இதழியல் லாபம் சம்பாதிக்கும் வணிகத் தொழிலாக மாறிய வரலாறு!

 









ஜர்னலிசம் – ஷார்ட் இன்ட்ரோடக்‌ஷன்

ஆக்ஸ்போர்ட் பிரஸ்


பத்திரிகை தொழில் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை ரீதியாக செயல்பாட்டு ரீதியாக எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார்கள். நூலில் அதிகம் பேசப்படுபவர், ரூபர்ட் முர்டோக் என்ற ஊடக தொழிலதிபர்தான். இவர்தான் ஸ்டார் டிவி குழுமத்தை தொடங்கியவர். இப்போது ஸ்டார் டிவி குழுமத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டது.

ரூபர்ட்டின் ஃபாக்ஸ் டிவி அமெரிக்க ஊடக கலாசாரத்தை மறு வடிவமைப்பு செய்தது என்று கூற வேண்டும். ஐரோப்பா முழுக்கவே ஊடகங்களின் கொள்கைகளை மாற்றி பொழுதுபோக்கை முதன்மையாக்கி செய்திகளின் தரத்தை கீழிறக்கிய ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக்.

பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி செய்திகளை மக்கள் மாற்றிப் புரிந்துகொள்ளும்படி எழுதுவது, மடை மாற்றி தலைப்புகளை வைப்பது, முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என இங்கிலாந்தில் உள்ள சன், கார்டியன், டெய்லி மிரர் என ஏராளமான நாளிதழ்களை, ஜர்னலிசம் நூல் சாடுகிறது. எடுத்துக்காட்டுகளுடன் தான் பேசியவற்றை வாசகர்களுக்கு கொடுக்கிறது. நூலில் உள்ள உள்பக்க படங்களை கீழே உள்ள கேப்ஷன்களுடன் சேர்த்து படித்தாலே உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

இங்கிலாந்தில் தொண்ணூறுகளுக்குப் பிறகு, நிறைய பத்திரிகைகள் டேப்லாய்டு வடிவத்திற்கு மாறின. வடிவம் மட்டுமல்லாது செக்ஸை , சினிமாவை, கிசுகிசுக்களை மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து புகழ்பெற்றன. பல லட்சம் பிரதிகள் விற்றன. இப்படி விற்பதில் நாளிதழ் கொள்கைகளை உடைத்து நொறுக்கினர். இளவரசி டயானா புகைப்படக்காரர்களால் துரத்தப்பட்டு விபத்தில் கொல்லப்பட்டது, இப்படிப்பட்ட மஞ்சள் பத்திரிகைகள் ஏற்படுத்திய அழுத்தத்தால்தான். அதையும் நூல் சுட்டிக் காட்டுகிறது. மேற்சொன்னது சிறிய எடுத்துக்காட்டுதான். அதுதவிர ஏராளமான அரசியல் விவகாரங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கூறப்பட்டுள்ளன.

கிசுகிசு விவகாரத்திற்கு கிளிண்டன் – மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் முக்கியமான உதாரணம். இதை எழுதியவர் முறையான பத்திரிகையாளர் என்று கூற முடியாதவர்.ஆனால், இந்த விவகாரத்தால் பெரும் புகழடைந்தார். பணம் சம்பாதித்தார். பிறகு, இணையம் வலுப்பெற்றது.. அதில் செய்திகளை எழுத தொடங்கினர். இதிலும் பிபிசி போன்ற தொன்மையான ஊடக நிறுவனங்கள் புகழ்பெற்றன. மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலை அல்ஜசீரா சீர்படுத்தியது. இந்த டிவி நிறுவனம், பிபிசி நிறுவனத்தின் உதவி பெற்று உருவானது. இன்று, முக்கியமான ஊடக நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த நூலுடன் மேலதிக தகவல்களுக்கு படிக்கவேண்டிய நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஆர்வம் உடையவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நூலில் ஊடகங்கள், பத்திரிகைகள் பற்றி அரசியல்வாதிகள்,  பத்திரிகையாளர்கள் கூறும் கருத்துகள் நிறைய உள்ளன. அவற்றை நிதானமாக படித்துப் பார்த்தால் எதனால் அக்கருத்தை கூறினர் என யோசித்துப் பார்த்து அறியலாம். பத்திரிகையாளர்களுக்கான முக்கியமான நூல். ஆக்ஸ்ஃபோர்டின் தயாரிப்பு என்பதால் நம்பிக்கையுடன் வாங்கிப் படிக்கலாம்.

கோமாளிமேடை டீம்

Image - Rakutan kobo


Journalism: A Very Short Introduction (2nd edn)
Ian Hargreaves
Published:
28 August 2014

https://academic.oup.com/book/744?searchresult=1

கருத்துகள்