மாற்று மருத்துவமுறைகளுக்கு அதிகரிக்கும் மவுசு! சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதிக்கு திரும்பும் மக்கள்
இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் அலோபதியை தவிர்த்த பிற மருத்துவ முறைகளை அதிகம் ஊக்குவித்து வருகிறது. இதன் புதிய தாக்கமாக அலோபதி மருத்துவர்களிடம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கற்று்க்கொள்ளுவது பற்றிய விதிகள் வெளியிடப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தின. இதை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் சங்கம் மிக்சோபதி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.
கோவிட் -19 காலம் மாற்று மருத்துவமுறைகளின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. புல், பூண்டு என கிண்டல் செய்யப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகள் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளன. சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் முக்கியமான உதாரணம். பதினைந்து மூலிகைகளை கொண்டு மாத்திரை, சூரணமாக விற்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இதனை மாநிலமெங்கும் குடிக்க பரிந்துரை செய்தது. அலோபதியை விட ஹோமியோபதி, சித்த ஆயுர்வேத மருந்துகள் கோவிட் -19க்கு சிறப்பான பயன்களைத் தந்துள்ளன.
புகழ்பெற்ற தெரபி முறைகள்
ரெஃப்ளெக்ஸாலஜி
உடலின் பல்வேறு ஆற்றல் புள்ளிகளை தடையில்லாமல் இயங்கச்செய்து உடல் நோய்களை குணப்படுத்துகிறது.
ரெய்கி முறை
ஜப்பான், திபெத் நாட்டில் புழக்கமாக உள்ள மருத்துவ முறை. உடலிலுள்ள ஆற்றல் புள்ளிகளை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சமநிலைப்படுத்தி நோய்களுக்கு தீர்வு காண்கிறார்கள்.
பிராண சக்தி
உடலை தொடாமல் நோயைத் தீர்க்கும் மருத்து சிகிச்சை முறை. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டு இதனை செய்கிறார்கள்.
ஹிப்னோதெரபி
சைக்கோதெரபியில் ஒரு வகை. வலி, பதற்றம், மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
2030இல் இந்தியாவில் ஒரே நாடு ஒரே மருத்துவமுறை என்ற திட்டத்தை கொண்டு வரவிருப்பதாக கூறுகிறார்கள். அது எந்த மருத்துவமுறை என்பது அரசுக்குத்தான் தெரியும். பல்வேறு வியாதிகளுக்கு மேற்கு நாடுகளின் மருத்துவத்தில் பயனில்லை என்பதால் மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது என கூறுகிறார்கள். அனைத்து மருத்துவமுறைகளிலுள்ள சாதகமான பலன்களை எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம். இன்று சித்த மருத்துவர் ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்த சோதனைகளை செய்து பிறகுதான் நாடி தொட்டு பார்க்கிறார். இந்த முறை இன்னும் மாறும்.
பழமையான மருத்துவ முறைகள்
சித்த மருத்துவம்
மருந்துகளோடு வாழ்க்கை முறை மாற்றம், பிரணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி சிறப்பான பயன்களைக் கொடுக்கிறது. சோரியாசிஸ், குடல் புண், தோல் பிரச்னைகள், நீரிழிவு சார்ந்த பக்கவிளைவுகள் ஆகியவற்றுக்கு சிறப்பான பயன்களை அளிக்கிறது.
ஹோமியோபதி
சாமுவேல் ஹாகென்மென் என்ற ஜெர்மனிக்காரர் உருவாக்கி மருத்துவமுறை. ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருளை மருந்தாக வழங்குகிறார்கள். இந்த முறையில் மாதவிடாய் பிரச்னை, மைக்ரேன் தலைவலி, வீக்கம், உடல் பருமன், தோல் பிரச்னைகளை தீர்க்கிறார்கள். 1796ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மருத்துவமுறை.
சோவா ரிக்பா
இந்தியாவின் லடாக், அருணாசலப்பிரதேசம், பூடான், மங்கோலியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை.. நாடித்துடிப்பு, சிறுநீர் ஆகியவற்றை ஆராய்ந்து மருந்துகள் வழங்கப்படுகின்றன. தூக்கமின்மை, செரிமான பிரச்னைகள், உணர்வுக்குறைபாடுகள் ஆகியவற்றுக்கு சிறப்பாக பயன் அளிக்கின்றன.
யுனானி
கிரேக்க மருத்துவர்களான ஹிப்போகிரேட்ஸ், காலன் ஆகியோர் மூலம் உலகம் முழுக்க பரவிய மருத்துவ முறை. ஒருவருக்கு நோய் ஏற்பட ஏழு காரணங்கள் என்பதை இம்மருத்துவமுறை நிறுவுகிறது. தொற்றா நோய்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் இதில் உள்ளன. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற நோய்கள், நோய்எதிர்ப்பு சக்தி தாறுமாறு வேகம் கொள்வது, வாழ்க்கை முறை கோளாறுகள், கருவுறுதல் தொடர்பான நோய்கள் ஆகியவற்றுக்கு சிறப்பான பயன்களைக் கொடுக்கிறது.
யோகா இயற்கை மருத்துவமுறை
உடல் தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ள அதற்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதுதான் இயற்கை மருத்துவத்தின் லட்சியம். பசி எடுக்கவில்லையா? உண்ணா நோன்பிருந்தால் போதும். உடல் இயல்பு நிலைக்கு திரும்பும். இதுபற்றி தமிழ்வாணன் எழுதிய நூல் நூலகங்களில் கிடைக்கும். தெளிவாக பல்வேறு நோய்களை எப்படி தீர்ப்பது என எழுதியிருப்பார். இயற்கை மருத்துவம் பற்றிய முக்கியமான நூலும் கூட. மன அழுத்தம், உணர்ச்சி சார்ந்த குறைபாடுகள், தோல் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை தருகின்றன.
ஆயுர்வேதம்
இதனை மத்திய அரசே விளம்பரம் செய்வதால் சொல்லுவதற்கு புதிதாக ஒன்றும் இல்லை. வாதம், பித்தம், கபம் என மூன்று சமாச்சாரங்கள் டிராக் மாறினால் உடல் நோயுறும். நோய்க்கு ஏற்ப பத்திய உணவு உண்டு மனவலிமையோடு பொறுத்தால் நோய் தீரும். இல்லையென்றால் நோயுடன் ஆளும் காலி என்பதை உறுதியோடு சொல்லும் மருத்துவம். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மருத்துவம் என சோப்பு விளம்பரங்களிலேயே பலமுறை சொல்லுகிறார்கள். அது உண்மைதான். இதனை உருவாக்கி புகழ் சேர்த்தவர் தன்வந்திரி. மயிலை வெங்கட் ரமணாவில் அவருக்கு கோயிலும் உண்டு. பூஜையும் உண்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
13.12.2020
கருத்துகள்
கருத்துரையிடுக