உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

 








நரசிங்கபுரம் 9.10.2022

 

அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம்.

நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது.

முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம்.

மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.

 எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். இறுதி முடிவெதுவென உறுதியாக தெரியவில்லை.

காலாண்டு விடுமுறை காரணமாக அக்கா பிள்ளைகள் வீட்டில் கும்மாளம் அடிக்கிறார்கள். வீடு கலகலப்பாக உள்ளது. செலவுகள் இருந்தாலும் மனம் நிறைவாக உள்ளது. எங்களுக்கு காசு கையில் இல்லாத கொரோனா காலத்தில் உதவியவர்கள் உறவினர்களில் அக்காக்கள் மட்டுமே. சிறுவயதில் நாங்கள் என்றுமே ஐவராக இருப்போம். விட்டுக்கொடுக்கும் தன்மை எல்லாரிடமும் உண்டு. கஷ்டம் வரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதால் உறவு நீடிக்கிறது.

வீட்டில் எனக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு, ஒரு பெண்ணைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவளோ படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாள் என்றனர். நான் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. காலத்தின் மீது நம்பிக்கை உள்ளது. கைகொடுக்கும் என நம்புகிறேன்.

தீராநதி புத்தகத்தை வாங்கினேன்; உங்கள் நினைவாக.. முதல் கட்டுரையே ராணி வார இதழின் ஆசிரியர் ஜி. மீனாட்சி பற்றியது. தன் பத்திரிகை அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இன்னும் இதழை முழுமையாகப் படிக்கவில்லை. டியூஷன் நன்றாகப் போகிறது. பிளஸ் 1 படிக்கும் நான்குபேர் டியூஷன் எடுப்பீர்களா என்று கேட்டுள்ளனர். மனம் நிறைவாக உள்ளது; படிக்க நினைப்பவர்களைக் கண்டு. உங்கள் வேலை என்ன ஆச்சு? இப்போது என்ன செய்கிறீர்கள்?  பணத்திற்கு எப்படி? என அடுத்த கடிதத்தில் சொல்லவும்.

ம.பா. காந்திராமன்   

 

 https://pixabay.com/photos/beach-people-running-ocean-sea-1836467/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்