கரிம எரிபொருட்களால் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவு!

 




கார்பன் டை ஆக்சைடு வெளியீடு/ காலநிலை மாற்றம்






கரிம எரிபொருட்களை எரிப்பதுதான் கார்பன் டை ஆக்சைடு உலகில் அதிகளவு பரவுவதற்கு காரணமாக உள்ளது. நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றை மின்சாரம் உற்பத்தி செய்ய ஆதாரமான பொருட்களாகப் பயன்படுத்துகின்றனர்.

வீடுகளில் சமைக்கவும், கதகதப்பு ஊட்டவும் கூட பயன்பாட்டில் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தொடங்கிய காலம் முதற்கொண்டு, நிலக்கரி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இன்று வரையும் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், அதன் விலை ஒப்பீட்டளவில் பிற பொருட்களை விட குறைவு. மலிவு. இதனால்தான், சூழல் மாநாட்டில் கார்பன் இலக்குகளை தூரமாக தள்ளிவைத்துக்கொண்டே நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு உள்ளது. இவற்றை பெரும்பாலும் சரக்குப் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

2015ஆம் ஆண்டு, உலகில் வெளியான கார்பன் டை ஆக்சைடு அளவு 85.5 சதவீதம். இதற்கு, கரிம எரிபொருட்களே முக்கியமான காரணம்.

கச்சா எண்ணெய்யை அகழ்ந்தெடுத்து அதை தூய்மை செய்து பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய், தார் , பிளாஸ்டிக், கனிம எண்ணெய் என பல்வேறு வகையாக பிரித்து பயன்படுத்துகின்றனர்.

மரங்கள், விலங்குகள், பாறைகள், கடல், மனித செயல்பாடு ஆகியவற்றில் கார்பன் டை ஆக்சைடு பங்களிப்பு உண்டு. கார்பன் டை ஆக்சைடு காரணமாக காலநிலை மாற்றம் ஏற்படுகிறது என்பது அறிவியல் உண்மை. 2014ஆம் ஆண்டு இதை 91 சதவீத அறிவியலாளர்கள் ஏற்றார்கள். 2019ஆம் ஆண்டு 100 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

உண்மையை ஏற்பதால் காலநிலை சார்ந்த சூழல் மாதிரிகளை உருவாக்கி ஆய்வு செய்து ஐஸ் உருகுவது, தீவிர வறட்சி கொண்ட பாலைவனங்கள் உருவாகுவது, கடலில் நீரின் மின்னோட்டம் மாறுவது உண்மைகளை உலகிற்கு கூறலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

காற்றாலை, சூரிய ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வது புதிதான ஒன்றல்ல. ஆனால் இதற்கான அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கி இயக்குவதும், இலக்கை எட்டுவதும்தான் கடினமானதாக உள்ளது. இதற்கு அரசின் கொள்கைகள், சட்டங்களோடு வீடுகளில் பயன்படுத்தும் மின்பொருட்களைக் குறைத்துக்கொள்வது அவசியம். மின் சிக்கனத்தை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே நிலக்கரியைக் கைவிட்டு புதுப்பிக்கும் ஆற்றலுக்கு மாற முடியும்.

2020ஆம் ஆண்டு அளவில், உலகளவில் வெப்பம் 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதை இப்போதே கட்டுப்படுத்தாவிட்டால் அடுத்து, 1.5 டிகிரி செல்சியஸ், 2 டிகிரி செல்சியஸ் என அதிகரித்துக்கொண்டே செல்லும். இப்படி அதிகரிக்கும்போது காலநிலையில் நிறைய அம்சங்கள் தீவிரமான மாற்றத்திற்கு உட்படும்.

பவளப்பாறைகள் ஏற்கெனவே அழிந்து வருவதைப் பற்றி கூறியுள்ளோம். அவை முற்றாக அழிவதை நாம் காண்போம். எதிர்காலத்தில் காட்டுத்தீ அதிகரிப்பு, வெப்ப அலைகள், வெள்ள பாதிப்பு ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வார்கள்.

உலகநாடுகளில் ஐந்து நாடுகள் மட்டுமே கார்பன் வெளியீட்டை ஜீரோ அளவுக்கு குறைப்பதாக திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளன. மீதியுள்ள நாடுகள் இதுபற்றி பெரிய திட்டங்கள் எதையும் கூறவில்லை. ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகள் சட்டப்பூர்வமாகவே கார்பனைக் குறைக்க திட்டங்களை உருவாக்கிவிட்டன.

காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை குறைக்க இரு வழிகள் உண்டு. ஒன்று, கார்பன் வெளியீட்டைக் குறைத்தால் காலப்போக்கில் அதன் பாதிப்பு குறையும். அடுத்து, இப்போது வளிமண்டலத்தில் உள்ள கார்பனை கவர்ந்து அதை குறைக்கும் செயல்பாடுகள். இந்த வகையில் செயற்கையாக காடுகளை உருவாக்கலாம். இயற்கை காடுகளைப் போல பயன்கள் கிடைக்காது என்றாலும் குறைந்தபட்சம் காலநிலை மாற்ற பிரச்னையை சற்றேனும் குறைக்கமுடியும். இதற்கு கார்பன் இல்லாத மாற்று ஆற்றல் ஆதாரங்களை தேட வேண்டும். அந்த துறை சார்ந்து முதலீடு செய்யவேண்டும். ஆராய்ச்சிகளை செய்யலாம். மக்கள் தம் வாழ்க்கையில் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் விதமான செயல்களை செய்யலாம். தனிப்பட்ட போக்குவரத்தை தவிர்த்து பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

மக்கள்தொகை குறைப்பை பலரும் பேசுவதில்லை. கார்பன் வெளியீட்டைக் குறைப்பதில் மக்கள்தொகையும் முக்கியமாக பங்காற்றுகிறது. 150 மில்லியன் மக்கள் தொகை 500 மில்லியனாக உயர 2,700 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டில் இந்தளவு எண்ணிக்கை கூடியது. 2050இல். இந்த எண்ணிக்கை 9.7 பில்லியனாக மாறும் என ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? மருத்துவம், வேளாண்மை, தொழில்நுட்ப வளர்ச்சி என அனைத்துமே முன்னேறியிருக்கிறது. மக்களின் ஆயுள் அதிகரித்திருக்கிறது. குழந்தைகளின் இறப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. 1650ஆம் ஆண்டு தொடங்கி உலகம் முழுவதும் மக்கள்தொகை பெருக்கம் பதினாறு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருகிறது.

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.

https://pixabay.com/illustrations/new-york-climate-change-5160499/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்