மனநலன் குறைபாடுகளை எதிர்கொள்வது எப்படி? - முதியோர் அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள்

 










பெருகும் மனநலன் பாதிப்பு

 

1.இந்திய மக்கள் தொகையில் உளவியல் சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு 150 மில்லியன்

2.30 மில்லியன் அளவு மக்கள் மட்டுமே உளவியல் குறைபாடு சார்ந்த சிகிச்சைகளை நாடி அதைப் பெறுகின்றனர்.

3.15-29 வயது கொண்ட பிரிவினர் இறப்பில் தற்கொலை முக்கியமான பங்கு வகிக்கிறது. இவர்களின் இறப்பில் நான்காவது முக்கியமான காரணமாக உளவியல் பிரச்னைகள் உள்ளன.

4.2022ஆம் ஆண்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,526 ஆக இருந்தது என தேசிய குற்ற ஆவண அமைப்பு கூறியுள்ளது.

5.மனம், நரம்பியல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படும் முதியோர்களின் அளவு 6.6 சதவீதமாக உள்ளது.

6.அறுபது வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் உளவியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

7.மனச்சோர்வு, பதற்றம் காரணமாக ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு 1 ட்ரில்லியனாக உள்ளது என உலகம் முழுமைக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மில்லியன்.

மனிதர்கள் உடலைப் பெற்று வந்ததே அவதிப்படத்தான் என்று கூறுவார்கள். உடலுக்கு ஏற்படும் நோய்களைப்பொறுத்து ஆன்மிகரீதியாக இப்படி கூறலாம்.  இன்று உடல் மட்டுமல்ல மனமும் நிறைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. வறுமை, தீண்டாமை, வன்முறை, வேலை செய்யும் இடத்தில் உள்ள நாசகார முதலாளி, நச்சாகிப் போன சூழல் ஆகியவை ஒருவரின் உளவியல் மட்டத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மோசமான அலுவலக சூழ்நிலை, எரிச்சல் தரும் முதலாளி காரணமாக வேலையைக் கைவிட்டு செல்லும் ஆட்கள் உலகம் முழுக்க அதிகம். இதுதொடர்பான இன்போகிராபிகளை லிங்க்டுஇன் தளத்தில் பார்க்கலாம்.

இந்த வகையில் இந்தியாவில் 150 மில்லியன் பேர், உளவியல் சிகிச்சையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படி ஒரு தேவை உள்ளது என்று நிம்கான்ஸ் ஆய்வு செய்திருக்கிறது. தேசிய உளவியல் நலன் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தின் சுருக்கமே, நிம்கான்ஸ்.

உளவியல் சிகிச்சைதானே கொடுத்துவிட்டால் போதும் என நினைத்துவிடாதீர்கள். இங்குதான் பொருளாதாரம் உள்ளே வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு உளவியல் பிரச்னை என்றால் அதற்கான சிகிச்சை ஒட்டுமொத்த குடும்ப வருமானத்தில் இருபது சதவீதம் பிடித்துக்கொள்கிறது. எனவே, இதை எதிர்கொண்டு சமாளிப்பது கடினம். உளவியல் குறைபாடு, மறைமுகமாக கொல்லைப்புறம் வழியாக வறுமையை கைபிடித்து அழைத்து வருகிறது என்பதே உண்மை. இந்தியச் சூழலில் பொருளாதார சுமை கடினமாக உள்ளது.

செலவு கூடினாலும் குறைந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் பதினைந்து வயது முதல் ஐம்பது வயது வரையினராக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அவசியம் தேவை. விவகாரத்தை விளக்கமாக பார்ப்போம்.

டீனேஜ் எனும் இளம் வயது அந்தளவு நெருக்கடி இல்லாத வயது என பலரும் கருதுகிறார்கள். இது பகுதியளவு உண்மை. இன்று இளம்வயதினருக்கு கல்வி சார்ந்த நெருக்கடி, உறவு சார்ந்த பிரச்னைகள், கேலி, கிண்டல்களை எதிர்கொள்வது என பல்வேறு வகையில் மனச்சோர்வு, பதற்றம் உருவாகி வருகிறது. இதை வெளிக்காட்டுபவர்கள் பிழைக்கிறார்கள். அப்படி ஒரு வார்த்தையும் சொல்லாமல் தனக்குள் உணர்ச்சிகளை அடக்கி வைப்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

10 வயது தொடங்கி 19 வயது வரையிலானவர்கள் உளவியல் குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகளவில் இவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக உள்ளது.

பிறருடன் ஒப்பீடு செய்வது, பெற்றோர் கொடுக்கும் பல்வேறு அழுத்தங்கள், தொழில்நுட்பம், ஆட்டிசம், நீண்டகாலமாக உள்ள நோய்கள், நரம்பியல் குறைபாடுகள் ஆகியவை இளம் வயதினரை பாதிக்கின்றன. இவற்றோடு புதிதாக சமூக வலைத்தளங்கள் செல்வாக்கு செலுத்தும் வகையில் வளர்ந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் உடல் பற்றிய விமர்சனங்கள் அதிகம் வருவதால் அதற்கேற்ப உண்ணும் வழக்கத்தை மாற்றுகிறார்கள். தாழ்வுணர்ச்சி கொள்வதால், உடலை கட்டழகாக்க மெனக்கெடுகிறார்கள். இதில் ஏராளமான இளைஞர்கள் உளவியல் பிரச்னையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

மெட்டா, தனது குழும வலைத்தளங்களில் வெளிவரும் விளம்பரங்கள் இளம் வயதினரை குறிவைத்து வெளியிடப்படுபவை அல்ல என்று கூறியிருக்கிறது. வணிகத்தை முக்கியமாக கருதும் நிறுவனத்தை எந்தளவு ஒருவர் நம்புவது என்பது கேள்விக்குரியது. தேர்வு சார்ந்த பதற்றம் எப்போதும் இந்திய சமூகத்திற்கு உண்டு. தேர்வு சார்ந்த அழுத்தம், ஒப்பீடு, தேர்வு தோல்வி பயம் ஆகியவை மாணவர்களைக் கடுமையாக பாதிக்கின்றன. இதன் விளைவாக தன்னைத்தானே உளவியல் ரீதியான வலி அல்லது உடல் ரீதியான வலி கொடுக்கும் இயல்புகளுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக்கொள்பவர்களைப் பார்த்தால் வலியைத் தாங்குபவர்கள் போல தெரியலாம். ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் தீவிரமான உளவியல் குறைபாடு கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

மிட்லைஃப் கிரிசிஸ் என்பார்கள். நாற்பது வயதுக்கு மேலானவர்கள் பல்வேறு சமூக அழுத்தம் காரணமாக அலைகழிக்கப்படுகிறார்கள். அது, வேலை, குடும்பம், ஓய்வூதியம், பிள்ளைகளின் கல்விச்செலவு, அவர்களின் நோய் என நிறைய விஷயங்கள் உள்ளன. இவர்கள்தான் அதிகளவு உளவியல் குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர்.  உலகம் முழுவதும் 1970ஆம் ஆண்டுக்கும் பிறகு பிறந்தவர்கள் உளவியல் சிக்கல் கொண்டவர்களாக உள்ளனர் என கண்டறிந்திருக்கிறார்கள். உடலும் வேகமாக வயதாகி வரும்போது மாற்றம் என்பது எளிதானதாக இருக்காது.

உலகில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 900 மில்லியனிலிருந்து 2 பில்லியனாக அதிகரித்துள்ளது. 2015 தொடங்கி 2050 வரையில் 12 முதல் 22 வரை மக்கள் தொகை அதிகரிக்கும் என புள்ளியியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். வயதாகும்போது ஒருவருக்கு ஏற்படும் தனிமை, நோய், பிள்ளைகள் இல்லாமல் தனியாக இருப்பது ஆகியவை மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சொந்தங்கள் கைவிடுவது, பொருளாதார சிக்கல் என தனிமைப்பட்டு துயரப்படும் வயதானவர்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றனர். முதியோர்கள் பற்றிய வெளிப்படையான உரையாடல் நடத்தப்படவேண்டிய நேரம் இதுவே.

 

சுபாங்கி ஷா (Shubhangi shah)

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் FE, june 4,2023

ஆங்கில மூலத்தை தழுவியது.


 image - 

"Invasive Benefits" by Stocksy Contributor "Evgeniy Shvets"


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்