'காதல் போதும்' - காதலன், 'செக்ஸ் அவசியம்' - காதலி! மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா

 









மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா




மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர்


மை  ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர்

ஜப்பான் டிவி தொடர் ஜே டிராமா

9 எபிசோடுகள்

ராகுட்டன் விக்கி ஆப்

 

தலைப்பில் தெரிகிறது அல்லவா…. அதுதான் கான்செஃப்ட். செக்ஸ் காமெடியை மையப்பொருளாக கொண்ட தொடர். ஷேர்ட் கோ வொர்க்கிங் பிளேஸ் அங்கு நிறையப் பேர் வேலை செய்கிறார்கள். கலைப்பொருட்களை ஆன்லைன் வழியாக வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்தில் நாயகி, அவளது கல்லூரி கால தோழி, நண்பன் ஆகியோர் வேலை செய்கிறார்கள். அது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். கல்லூரித் தோழி கேட்டுக்கொண்டதற்காக இந்த தொழிலுக்கு நாயகி வருகிறாள். மொத்தம் இரு பெண்கள், ஒரு ஆண் என மூவர் வேலை செய்யும் நிறுவனம்.

கோ வொர்க்கிங் ஸ்பேஸில் பொருட்களை புகைப்படம் எடுத்து அதை சந்தைப்படுத்தும் தொழிலில் உள்ள மூவரை, சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் புகைப்படக்கலைஞன் அழகாக கூடவே அமைதியாக இருக்கிறான். அவனுக்கும் சேர்த்து புறவயமான இயல்பு கொண்ட  நாயகியே பேசுகிறாள். தொழில்ரீதியாக நாயகியின் தோழி புகைப்படக்கலைஞன், சுயாதீனக் கலைஞன் என்பதால் அவனை தனது தொழிலுக்கு பயன்படுத்துகிறாள். இப்படித்தான் நாயகிக்கு நாயகனுடன் அறிமுக உறவு ஏற்பட்டு பிறகு தனிப்பட்ட உறவுமுறையாக மாறுகிறது.

நாயகி மூத்தவள், நாயகன் இளையவன். இருவரும் காதலிக்கிறார்கள். டேட்டிங் செல்கிறார்கள். ஆனால் நாயகன் ஒருமுறை கூட நாயகியை கட்டிப்பிடிக்கவில்லை. இதழை எச்சிலால் நனைக்கவில்லை. இடதுகையில் முத்தம் வைக்கவில்லை. அதேசமயம் அவனுடன் அவள் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது உண்மை.

 ஆனால், உடல் ரீதியான தொடர்பில்லையே என நாயகி வருத்தப்படுகிறாள்.இதை காதலனிடம் எப்படி கேட்பது என தடுமாறுகிறாள். தொழில்முறையாக வேலை செய்யும் இடத்தில் உள்ள தோழி, நண்பனிடம் ஆலோசனை கேட்க அவையெல்லாம் விபரீதமான திசைக்கு கொண்டுபோய் சேர்க்கின்றன.

இதனால், நாயகி, ஒருமுறை பொறுமை இழந்து நாயகனை நீ என்னோட ஏன் செக்ஸ் வெச்சுக்க மாட்டேங்குற என கேட்டுவிடுகிறாள். ‘’காதலில் அதைத்தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கே, அதை நீ ஏன் பார்க்க கூடாது’’ என அவன் கூறுகிறான். இப்படி சண்டை போட்ட காதலன் அவளைப் பிரிந்து வேலைக்கென வெளிநாடு சென்றுவிடுகிறான். நாயகிக்கு வயது 31. அவளுக்கு காதலும், அதன் அடிப்படையில் வரும் காமமும் தேவை. அதில் இருந்து அவள் மாறுவதில்லை. செக்ஸ் காதல் வாழ்க்கைக்கு முக்கியம் என நினைக்கும் நாயகியும், செக்ஸ் இல்லாமல் இரண்டு பேரும் காதலிக்கு முடியும் என நம்பும் நாயகனும் இணைந்தார்களா என்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

ஆனால் அது நகைச்சுவையாக அந்தளவு சேர்மானமாக கூடி வரவில்லை என்பதே பெரிய சோகம்.

தொடரில் இரண்டுவித உறவுகள் உள்ளன. ஒன்று, காதலில் தொடங்கி காமத்தை சென்று சேர்வது. அடுத்து காமத்தில் தொடங்கி காதலுக்கு பைபாஸ் ரோட்டில் வந்து சேர்வது.

முதல் கொள்கைக்கு நாயகனும், நாயகியும் உதாரணம். இரண்டாவதுக்கு நாயகியின் தோழியும், அவளது செக்ஸ் இணையான நண்பன் மோமோருவும் உதாரணம்.

பெண், காதலில் காமத்தில் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். அதை தனது காதல் இணையிடம் கேட்டுப் பெறவேண்டும் என்பதை டிவி தொடர் இயக்குநர் தெளிவாக கூறிவிடுகிறார். இந்த முழுத் தொடருமே, நாயகியின் பார்வையில்தான் செல்கிறது. அவர் கேமராவைப் பார்த்து நம்மைப் பார்த்து பரவசமாக பேசிக்கொண்டு இருக்கிறார். கதை நகர்வில் நாயகியின் உணர்ச்சி அந்த நேரத்தில் எப்படியிருக்கிறது என புரிந்துகொள்ள இந்த உத்தி உதவுகிறது. அதை நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள்.

புகைப்படக்கலைஞனான நாயகன், அகவயமானவன். இந்த டிவி தொடரில் கூட தனது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவது மிக குறைவாகவே உள்ளது. அதற்கான காரணங்கள் தொடரில் உள்ளன. நீங்களே அதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அதை பெரிய ரகசியம் என கூற முடியாது. ஆனாலும், அதை பார்த்து தெரிந்துகொள்ளும்போது சற்று சுவாரசியமாக இருக்கும். இப்படிப்பட்ட குண இயல்பு கொண்டவனை காதலிப்பவள் சற்று புறவயமானவள். கோபமோ சந்தோஷமோ உடனே அதை வெளியே கொண்டும் ஆள். நாயகனோ நெற்றியில் விழும் முடியை  நாசூக்காக ஒதுக்கிக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேமராவோடு பயணிக்க கூடியவன்.  உண்மையில் அவனுக்கு அதிகளவு நண்பர்கள் கிடையாது. சுயாதீன புகைப்படக் கலைஞன் என்பதால் பயணித்துக்கொண்டே இருக்கிறான். இந்த வகையில் யோசித்து அவனேதான் தனது வாழ்க்கையை முடிவு செய்கிறான்.

நாயகியைப் பொறுத்தவரை அவள் தனது காதல் உறவுக்கு சரியான மதிப்பு கொடுக்கிறாளா என்றே தெரியவில்லை. தனது அந்தரங்கமான பிரச்னைகளை நெருங்கிய தோழிக்கு பகிர்வது சரிதான். ஆனால், ஆண் நண்பனிடம் போய் அதை சொல்லி வருத்தப்படுவது வினோதமாக இருக்கிறது. அவள் நண்பனோ, அவளை எப்படியாவது படுக்கையில் வீழ்த்தி அனுபவித்துவிட துடிக்கிறான். அதற்கு அச்சாரமாக நாயகன், நாயகிக்கு முத்தம் கொடுத்துவிட்டு உடலுறவு கொள்ள தயங்கும் இரவை தனக்கான வாய்ப்பாக பயன்படுத்துகிறான். உடலுறவு கொள்ளவில்லை என நாயகி புலம்பும்போது, அந்த சூழலைப் பயன்படுத்திக்கொள்ள அவளுக்கு டக்கென் முத்தம் கொடுக்கிறான். அதை நாயகி எதிர்பார்ப்பதில்லை. உடனே கோபம் கொள்கிறாள். ஏனெனில், அவள் காதலன் முதன்முதலில் முத்தம் கொடுத்ததை நினைத்து சந்தோஷப்படுகிறாள். மேலும், அது ஆழமாக தொடரவில்லையே என ஏக்கமும் இருக்கிறது.. இந்த நேரத்தில் நண்பன் மோமோரு முத்தம் கொடுத்தது, அவளது காதல் முத்தத்தை அழிப்பதாக மாறுகிறது. எனவே, அவளுக்கு கோபம் தருகிறது. அவளுக்கு மோமோரு முத்தம் கொடுப்பதை தூரத்தில் இருந்து நாயகன் பார்த்து மனமொடிந்து போகிறான்.

அவளுக்கு உடலரீதியான தேவை இருக்கும் என அவளுடைய அறையை விட்டே வெளியேறுகிறான். பிறகு, அந்த உறவு மெல்ல விலகலாகிக்கொண்டே வருகிறது. செக்ஸ் காதலுக்கு தேவை என மோமோரு, ஸ்டார்ட்அப் தோழி கம் முதலாளி என பலரும் நாயகனை வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நண்பர்கள் தங்களுக்குள் அறிவுறுத்தல்களை செய்துகொள்வது வேறு. ஆனால், நாயகனின் காதலி தனது ஆண் நண்பனிடம் செக்ஸ் உறவு பற்றி புலம்பி அவன் வந்து நாயகனிடம் பேசுவதை நினைத்துப் பாருங்கள். இத்தகைய தர்மசங்கட காட்சிகள் தொடரில் உண்டு. அகவயமான காதலை நேர்மையாக ஒப்புக்கொள்கிற, திருமணம் செய்யும் முடிவில் உள்ளவன்தான் நாயகன். அவனுக்கும் முந்தைய காதல் இருக்கிறது. ஆனால், அந்த உறவிலும் நேர்மையாகவே இருக்கிறான். அவன் முன்னாள் காதலியை காயப்படுத்திவிட்டு வெளியேறுவதில்லை. அவனது குணத்தைக் கண்ட காதலி, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட தேடிவந்து காதலை மீண்டும் உயிர்ப்பிக்க நினைக்கிறாள்.

நல்ல குணங்கள் நாயகனுக்கு நானூறு உண்டு. அதை அவனை காதலிக்கும், காதலித்த பெண்ணும் கூட உணர்கிறார்கள். உடலுறவு போன்ற அந்தரங்கமான விஷயத்தை கூகுள் நியூஸ் போல பகிர்வதை எப்படி அவன் பார்ப்பான்? உண்மையில் நண்பர்களிடம் அலுவலகம், பார், மொட்டைமாடி என புலம்பும் நாயகி, நாயகனிடம் மனம் விட்டு பேசுவதை, அவனுக்கென உள்ள மனத்தடைகளை கடந்து வர நேரம் ஒதுக்காதவளாக இருக்கிறாள். இது, நாயகியின் பாத்திரத்தை மிகவும் குறுகலான இயல்பில் மாற்றுகிறது.

நாயகியைப் பொறுத்தவரை அவளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர ஒரு காதலன் இருக்கிறான். அவன் வைத்திருக்கும் ஸ்பாவிற்கு நாயகனுடன் செல்லும்போது அவனைப் பார்த்து பேசுகிறாள். அவன் யாரென நாயகனே மெல்ல புரிந்துகொள்கிறான். அதை வெளிப்படையாக கூறினால் நாயகன் காயம்படுவானோ என நாயகி நினைக்கிறாள். வயது வேறுபாடு வேறு இருக்கிறது.

நல்லெண்ணம் கொண்ட அன்பு நாயகனை விட்டு பிரியக்கூடாது என நாயகி நினைக்கிறாள். அதேசமயம் உடலுறவு அவளுக்கு முக்கியமானதாக தோன்றுகிறது. உணர்வில் பொருந்திவிட்டோம். உடல்மொழியில் சரி என்றால் மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிருக்கிறது.

ஆனால் நாயகனுக்கு செக்ஸ் என்பதே சற்று சிக்கலானது. ஏனெனில் அவனுக்கு உளவியல் ரீதியாக மனத்தடைகள் இருக்கின்றன. அதை அவனது அம்மா, கூறுவது தொடரில் நல்ல காட்சி. நாயகன், நாயகி என இருவருமே ஒருவருக்கொருவர் மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறார்கள்.

உடலுறவு பற்றிய வாக்குவாதத்தில் நாயகன் ,’’ உடலுறவுக்கு அவளது நண்பன் இருக்கிறானே அவனிடம் போ’’ என கோபமாக சொல்லிவிட்டு போய்விடுவான். ஆனால் நாயகிக்கு காதல் பற்றியும், நட்பு பற்றியும் தெளிவு இருக்கும். நண்பன் மோமோரு அவளை படுக்கையில் வீழ்த்த ‘’காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ‘’இன்னைக்கு நாம் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா’’ என்று நேரடியாக கேட்டும் கூட காதலில்லாமல் காமம் மட்டும் இல்லை என அதை மறுத்துவிடுவாள். நாயகனுக்காக அவள் காத்திருப்பாள்.

நாயகனும், நாயகியின் தேவையை புரிந்துகொள்வது முக்கியம் என மனம் மாறி மணம் செய்வதற்கான மோதிரத்தோடு வந்து அவளிடம் திருமண கோரிக்கையை கூறுவான். அந்த இரவு இருவரும் ஒன்றாக கூடுவார்கள். இருவரின் காதல் உறவு மலருகிற இடம் அதுதான். தொழில் வாழ்க்கையிலும் நாயகன் மெல்ல உயருவான். நாயகியே, நாயகனைத் தேற்றி அமைதிபடுத்தி உறவுகொள்வதாக காட்சி அமைத்திருந்தால் அவளின் பாத்திர வடிவமைப்பு அற்புதம் என கூறிவிடலாம்.

அதேசமயம், நாயகியை ஓரிரவு மட்டும் அனுபவிக்க நினைக்கும் நண்பன் மோமோரு, தனது தோழியும் முதலாளியுமான பெண்ணுடன் மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வான். தோழியைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது மன அழுத்தம் போக்கும் மருந்து. அவ்வளவுதான். அதை காதல் என்று உளறுவதில்லை. உனக்கும் ஒரு தேவை, அதைப்போல எனக்கும் ஒரு தேவை. ஃபிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ். மோமோரு, பத்துக்கும் மேற்பட்ட முறை அவன் தோழியோடு உறவு கொண்டாலும் அந்த நினைவுகள் அவனுக்கு அது காதல் உறவாக மலரவில்லை என்ற ஏக்கதை உருவாக்குகிறது. ஒருவகையில் இப்படி ஒரு எண்ணம் உருவாக, காதல் மீது நாயகி கொள்ளும் பற்றும், அவளது வாழ்க்கையும் கூட காரணமாக இருக்கலாம்.

பாலியல் தேர்வு என்பது பெண்ணுக்கு அடிப்படையான உரிமை. அவள் விருப்பப்படி அதை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த உறவில் காதல், காமம், ஊடல், கூடல் வருவது இயல்பானது. பரஸ்பரம் அந்த உறவுக்கு நேர்மையாக இருக்கிறார்களா என்பதே முக்கியம். அந்த வகையில் பெண்ணின் மன உணர்வுகளை, பாலியல் சார்ந்த விஷயத்தில் வெளிப்படையாக பேசியதில் காட்சிபடுத்தியதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர். தொடரில் நாயகனை விட நாயகிக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். அதை அவரும் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.தொடரில் வரும் முக்கியப் பாத்திரங்கள் நான்குதான். அவையும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

கோமாளிமேடை டீம்


கருத்துகள்