பார்கள் என கூறுகின்றனர். பாம்பை பிடித்து அதன் தோலை விற்பது மட்டுமே நமக்கு தெரிந்த வணிகம் என தேனீயின் தாத்தா கவலைப்படுகிறார். பாம்பு பிடிக்க தடை விதித்தால் இருளர்களின் முக்கிய வருமான ஆதாரமே இழக்கப்பட்டுவிடும் என இருளர் இனக்குழுவினர் பயத்திலும் கவலையில் ஆழ்வது நூலில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுக்க எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள், ஆதிவாசி இன மக்களை பாதித்துள்ளது. அரசு, பழங்குடி மக்கள் பாம்புகளைப் பிடிப்பதை திடீரென தடை செய்ததை இதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டலாம்., எனவே, நான் டெர்மைட் ஃபிரை நூலை இதை மையமாக வைத்து உருவாக்கினேன் இருளர்களுக்கு வேறு வாழ்வாதாரம் எதையும் கூறாமல் இப்படி சட்டம் உருவாக்கியது, அவர்களது வாழ்க்கையை கடுமையாகப் பாதித்தது. பாம்புகளின் பாதுகாப்பு சட்டம் சரியானபடி பாதுகாப்பைத் தருகிறது என்பது உண்மை.

இன்று பழங்குடிகளின் நிலங்களைத் தொழில்துறையினரும், குடியிருப்பு கட்டட வல்லுநர்களும்  ஆக்கிரமித்துள்ளனர். பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில் அரசு அதைச் சுற்றுலாவுக்கு எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உங்கள் நாவலுக்கு தேவையான விஷயங்களை எப்படி இருளர் இனக்குழுவிடமிருந்து பெற்றீர்கள்?

நாவலுக்கு பெற்ற தகவல்கள் அனைத்துமே எனது ஞாபகத்திலிருந்து கிடைத்தவைதான். இருளர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய தொன்மையான கலாசாரப்படி வாழ்ந்துவருகிறார்கள். என்னுடைய முன்னாள் கணவர் ரோமுலஸ் ஒயிட்டேகர், இப்படிப்பட்ட இருளர்களை வெள்ளை இருளர்கள் (ஒயிட் இருளா) என்று குறிப்பிடுகிறார். நான் அவர்களுடன் எலி, கரையான், பாம்பு, முதலை வேட்டைகளுக்கு சென்றிருக்கிறேன். எனது மகனின் விளையாட்டுத் தோழர்களாக இருளர்களின் பிள்ளைகள் இருந்தனர். ஒருமுறை தேள் வேட்டைக்கு சென்ற எனது மகனின் நண்பரான சின்ன காளி என்பவர் எனக்கு பரிசாக தேள் ஒன்றைப் பிடித்துக்கொண்டு வந்தார்.

 வனப்பாதுகாப்பு சட்டம் அமலானபிறகு, இருளர்களின் வாழ்க்கை நாடு முழுவதும் எப்படியிருக்கிறது?

மறுவாழ்வு என்பது, இருளர்களில் ஒரு பகுதிக்கு மட்டும் பயன் தருவதாக உள்ளது. இருளர்களில் அனைவருமே பாம்புகளை பிடிப்பவர்களாக இல்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம். பாம்புகளை இன்று பிடித்து வருபவர்களும் நிஜத்தில் முறையாக உரிமம் பெற்றவர்களாக இல்லை.

உலகநாடுகளில் இதுபற்றித்தான் நிறைய விவாதித்து வருகிறார்கள். இதிலிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். தென்னாப்பிரிக்க தேசியப் பூங்காக்களில் , பழங்குடியினருக்கு பயிற்சி அளித்து அவர்களைப் பூங்காக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். இதனால், அவர்கள் தாங்கள் செய்யும் பணியில் பெருமையும் நம்பிக்கையும் கொண்டு பணியாற்றுகிறார்கள். உலகம் முழுக்க இப்படி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.  ஆனால், நடைமுறையில் அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறைவு. நிறைய நாடுகளில் ஆதிவாசிகளின் அறிவை வளமாக பார்க்கிறார்களே ஒழிய, அவர்களின் நலன்களுக்கு ஏதும் செய்வதில்லை.

ஆதிவாசிகளில் இருளர்களை  பொது சமூகம் எளிதாக ஏற்றுக்கொள்வதாக கூறுகிறீர்கள். ஏன் அப்படி?

இருளர்கள்,அவர்களின் கலாசாரப்படி,மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. இதனால், அவர்கள் இனப் பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதற்கு கூட வாய்ப்பு கிடைக்கிறது. பாம்பு, எலி பிடிக்கும் திறன்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

 நிறுவனங்கள், குடியிருப்பு கட்டுமான நிறுவனங்கள், பிற இனக்குழுவினர் இருளர்களின் கூட்டுறவு சங்க உதவி மூலம் பெருச்சாளிகளைப் பிடிக்கின்றனர். எலிகளைப் பிடித்து அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல. பல்வேறு இன விலங்குகளைப் பிடிக்க நிறைய நுட்பங்கள் தேவைப்படுகின்றன. எலிகள், நம் நாட்டில் உற்பத்தியாகும் பெருமளவு தானியங்களைத் தின்று அழிக்கின்றன. எனவே, இருளர்களை அதைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம். எலிகளை அழிப்பதற்கான பிரிவை இருளர்களைக் கொண்டே தொடங்கமுடியும்.

திவ்யா காந்தி

இந்து ஆங்கிலம்

 


கருத்துகள்