விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்- எடை குறைப்பு எனும் பெரும் வணிகம்

 



உடல் எடை குறைப்பு


உடல் எடையைக் குறைப்பதற்கு மக்கள் இன்னதான் செய்வது என்றில்லாமல் மாத்திரை, அறுவை சிகிச்சை மூலம் குடலை சுருக்குவது, உடற்பயிற்சி என ஏராளமான முயற்சிகளை செய்துவருகிறார்கள். ஆனாலும், உடல் எடை பற்றிய அதீத அக்கறை தீரவே இல்லை. ஜிம்கள் பலவும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம் என்று சொல்லித்தான் மாதசந்தா சேகரித்து வருகிறார்கள்.

உடல் எடை அதிகரித்ததில், வரலாறு, தொழில்நுட்ப முன்னேற்றம், நாகரிகம் என பல்வேறு விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒல்லியாக ஒருவர் இருக்க முயல்வது புதிதானதல்ல. கிரேக்க கடவுள்கள், விக்டோரியா கால மனிதர்களை கட்டான உடல் வடிவத்திற்கு உதாரணமாக கூறுவார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டம் கையில் கிடைத்த உணவுப்பொருட்களை மக்கள் சாப்பிடத் தொடங்கினர். அப்படியான நெருக்கடியான காலகட்டத்திற்குப் பிறகுதான், உடல் பருமன் பிரச்னை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்கப்படத் தொடங்கின.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பல்வேறு இடங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்களைக் காசு போட்டுப் பெறும் விற்பனை இயந்திரங்கள் வைக்கப்படத் தொடங்கின. அந்த சமயங்களில் டிவி, பில்போர்டுகளில் குளிர்பான, தின்பண்டங்களின் விளம்பரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. மேற்குலகங்களில் அப்போது, 20 சதவீத வேலைகள் மட்டுமே உடலுழைப்பு சார்ந்தவையாக இருந்தன.

83 சதவீத வேலைகள் உட்கார்ந்து செய்யும் வேலையாக இருந்தது. இதனால்,  வேலை செய்பவர்களுக்கு இரண்டாம் நிலை நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. இந்த பிரச்னைகளுக்கு முன்பே உடல் எடை அதிகரித்திருக்கும் என்பதை நான் தனியாக கூறவேண்டியதில்லை.

1970-2010 ஆகிய காலகட்டத்திற்குள், அமெரிக்கர்கள் உண்ணும் கலோரிகளின் அளவு 23 சதவீதம் அதிகரித்திருந்தது. இதே காலத்தில் 5 சதவீதமாக இருந்த பதப்படுத்திய உணவுப்பொருட்களின் பயன்பாட்டு அளவு அறுபது சதவீதமாக உயர்ந்திருந்தது. சர்க்கரை யை அடிப்படையாகக் கொண்ட குளிர்பானங்களின் அளவும் அதிக அளவை எட்டிவிட்டது.

விளைவாக, ஆண், பெண், குழந்தைகளின் உடல் வடிவமைப்பு பெரியளவு மாற்றங்களைக் காணத் தொடங்கிவிட்டது. 1976-1980 காலகட்டத்திற்குள் அமெரிக்கர்களின் உடல் எடை 30  சதவீதம் அதிகரித்துவிட்டது. நாற்பது வயதிலிருந்து நாற்பத்தொன்பது வயது வரம்புவரை உள்ளவர்களின் உடல் எடை 20 கிலோவுக்கும் அதிகமாக கூடியிருந்தது. பெண்களின் உடல் எடையும் இதுபோலத்தான் உயர்ந்திருந்தது.

 எடை குறைவாக இருப்பது மட்டுமே மகிழ்ச்சி, பெரும் சொத்தை வைத்திருப்பது போன்று மக்கள் நம்பிவிட்டனர். இதனால்தான் உடல் எடை குறைப்பை முனைப்பாக செயல்படுத்தினர். இப்படி எடையைக் குறைப்பதென்பது பின்னாளில் சமூகத்தின் பொது நம்பிக்கையாக மாற்றப்பட்டுவிட்டது.பொதுவாக ஒல்லியாக இருப்பவரைப் பார்த்தால் ஆரோக்கியமானவர் என்றும், குண்டாக இருப்பவரைப் பார்த்தால் நோயாளி என்பதுமாக சமூகத்தின் பார்வை மாறிவிட்டது.

வெளிப்பார்வைக்கு ஒல்லியாக இருப்பவருக்கு உடலுக்குள் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என யாருக்கும் தெரியாது. ஆனால், உடல் பருமனாக உள்ளவருக்கு நீரிழிவு, இதய நோய் பிரச்னைகள் ஏற்படுவது அறிவியல் ரீதியான உண்மை. இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இதன் காரணமாக உடல் எடையைக் குறைப்போம், ஒல்லியாவோம் என சமூகத்தில் பொதுவான நம்பிக்கை உருவானது.

தற்போது, டயட் சார்ந்த உணவுப்பொருட்களின் விற்பனை 70 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது.  இதில், உணவுகள், மருத்துவர்களின் ஆலோசனை, கருவிகள், ஆகியவை உள்ளடங்கும். ஆரோக்கியமான உணவுமுறை, தினமும் உடற்பயிற்சி என்பதே ஒருவருக்கு உடல் எடையைக் குறைக்க போதுமானது. ஆனால், அறுபதுகளில் அமெரிக்காவில் உடல் எடையைக் குறைப்பதற்கான பகீரத முயற்சிகள் தீவிரமாக இருந்தன. குசி மாடல் நிறுவனத்தின் மாடலான கேட் மோஸ் போல மெலிந்த உடலைப் பெற ஆண்களும், பெண்களும் தீவிரமாக முயன்றுகொண்டிருந்தனர்.

பசியை அடக்கும் டெக்ஸாட்ரிம், உணவுக்கு பதில் அருந்துவதற்கான மாற்றுப்பொருளாக ஸ்லிம்ஃபாஸ்ட் என பொருட்கள் சந்தையில் அறிமுகமாகி வெற்றி கண்டது. இதெல்லாம் இல்லாமல் திராட்சை டயட் என ஒரு உணவுமுறை நடைமுறைக்கு வந்தது. ஒருவரின் உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்க சிட்ரஸ் அமிலங்கள் உள்ள பழங்களை உண்பது, அடுத்து குறைந்த சர்க்கரை கொண்ட காய்கறிகளை சூப் முறையில் உண்பது என மக்களின்  கவனம் மாறியது. இன்று அமெரிக்கர்களில் 45 மில்லியன் பேர், டயட் இருந்து உடலைக் குறைக்கும் முயற்சியில் உள்ளனர். இது டயட் சார்ந்த வர்த்தகத்திற்கு சிறந்த வாய்ப்பு.

உடல் எடைக்கான அறுவை சிகிச்சை துறை, ஆண்டிற்கு 5 முதல் பத்து சதவீத வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதன் மதிப்பு, 1.5 ட்ரில்லியன் டாலர்கள்.

ஆறு வார எடைக்குறைப்பு திட்டம், பிரபலங்களின் உடல் அமைப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்படாதவர்கள் சர்க்கரை, உப்பு, சிவப்பு இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதை கைவிட்டுவிட்டு, காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவுமுறைக்கு மாறலாம். இதன்மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். தினசரி எளிமையான உடற்பயிற்சியோடு, நல்ல தூக்கமும் ஒருவருக்குத் தேவை.


ஆட்ரே டி பிராசிச்

டைம் வார இதழ்

https://pixabay.com/photos/weight-loss-tape-measure-woman-girl-5985840/

கருத்துகள்