இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

 











காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும்.

கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.  கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது.

அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மின்விளக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாள் தொடங்கி இன்றுவரை விளக்குகள் அதிகளவு சக்தியுடன் உருவாகி வருகின்றன. இதன் விளைவாக ஒளி மாசுபாடு நினைத்துப் பார்க்க முடியாதபடி வளர்ந்திருக்கிறது. ஒளி மாசுபாடு காரணமாக மனிதர்களின் தூக்கம் குறைந்து சூழலும் பாதிக்கப்படுகிறது. 

 உலக நாடுகளில் வாழும் 83 சதவீத மக்கள் மின் விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசுபாட்டு சூழலை சந்திக்கின்றனர். காலியான அறை, மூடிய அறை, பொதுவான மக்கள் பயன்பாட்டு இடங்கள் ஆகியவற்றில் மின்சார விளக்குகள் அவசியமின்றி அதீதமாக பயன்படுகிறது. ஒளி மாசுபாடு காரணமாக கடற்கரையில்  இருந்து வெளியே வரும் ஆமை குஞ்சுகள் நகரங்களை நோக்கி வந்து இறந்துபோகின்றன.

கரிம எரிபொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் உருவாகின்றன. ஆக மொத்தம் காற்று மாசுபடுகிறது. இதன் விளைவாக ஆண்டுக்கு 8 மில்லியன் மக்கள் இறந்துபோகிறார்கள். இவர்களுக்கு இதயம், நுரையீரல் சார்ந்து நோய்கள் ஏற்படுகின்றன.

பூமியில் வெப்பம் அதிகரித்து வருவது காட்டுத்தீ ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதீத மழைப்பொழிவு வெள்ளத்தையும், நன்னிலத்தை பாலை நிலமுமுமாக மாற்றுகிறது. மனிதர்களின் குடியேற்றும் விரிவாகிக்கொண்டே போக, பசுமை இல்ல வாயுக்களும் அதிகரிக்கின்றன. துருவப்பகுதியில் பனிப்பாறைகள்உருகி, அதிகளவு கார்பன் வளிமண்டலத்தை வந்தடைகிறது. குறிப்பாக மீத்தேன் வாயும் அதிகரிக்கத் தொடங்குகிறது.

அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பூமியின் நிலப்பரப்பு வறண்டுபோகிறது. இந்த சூழ்நிலை காட்டுத்தீ உருவாக முக்கியமான காரணமாகிறது. காலநிலை மாற்றம் காரணமாகவே உலகம் முழுக்க காட்டுத்தீ சம்பவங்கள் நடைபெறுகின்றன.

காட்டுத்தீ என்பது இயற்கையாக நடக்கும் செயல்தான். ஆனால் அந்த சம்பவம் தீவிரமாக அனைத்து நாடுகளிலும் நடந்துகொண்டே இருப்பது கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. உலக நாடுகளில் 3 பில்லியன் மக்கள் வறண்டுபோன நிலப்பரப்பில் வாழ்கிறார்கள். வறண்ட நிலப்பரப்பு என்று கூறினாலே அங்கு நீர் தட்டுப்பாடு உள்ளது என்பதே அர்த்தம். வேளாண்மை இல்லாத காரணத்தால், இங்கு பொருளாதார ரீதியான பின்னடைவும் உள்ளது. காலநிலை மாற்றம் வறண்ட நிலப்பரப்புகளுக்கு கிடைக்கும் வெப்பத்தை அதிகரிக்கின்றன. மேலும், இப்பரப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்குகின்றன.

பல்லுயிர்த்தன்மை என்பது இயல்பாகவே இயற்கையில் இருப்பதுதான். ஆனால் மனிதர்களின் செயல்பாடு, மாசுபாடு, இயற்கை சூழலில் ஏற்படும் மாறுபாடு ஆகியவை காரணமாக சூழல் அமைப்பு சிதைந்து போகிறது. இதனால், காட்டு விலங்குகள், தாவர இனங்கள், பயிர்கள் மெல்ல அழிகின்றன. உணவு இல்லாத காரணத்தால் விலங்குகள், வேறிடத்திற்கு இடம்பெயர்கின்றன். இப்படி இடம்பெயர்வது ஏற்கெனவே அந்த இடத்தில் வாழும் உயிரினங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக அமைகிறது. இப்படி உலகம் முழுக்க பாதிக்கப்படும் விலங்குகள் அழிவதை, உலக இயற்கை வள பாதுகாப்பு பட்டியலில் பார்த்து அறியலாம்.

விலங்குகளின் வாழிட அழிப்பு என்பது  உலக நாடுகளில் வேகமாக நடந்து வருகிற செயல்பாடுகளில் ஒன்று. இயற்கையான காடுகளை அழித்து அங்கு வேளாண்மை செய்வது, பெரு நகரங்களை உருவாக்குவது ஆகிய செயல்பாடுகளை மக்கள் செய்கின்றனர். இதன் காரணமாக ஏற்கெனவே அங்கு வாழ்ந்த வந்த உயிரினங்கள் வேறுவழியின்றி இடம்பெயர்கின்றன. அல்லது அதே சூழலை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன. மூன்றாவது, மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உணவின்றி இறந்துபோகின்றன.

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.

image - pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்