பௌத்தம்/ சமணத்தை போலச் செய்து சைவம் வென்ற வரலாறு - வைத்தியர் அயோத்திதாசர்/ஸ்டாலின் ராஜாங்கம்

 






வைத்தியர் அயோத்திதாசர் நூல்


ஸ்டாலின் ராஜாங்கம்



வைத்தியர் அயோத்திதாசர்

ஸ்டாலின் ராஜாங்கம்

நீலம்

ரூ.175         

                               

தமிழன் என்ற நாளிதழை நடத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். இவர், சித்த வைத்தியராக ராயப்பேட்டையில் மருத்துவமனை நடத்தியவர். மருத்துவமனை என்பதை விட வைத்திய சாலை என்று கூறலாம். தனது நாளிதழில் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும், உண்ண வேண்டிய பல்வேறு மருந்துகளைப் பற்றியும் எழுதி வந்தார்.

பௌத்தம்/சமணம் ஆகிய மதங்களிலிருந்து எப்படி சைவம், வைணவம் போலச்செய்தல் முறையில் தன்னை வளர்த்திக்கொண்டது. அதற்கேற்ப திரிக்கப்பட்ட இலக்கியங்கள், பாடல்கள் உருவாக்கப்பட்ட விதத்தை பல்வேறு ஆதாரங்களின்படி நூல் விளக்குகிறது.

நூலில் வரும் சிறுவன் ஒருவனுக்கு அயோத்தி தாசர் வைத்தியம் செய்விக்கும் முறை சிறுகதை போல உள்ளது. அந்தளவு நுட்பமான தன்மையில் விளக்கப்படுகிறது. அந்த சிறுவன்தான், வளர்ந்தபிறகு திரு.வி.க என்று அழைக்கப்பட்டவர். நூல் முழுக்க எண்ணெய், பூநீறு எனும் பூமிக்கடியில் உள்ள உப்பு, பத்திய முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்படுகிறது.

பௌத்தம் எப்படி மருத்துவத்தை முக்கியமான வழியாக கைக்கொண்டு உலகம் முழுவதும் பரவியது என ஆசிரியர் கூறும் இடம் முக்கியமானது. நோயாளியைத் தேடிச்சென்று இடம்பெயர்ந்துகொண்டே இருக்கும் பிக்குகள் மருத்துவத்தை செய்கிறார்கள். இப்படி செய்யும் மருத்துவ உதவியின் அடையாளமாக புத்தரின் கையில் உள்ள கிண்ணத்தை அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். பலரும் சிலையில் உள்ள கிண்ணத்தை பிச்சை எடுககும் பாத்திரமாகவே கருதுகிறார்கள். ஆனால் அது தவறு என நூலில் கூறப்படுகிறது. இப்படி நூலாசிரியர் கூறுவதும் அவர் கூறும் வாதத்திற்கு பொருத்தமாகவே இருக்கிறது. ஏனெனில், பசியைக்கூட பிணியாக கருதியவர்கள்தான் பௌத்தர்கள் அல்லவா?

பௌத்த விகாரங்களை சைவர்கள், வைணவர்கள் ஆக்கிரமித்த பின்னரும் கூட அங்கு நடைபெற்று வந்த விஷயங்களின் எச்சங்கள் இருப்பதை ஆசிரியர் ஏராளமான எடுத்துக்காட்டுகளை சொல்லி விளக்குகிறார். குறிப்பாக, குளத்தில் உப்பையும் சர்க்கரையையும் கரைக்கும் சடங்கு. உடலின் நோய் தீர இறைவனை வேண்டிக்கொண்டு இதை செய்கிறார்கள். பௌத்த மத வரலாற்றை அப்படியே போலச்செய்து சைவம் மேலெழுந்ததை சுட்டிக்காட்டும் நேரடியான ஒப்பீடும் நூலில் உள்ளது. மேலும் தகவல்களை அறிய மேற்கோள் நூல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பண்டிதர் என்பவர்கள் யார், அவர்கள் தொழில் என்ன, பின்னாளில் அவர்கள் எப்படி சாதி ரீதியாக கீழிறக்கப்பட்டனர் என்பதை அறியும்போது வேதனையாக உள்ளது. அமாத்தியர்கள் எப்படி அம்பட்டவர்களாக விளிக்கப்படத் தொடங்கினாரர்கள் என்றும் கூட விளக்கப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து ஊரிலும் உள்ள மாரியம்மனின் மூலதெய்வம் பற்றி அறிந்துகொண்ட தகவல் ஆச்சரியமூட்டுகிறது. மாரியம்மனின் கூடவே பகவதி, இசக்கி ஆகிய தெய்வங்களும் வருகிறார்கள். இவர்களின் தோற்றம் சமண மதத்தில் இருந்து உருவாகியுள்ளது புதிய தகவல்.

சித்த மருத்துவ நூல்களைப் பற்றி தமிழன் இதழில் அயோத்திதாசர் விரிவாக பொருள் உரைத்து எழுதி வந்திருக்கிறார். ஆனால், அவரைப் பின்பற்றி யாரும் நூல்களை எழுதாத காரணத்தால் சித்த மருத்துவம் சார்ந்த விஷயங்களில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வைத்தியர் அயோத்திதாசர் நூலில் பின்னிணைப்புகளில் இந்தியா, வெளிநாடுகளில் பரவிய நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகள் பற்றியும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் என்றாலும், அதைப்பற்றிய முழுமையை அறியாமல் இருந்திருப்போம். இந்த நூலை வாசிக்கும்போது பௌத்தம் சார்ந்தும், பிற மதங்களின் செயல்பாடு பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் அயோத்திதாசரின் நூல்களை பற்றி தெரிந்துகொள்ள இதை தொடக்க நூலாக கொள்ளலாம்.

கோமாளிமேடை டீம்

 படங்கள் - காமன்ஃபோக்ஸ், பனுவல்


கருத்துகள்