அதிவேக வேளாண்மை விரிவாக்கத்தால் சிதைந்துபோன சூழல் சமநிலை!

 



உரங்களால் கெட்டுப்போன சூழல் சமநிலை






1960ஆம் ஆண்டு அதிக விளைச்சல் தரும் விதமாக வேளாண்மை துறை மாற்றப்பட்டது. ஏனெனில் அதிகளவு மக்கள்தொகை உருவாகத் தொடங்கிய சூழல். இதனால் காடுகள் அழிக்ககப்பட்டு நன்னீர்நிலைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படத் தொடங்கின. உணவு உற்பத்தி அதிகரித்தது உண்மை. அதேநேரம் வறுமை, உணவு வீணாவது, மக்களுக்கு இடையே பொருளாதார பாகுபாடு, வசதிகளைப் பெறுவதில் பெரும் இடைவெளி ஆகியவையும் ஏற்பட்டன. உலக நாடுகளில் பல கோடி மக்கள் பட்டினியாக கிடந்தனர். அடிப்படையான நுண் ஊட்டச்சத்து சிக்கலும் எழத் தொடங்கியது.

உணவுக்கு கொடுத்த விலை

எந்திரமயமாதலுக்கான முதலீடு, தொழிலாளர்கள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை காரணமாக வேளாண்மை துறை முன்னேற்றம் கண்டது. அதிக விளைச்சல் கொண்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையில் சூழல் ரீதியான பின்விளைவுகள் உருவாயின.

 மாசுபாடு, பல்லுயிர்த்தன்மை அழிவு, மண்ணின் வளம் அழிவது, ஒரேவிதமான பணப்பயிரை பயிரிடுவது, பண்ணை விலங்குகளின் நலனில் கவனக்குறைவு ஆகியவற்றை உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களின் தேவை அதிகமானது. நிலங்களை ஆழ உழுதனர். இதற்கென பயன்படுத்தப்பட்ட எந்திரங்களால் அதிக கரிம எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

பண்ணை விலங்குகள் துறையில் அளவுக்கு அதிகமாக தொற்றுநோய் அபாயம் உருவானது. இதைத் தடுக்க உயிர் எதிரி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் விலங்குகளின் வளர்ச்சி வேகமானது.

நிலத்தில் பயன்படுத்தப்பட்ட உரங்கள், நீர்நிலையில் கலந்த காரணத்தால் அதன் சூழலும் கெட்டுப்போனது. நீர்நிலைகளில் பிற உயிரினங்களை அழித்தபடி பாசிகள் ஆக்கிரமித்து வளரத் தொடங்கின. இவற்றின் பெருக்கத்தை இன்று வரையிலும் கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது. பாசிகள் சூரிய வெளிச்சத்தை தடுத்து பிற உயிரினங்களை மெல்ல அழிக்கின்றன. அதேசமயம் அவை நீரிலுள்ள கனிம வளத்தை சத்துகளை பயன்படுத்தி வேகமாக வளருகின்றன.

1913ஆம்ஆ ண்டு ஹாபர் – போச் வேதிச்செயல்முறை காரணமாக நைட்ரஜன் உரத் தயாரிப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த உரத்தை பயன்படுத்தும்போது பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுத்தன. இன்று உலகளவில் ஆண்டுதோறும் 220 மில்லியன் டன் உரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கியமான பெரிய விலையும் உண்டு. அது உரப்பயன்பாட்டால் ஏற்படும் சூழல் மாசுபாடு. உரத்தின் பயன்பாட்டால், வளிமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடு அளவு பெருமளவு அதிகரிக்கிறது.

பயிர்களின் துரித விளைச்சலுக்கென  பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகள் தயாரித்து சந்தையில் விற்கப்பட்டன. இதன் பயன்பாடு, 1950ஆம் ஆண்டு  தொடங்கி ஐந்து மடங்காக உயர்ந்தது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஏராளமான பயன்பாடு கொண்ட தாவரங்களை அழித்தன. பயிர்களின் பன்மைத்தன்மையும் மெல்ல அழிந்தது.

காடுகளின் அழிவு

தொண்ணூறுகள் தொடங்கி இதுவரை 4.2 மில்லியன் சதுர கி.மீ நிலம் அழிந்துள்ளது. தோராயமாக பிரான்ஸ் நாட்டைப் போல 6.5 மடங்கு அளவு கொண்டது. பெரும்பாலான காட்டு நிலங்கள், வேளாண்மை விரிவுபடுத்தலுக்காக அழிக்கப்பட்டன.

இப்படி காடுகள் அழிவது பல்லுயிர்த்தன்மைக்கு சவாலாக மாறுவதோடு, வளிமண்டலத்தில் உள்ள கார்பனை உள்ளிழுத்து கவரும் செயல்பாடும்  குறைகிறது. இதனால் மண்ணரிப்பு அதிகரிக்கிறது. மண்ணரிப்பு அதிகரித்தால் வெள்ளத்தின்போது நிலச்சரிவு ஏற்பட்டு அதிகளவு மக்கள் இறந்துபோகும் ஆபத்து ஏற்படுகிறது.

கடலில் உணவுத் தேவைக்காக மீன்பிடிப்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் கடலில் உள்ள மீன் வளங்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். மீன் வளம் பெருகுவதற்கு இடைவெளிகளை அரசு அறிவித்தாலும் கூட நவீனமான வலைகள், நுட்பங்களைப் பயன்படுத்தி மீன் வளங்களை முற்றாக அழிக்கும் அளவுக்கு வணிகம் பெருகிவிட்டது. இதன் காரணமாக மீன்கள் மட்டுமல்லாது பிற கடல் வாழ் உயிரினங்களும் கூட பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன.

வணிகம், சரக்குப் போக்குவரத்து மூலமாகவே உலகம் முழுக்க பல்வேறு நுண்ணுயிரிகள், பயிர்கள் , தாவர இனங்கள் பரவின. இதில் நல்லதும், அல்லதும் உண்டு. நமது நாட்டைப் பொறுத்தவரை கால்நடைத் தீவனம், வறுமை ஒழிப்பு, மீன் உற்பத்தி  ஆகியவற்றை அதிகரிக்கவென என திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட பயிர்கள், மீன்கள் இங்குள்ள இயற்கை வளத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டன. இதனால் ஏற்கெனவே உள்ள பாரம்பரிய உயிரினங்கள் அழிந்துவிட்டன.

 

 

 

மூலநூல்

சிம்ப்ளி கிளைமேட் சேஞ்ச்

டிகே/பெங்குவின் ராண்டம் ஹவுஸ்

மூலத்தை தழுவிய தமிழாக்க கட்டுரை.

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்