அமெரிக்கர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் பாதிப்பு!

 


உடல் பருமன்








நேரடியாக சுற்றி வளைக்காமல் உண்மையைச் சொல்லவேண்டுமெனில், அமெரிக்காவில் உடல் பருமன் என்பது கட்டுப்பாட்டை மீறி சென்றுகொண்டிருக்கிறது. 2017-2020 காலகட்டத்தில் உடல் பருமன் அளவு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும்  கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தருகிறது.

வயது வந்தோருக்கு ஏற்படும் உடல் பருமன் அளவு 4.5 சதவீத அளவாக உள்ளது. வெறும் கலோரிகளை மட்டும் அடையாளம் கண்டு அவற்றை எரிப்பது எனபது உடல் எடையைக் குறைப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. உணவுமுறை, உடற்பயிற்சி என இரண்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருந்தது. இதனால், உடல் எடையை ஒருவர் குறைக்க முயன்றாலும் எதிர்பார்த்த அளவில் உடனே பயன் கிடைக்கவில்லை.

உடலில் மூளையுடன் தகவல்தொடர்பு கொள்ளும் ஏராளமான உயிரியல் பொருட்கள் உள்ளன. உணவுமுறை மாறி, எடை குறைப்பிற்கு ஒருவர் தயாராகும்போது அவை பல்வேறு தாறுமாறான சமிக்ஞைகளை மூளைக்கு கொடுக்கின்றன. இதனால் ஒருவரின் உடல் செயல்பாடுகள் மாறுகின்றன. எடை குறைப்பிற்கு பல்வேறு உடற்பயிற்சிகளை ஒருவர் செய்தாலும் கூட, அவை பயனில்லாமல் போவது இப்படித்தான்.

உடலில் கொழுப்பை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஹார்மோன்களின் பங்களிப்பு அதிகம். இன்சுலின், கார்டிசோல், தைராய்டு, டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், லெப்டின், வளர்ச்சி ஹார்மோன் ஆகியவை இப்படி பங்களிக்கின்றன. இதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடல் எடை குறைப்பு என்பது சிக்கலானதாக மாறிவிடும்.

குறிப்பாக, செல்களுக்கு கொழுப்பை எரித்து ஆற்றலைக் கொண்டுவரும் இன்சுலின் பாதிக்கப்பட்டால் ஆபத்து அதிகம். இதனால் கொழுப்பு எரிக்கப்படாமல் உடலில் சேகரமாகும். ஹார்மோன் சரியாக செயல்படாதபோது உடலில் கொழுப்பு எப்படி உடலில் படிகிறது, எடை கூடுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள், மன அழுத்தம் ஆகியவை எடையை அதிகரிக்கின்றன. சிறிதளவு உடல் எடை அதிகரித்தாலும், பெண்கள் தங்கள் எடையைக் குறைக்க அதிக முயற்சியை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த மன அழுத்தமே அவர்களது உடலை கடுமையாக பாதிக்கிறது. இதனால் அவர்கள் விரும்பாத வகையில் எடை மேலும் கூடுகிறது.

2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வு அடிப்படையில், அமெரிக்க மக்கள் 88 சதவீதம் பேர், தினசரி உணவில் குறைந்தபட்சம் தேவையான அளவுக்கு பழங்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. 90 சதவீதம் பேர் பெரும்பாலான உணவுத்தேவையில் பழங்களை உண்பதில்லை என உறுதியாகியுள்ளது.

இதற்கு பதிலாக என்ன சாப்பிடுகிறார்கள் என்பதுதான் முக்கியமானது. தினசரி உடல் தேவைக்கு தேவையான கலோரிகளை அமெரிக்கர்கள், 57 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்கள். இப்படி பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவது அவர்களது பசியை மென்மேலும் அதிகரிப்பதோடு, போலியான பசியையும் தூண்டிவிடுகிறது.

ஊட்டச்சத்துகள் இல்லாத பதப்படுத்தப்பட்ட பொருட்களை சாப்பிடும்போது உடல் ஆரோக்கியம் குலைவதோடு, எடை அதிகரிப்பதும் மெல்ல நடைபெறுகிறது. இன்று பதப்படுத்தப்பட்ட உணவுகள் காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இதனால் அவற்றைப் பார்ப்பவர்களுக்கு உடனே சாப்பிட வேண்டுமென்ற மன உந்துதல் தோன்றுகிறது. கிலோ கணக்கில் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதன் விளைவாக, வயிற்றில் தொப்பை சரிந்து, கண்ணில் கறைபட்டவர்களாக தளர்ந்து போகிறார்கள். எடை அதிகரித்து நோயில் வீழ்கிறார்கள்.

மனிதர்கள் எப்போதும் அலைந்துகொண்டே இருப்பவர்கள். ஆனால், இன்றைய நவீன வாழ்க்கையில் வேலை, பொழுதுபோக்கு ஆகியவை அவர்களை ஓரிடத்திலேயே உட்கார வைத்துவிட்டது. டிவி சேனல் நிகழ்ச்சிகளை சோபாவில் உட்கார்ந்து பல மணி நேரம் பார்க்கிறார்கள். ஸ்மார்ட்போனும் இதேபோல சூழலையே ஏற்படுத்துகிறது.

உடல் இயக்கத்தில் இருக்கும்போது, பெரும்பாலான கொழுப்பு எரிக்கப்படுகிறது. ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிட்டாலும் கூட மாரத்தான் ஓடுகிறீர்கள் என்றால், உடலில் சேரும் கொழுப்பு அந்த செயல்பாட்டில் கரைந்துவிடும். வேறுவழியே இல்லை. உடலுக்கு அந்த நேரத்தில் ஆற்றல் தேவை.

உடலில் சேரும் கொழுப்பு, நச்சு பொருட்கள் ஆகியவை மனிதர்களின் உடல் இயக்கத்தினால் அழிக்கப்படுகின்றன. அல்லது வெளியேற்றப்படுகின்றன. அதாவது, இந்த வகை உடல் இயக்கம் என்பதை உடற்பயிற்சி என கொள்ளலாம். ஆனால், ஒருவர் தனது உடலை சரியான அளவுக்கு இயக்கவில்லை எனில், கொழுப்பு, நச்சு பொருட்கள் உடலில் தற்காலிகமாக சேர்த்துவைக்கப்படுகின்றன.

ஒருவர் சாப்பிடும் உணவு, மருந்துகள், தினசரி பயன்படுத்தும் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகியவற்றிலிருந்து கணக்கில்லாத அளவுக்கு நச்சுகள் உடலுக்குள் செல்கின்றன. இவை டஜன் கணக்கில் சேர்ந்து உடலின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக இயங்குமாறு நிர்பந்திக்கின்றன. உடலில் சேரும் நச்சுகள், உடலிலுள்ள என்சைம்களை பாதிக்கின்றன, செரிமான பாதையில் காயங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் கடந்து எடையை அதிகரிக்கின்றன.

உடலில் சேரும் நச்சுகளை நீக்குவது முக்கியமானது. இதன் வழியாக உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றம் சீராகும். ஹார்மோனை பாதிக்கும் வேதிப்பொருட்கள் அழிக்கப்படுகின்றன. ரத்தத்தில் உள்ள தேவைக்கதிகமான வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.

நீங்கள் நச்சுப்பொருட்களை எப்படி அடையாளம் கண்டு வெளியேற்றுவது? நீங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் உள்ள  பாரபீன்ஸ், தாலேட், சோடியம் லாரல் சல்பேட் ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கிறதா என பார்த்து  அவற்றைத் தவிருங்கள். பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு பதிலாக கண்ணாடி, ஸ்டீல் பொருட்களை பயன்படுத்தலாம். வீட்டிற்கு வெளியே காலடி எடுத்து வைத்து சற்று நடந்துவிட்டு வரலாம். அதற்கு கூட நேரமில்லையா? வீட்டு ஜன்னலையேனும் சற்று நேரம் திறந்து வைக்கலாம்.

உணவில் இறைச்சி, பதப்படுத்தப்பட்ட பொருட்களை குறைத்துவிட்டு காய்கறிகள், தானியங்கள்,பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காய்கறிகள், பழங்களை சாப்பிடத் தொடங்கினாலே உடலில் நிறைய மாற்றங்கள் தெரியும்.

வாரத்திற்கு ஐந்து நாட்கள், தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது உடலுக்கு நன்மை செய்யும். ஒரு மாதம் உடற்பயிற்சிகளை செய்தாலே உடலில் ஹார்மோன் அளவு வெகுவாக மேம்படும். 

 

 

 

மெலிசா சோரெல்ஸ்

டைம் வார இதழ்

https://pixabay.com/photos/hamburger-p-french-fries-belly-2683042/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்