புதுமையான சிந்தனையால் சாதித்த நிறுவனங்கள் - டைம் வார இதழ்

 









புதிய கண்டுபிடிப்புகள் - சாதித்த நம்பிக்கை தரும் நிறுவனங்கள்




கியா

அமெரிக்கா

புதுமையான மின்வாகனங்கள்

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கியமான பிராண்டுகளில் ஒன்று.  இந்த கார் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விலை குறைந்த மின்வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை பெற்றுள்ளது.  2022ஆம் ஆண்டு பேட்டரியில் இயங்கும் இவி 6 என்ற கார் வர்த்தக ரீதியான நல்ல வரவேற்பும் விற்பனையும் பெற்றுள்ளது. இதன்மூலம் அமெரிக்க சந்தையில் டெஸ்லாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது கியா.

2027ஆம் ஆண்டுக்குள் பதினைந்து மின்வாகனங்களை தயாரித்து விற்க கியா திட்டமிட்டுள்ளது. இந்த பிராண்டை வாங்குபவர்களில் அறுபது சதவீதம் பேர், புதியவர்களே என்பது அதன் பெரும் பலம்.

கியா காருக்குள் புதிதாக நுழைந்து அதை பார்ப்பவர்கள், முந்தைய கியா காருக்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்வார்கள் என கியா நிறுவனத்தின் அமெரிக்க இயக்குநர் சியூங்கியூ யூன் கூறினார்.




டாஸோ

லிப்டன் டீ பிரிவு

வணிகம் கடந்த மனிதநேயம்

தேயிலை விற்கும் நிறுவனம்தான். ஆனால் அதை செய்யும் வழிவகையில் வேளாண்மை, இயற்கைக்கு ஊறு விளைவிக்காத தன்மை, பல்லுயிர்த்தன்மை, மக்களின் மேம்பாடு, காலநிலை மாற்றம் பற்றிய அக்கறை , மனித உரிமை என ஏராளமான விஷயங்களை கருத்தில் கொள்கிற பிரிவாக டாஸோ இருக்கிறது.

2022ஆம் ஆண்டு இந்தியாவில் அசாம் மாநிலதில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு அமெரிக்காவில் உள்ள டாஸோ பிரிவு முக்கியமான மருத்துவ, உணவு உதவிகளை வழங்கியது. இதன் அமெரிக்க பிரிவு தலைவர் ஜாமி லியூசிக்.

ஏ24 திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பு


ஏ24

திரைப்படக்கலையில் புத்துணர்வு

ஆங்கில திரைப்பட நிறுவனம். இதை டேவிட் ஃபென்கெய் என்பவர் உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தயாரித்து வெளியிடுகிற படங்கள் அனைத்துமே சுயாதீன படங்கள். அதேநேரம் சர்ச்சையை ஏற்படுத்துபவை. அப்படி ஏற்படுத்தினாலும் விருது விழாக்களில் தவறாமல் அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றன.

ஆஸ்கரின் சிறந்த நடிப்புக்கான நடிகர் பட்டியலில் இருந்த இருபது படங்களில் எட்டு படங்கள் ஏ24 தயாரித்ததுதான். எவ்ரிதிங், எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படம் 140 மில்லியன் வசூலைக் குவித்தது. பீஃப், பியூ ஈஸ் அஃப்ரைட், தி ஐடல் என வெளியாகவிருக்கும் படங்களும் நிறைய இருக்கின்றன. பாஸ்ட் லைவ்ஸ், ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் ஆகிய படங்கள் சண்டேன்ஸ்,கேன்ஸ் விருது விழாவில் பரிசு வென்ற படங்களாகும்.  

அக்லிமா


அக்லிமா

சென்சார்

காற்று மாசுபாட்டை கணக்கிடலாம்

அக்லிமா நிறுவனம், நியூயார்க் நகரின் மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னைகளை தீர்க்க திட்டம் தீட்டி அரசுக்கு உதவி வருகிறது. இந்த நிறுவனம் காற்று மாசுபாட்டை கணித்து அளவிடுகிறது. நிறுவனத்தின் சென்சாரை, ஒருவர் காரில் பொருத்திக்கொண்டால் காற்று மாசுபாட்டை அறிந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும். டீசலில் இயங்கும் சரக்கு போக்குவரத்து வாகனங்களில் வெளியேறும் மாசுபாட்டை அளவைக் கண்காணித்து கட்டுப்படுத்த அக்லிமா முயன்று வருகிறது. 2022ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து அக்லிமாவின் காற்று மாசுபாட்டு தகவல்களை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்து வாகனங்களை இடம் மாற்றுவது, புதிய கட்டுமானங்களை உருவாக்குவது ஆகியவற்றை செய்யத் தொடங்கியுள்ளது.

 

 


கிராக்ஸ்

காலணிகள்

வேடிக்கையான காலணிகள்

இணையத்தில் மட்டுமே பிரபலமாக இருந்த கிராக்ஸ் காலணிகளை, இன்று பட்டிதொட்டியெங்கும் விற்கிறார்கள். மக்களும் வாங்கி அணிகிறார்கள். செருப்பில் சிறு சிறு துளைகளும் பின்பகுதியில் உள்ளள பெல்டும் காலணியின் வேறுபட்ட நிறங்களும் மக்களை ஈர்க்கின்றன. ஒருவகையில் காலணி, அதன் போட்டியாளர்களைப் போல இல்லாமல் வேடிக்கையான முறையில் அதை வெளிப்படுத்துவது வெற்றிக்கு காரணமோ என்று தோன்றுகிறது. 

ஜெனரல் மில்ஸ், லிசா ஃபிராங்க், 7 லெவன் என ஏராளமான நிறுவனங்களோடு இணைந்து விளம்பரம் செய்து காலணிகளை விற்கிறது. 2022ஆம் ஆண்டில், 3.6 பில்லியன் வருமானத்தை சம்பாதித்துள்ளது. ஏறத்தாழ முந்தைய ஆண்டை விட 54 சதவீதம் உயர்வு. ஹே டூட் எனும் காலணி நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதால் இனி காலணி விற்பனை சரியும் என சொல்லிவிட முடியாது.



ஸ்னெய்டர் எலக்ட்ரிக்

மின்சிக்கன வழிகாட்டல்

கார்பனைக் கட்டுப்படுத்தும் வழி

 

ஸ்னெய்டர், பெரு நிறுவனங்கள் எந்த வகையில் அதன் மின்சார தேவையைக் குறைக்கலாம் என்பதற்கான திட்டமிடல்களை உருவாக்கித் தருகிறது. இதன் மூலம் கார்பன் வெளியீடு குறைகிறது. ஃபோர்ப்ஸ் 500 பட்டியலில் உள்ள நாற்பது சதவீத நிறுவனங்களோடு ஸ்னெய்டர் எலக்ட்ரிக் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு வால்மார்ட் நிறுவனத்தின் கார்பன் வெளியீட்டைக் குறைத்து தூய ஆற்றலை பயன்படுத்தும் விதமாக 12 ஆண்டு கால ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டிற்குள் 800 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுவதை தடுப்பதே ஸ்னெய்டரின் லட்சியம்.

 

 

டைம் வார இதழ்

எலியனா டாக்டர்மேன், டிஎஸ், டான் ஸ்டெய்ன்பெர்க், நோவிட் பார்சி, ஜேர்ட் லிண்ட்ஸன்

கருத்துகள்