உடல் எடை குறைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? - அலசல்

 




உடல் எடை குறைப்பு





உடல் எடையைக் குறைப்பது என்பது, மிகப்பெரிய வணிக சேவையாக மாறிவிட்டது. உண்மையில் உடலின் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதாக என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது நிச்சயம் என ஏராளமான நூல்கள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழில் பா.ராகவன் எழுதியுள்ள பேலியோ டயட் இந்த வகையில் முக்கியமான நூல்.

ஒருவரின் உடல் எடையைக் குறைப்பதில் அவரது மரபணுக்களுக்கு முக்கியமான பங்குண்டு. எழுத்தாளர் பா.ராகவன், தனது பேலியோ டயட் அனுபவங்களை குங்குமத்தில் தொடராக எழுதினார். அதுதான் பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலானது. பாராவுக்கு, பேலியோ டயட் வேலை செய்தது என்றால் அதேபோல இன்னொருவருக்கு அப்படியே அதே முறையில் வேலை செய்யும் என்று கூறமுடியாது. உடல் மிக சிக்கலான இயந்திரம். குறிப்பிட்ட காலத்திற்கு டயட் முறை வேலை செய்யும்தான். ஆனால் பிறகு உடல் மீண்டும் தனது இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். என்ன பிரச்னை?

உடல் எடை குறைப்பதில் ஒருவரின் அடிவயிற்றுக் கொழுப்பு மட்டுமே கரைகிறது என மேலோட்டமாக புரிந்துகொள்வது தவறு. நம்மில் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பது, உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடுவது காரணமாக அல்ல. உடலில் பசி உருவாகுவதால். அந்த சமயத்தில் கிடைக்கும் குப்பை உணவுகளை அல்லது ஆரோக்கியமான உணவுகளைக் கூட அதிகளவு சாப்பிட்டால் உடல் எடை கூடும். அதை தவிர்க்க முடியாது. உடல் எடை கூடியவர்களை, குற்றம்சாட்டி அவர்கள் நினைத்தால் உடல் எடையைக் குறைத்திருக்கலாம் என்று கூறுவது தவறு என உணவு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு, வயதுவந்தோர் 42 சதவீதம், குழந்தைகள் 20 சதவீதம் பேரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டது. இதன் விளைவாக, இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதயநோய், புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலம், இன்னும் அதிகம் மக்களை உடல் பருமன் பிரச்னையில் தள்ளியுள்ளது.

2022ஆம் ஆண்டு அமெரிக்க உளவியல சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 47 சதவீத வயது வந்தோர் குறைந்த உடல் இயக்கங்களைக் கொண்டிருக்கின்றனர். 58 சதவீதம் பேருக்கு, உடல் எடை வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் எடை குறைப்பு தொடர்பான தொழில்துறை 250 பில்லியன் டாலர்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றுள்ளது.

தொழில்துறை இந்தளவு வளர்ச்சி பெற்றாலும் பீப்பாய் சைஸ் உடலை ஒட்டடைக் குச்சி போல மாற்றி எடையைக் குறைத்து வெற்றி பெற்றவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். உடல் எடையை ஒருவர் குறைக்க உணவைக் குறைத்து சாப்பிட்டு அதிகளவு உடற்பயிற்சியை செய்வது மட்டும் பயன்தராது. பசி, சாப்பிடும் பழக்கம் என சிக்கலான அம்சங்களை மக்கள் மறந்துவிடுகிறார்கள். சூழல் மற்றும் சமூக அழுத்தமும் ஒருவர் சாப்பிடுவதில் பங்கு வகிப்பதால், அவரால் உடல் எடையைக் குறைப்பது கடினமாக இருக்கிறது.

குறைந்த கொழுப்பு, இடைவெளி விட்டுத் தொடரும் உண்ணாவிரதம், பேலியோ, கீட்டோ என பல்வேறு எடை குறைப்பு முறைகள் உள்ளன. அவற்றையும் மக்கள் பின்தொடர்கிறார்கள். அதை மறுக்க முடியாது. குறிப்பிட்ட காலம் வரை பயனும் கிடைக்கிறதுதான். ஆனால் நீண்டகால நோக்கில் அதில் பயன் கிடைக்கிறதா என்பது முக்கியமானது.

உடல் எடை குறைப்பின்போது சாப்பிடும் உணவுப்பொருட்கள் சார்ந்து ஒருவரின் உடலில் பசி, வளர்சிதை மாற்றம் ஆகியவை முழுமையாக மாற்றங்களைச்  சந்திக்கின்றன. உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் கீட்டோ உணவு முறையில் உடல் எடையைக் குறைத்திருக்கலாம். எனவே, அதிக மாவுச்சத்து, காய்கறி என உணவு என நீங்களும் மாறலாம். ஆனால், உங்கள் உடல் சார்ந்து உடல் எடை குறைப்பு என்பது எளிதாக இருக்காது. எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்காது.

உங்கள் உடலுக்குப் பொருத்தமான உணவுமுறையை கண்டுபிடித்தாலும் அதில் நிறைய சவால்களை சந்திக்கவேண்டும். தொடக்கத்தில் உடல் எடை குறைந்தாலும் கூட பின்னாளில் மீண்டும் எடை கூடுவதை மக்கள் தங்கள் அனுபவத்தில் உணரக்கூடும். இதுபற்றிய ஆய்வில், உடல் எடையைக் குறைத்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் 50 சதவீத எடை அதிகரிப்பும், ஐந்து ஆண்டுகளில் 80 சதவீத எடை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ்,, பாசல் கங்கிலியா ஆகிய பகுதிகள் உடலின் பசி, வளர்சிதைமாற்றம் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. இவை, ஆபத்துகாலத்தில் உடலைக் காக்கும் இயல்பில் அமைந்தவை. நமது தன்னுணர்வின்றியே செயல்படக்கூடியவை.

உடல் எடையைக் குறைக்க ஒருவர் தான் உண்ணும் உணவு வகைகளைக் குறைத்து, கலோரிகளை எண்ணிச் சாப்பிட்டாலும் உடல் மீண்டும் முன்னிருந்த பசி எடுக்கும் நிலை அல்லது மெதுவாக மாறிய வளர்சிதை மாற்றத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவே முயலும்.

இதனால்தான், உடல் எடை குறைப்பில் இறங்கியவர்களுக்கு உடல் எடை முன்பை விட கூடுதலாக அதிகரிக்கிறது. உடல் எடை குறைப்பிற்கு ஜிம்மிற்கு மாத சந்தாவைக் கட்டுவதை விட முக்கியமானது, உளவியல் ரீதியாக அதற்கு தயாராக தன்னைத்தானே மாற்றிக்கொள்வது. அதை மக்கள் பலரும் பின்பற்றுவதில்லை. இதனால, உடல் எடை குறைப்பு நினைத்த வேகத்தில் நடைபெறுவதில்லை. உடல் எடை குறைப்பு என்பதை, சமூக அழுத்தமாக பிறர் கூறும் அறிவுறுத்தலாக நினைப்பவர்களுக்கு, உடல் ஒத்துழைப்பைத் தராது.

உடல் எடையைக் குறைப்பதற்கான பல்வேறு உணவுமுறைகளை பயன்படுத்துவதில் அனைவருக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எனவே, சில உணவுமுறைகளை கையாள்வதில் தோற்றாலும் கூட மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எடையைக் குறைக்க முடியும். எனவே, பிறர் கூறும் தேவையற்ற நம்பிக்கை இல்லாத வாதங்களை கேட்க வேண்டியதில்லை. நீண்டகாலத்திற்கு உடல் எடையை ஒரே நிலையில் பராமரிப்பது கடினம். உடல் எடையைக் குறைப்பவர்கள், தங்கள் உணவுமுறையை சீராக வைத்திருப்பதோடு, உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

ஜோ, டே டூ என்ற உடல் எடையை பராமரித்து ஊட்டச்சத்து ஆலோசனையை வழங்கும் ஆப்கள் உள்ளன. இவற்றை உடல் எடையைக் குறைப்பவர்கள் பயன்படுத்தலாம். இதில் ஒருவர் தனது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சோதிக்கலாம். அதன்மூலம், ஒருவருக்கு உணவு சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை அடையாளம் காணலாம். ஒருவரின் உடல்நிலைக்கு ஏற்ப உணவுத்திட்டங்களை மேற்சொன்ன ஆப்காரர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதை ஒருவர் பின்பற்றலாம்.

ஜெனிஃபர் ஜோசப்

டைம் வார இதழ்

https://pixabay.com/illustrations/diet-big-figure-healthy-isolated-3117938/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்