மணிரத்னம் என்ற இயக்குநரின் படங்களை புரிந்துகொள்ள உதவும் நூல்! பரத்வாஜ் ரங்கனின் மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல்!
மணிரத்னம் படைப்புகளுடன் ஓர் உரையாடல்
பரத்வாஜ் ரங்கன்
கிழக்கு பதிப்பகம்
மணிரத்னம் எப்படி தன் படங்களை உருவாக்குகிறார், பிறரது படங்களிலிருந்து தனது படங்களை எப்படி வேறுபடுத்துகிறார்,. படத்தின் மார்க்கெட்டிங்கை யார் செய்கிறார்கள், படத்தின் ஒளிப்பதிவுக்கென என்ன உத்திகளை பயன்படுத்துகிறார், பல்வேறு மொழிகளில் படங்களை உருவாக்குவது அவருக்கு எப்படி எளிதாக இருக்கிறது என ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
அதிகம் பேசாதவர். இருளும் ஒளியும் மாயம் செய்யும் படங்களிலும் வசனங்கள் நறுக்கென இருக்கும். எப்படி இந்த மாயத்தை செய்கிறார் என்பதை ஏராளமான கேள்விகளைக் கேட்டு பரத்வாஜ் ரங்கன் கேட்டு எழுதியிருக்கிறார்.
வெறும் படங்களை மதிப்பீடு செய்யும் புத்தகமாக தொடங்க திட்டமிட்டு உரையாடல் வடிவில் நூலை வடிவமைத்துள்ளது நல்ல ஐடியா.
அனுபல்லவி தொடங்கி ராவணன் வரையிலான பல்வேறு பட அனுபவங்களை மணி எளிமையாக பகிர்ந்துகொள்கிறார். இதில் பரத்வாஜ் ரங்கனிடம் கோபப்படும் இடங்களும் உண்டு. குறிப்பாக குறியீடுகளைப் பற்றி பாம்பே, ராவணன் படங்களைப் பற்றி கேட்கும்போது மணிரத்னம் எரிச்சலாவது வெளிப்படையாகவே பதில்களில் தெரிகிறது. தன் படங்கள் எதனால் தோற்றுப்போனது என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டு அதை ஏற்றுக்கொண்டு பேசும் தன்மை இவரிடம் உள்ளது. பிற இயக்குநர்களிடம் இருந்து இவரை தனித்து காட்டுவது இதுதான்.
நூலின் இறுதியில் மணிரத்னம் இதுவரை இயக்கியுள்ள படங்கள், அதற்கு
பெற்ற விருதுகள், பெருமைகள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன. படம், அதில் இடம்பெற்றுள்ள கலைஞர்கள் என அனைவரின் பெயர்களும் உள்ளன.
சுதந்திரம் கிடைத்தால் இயக்குநர் எப்படியெல்லாம் செயல்படமுடியும் என்பதை நாயக ன், அக்னிநட்சத்திரம் படத்தில் மணிரத்னம் நிரூபித்து காட்டியுள்ளது படிக்க அருமையாக உள்ளது. இளையராஜா, மணிரத்னம் காம்பினேஷன் எப்படி பணிபுரிந்தார்கள், எதனால் பிரிந்தார்கள், எப்படி ரஹ்மானுடன் இணைந்தார்கள் என்ற பகுதி பலருக்கும் பிடித்தமானதாக இருக்கலாம். அதற்கு தன்னால் முடிந்தவரை நேர்மையாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
படங்களைப் பார்க்கும்போது இந்த காட்சியை எதற்காக இயக்குநர் வைத்திருக்கிறார், என்ன அர்த்தம் என பலருக்கும் கேள்விகள் வந்திருக்கும். மணிரத்னம் தனது படங்களின் வைத்திருக்கும் காட்சிகளின் பூடகத்தன்மையை நூலில் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் படத்தின் காட்சிகளில் பங்களிக்கும் அவரது மனைவி சுகாசினி பற்றியும் விவரித்துள்ளார். சுஜாதா, ராம்கோபால்வர்மா, அனுராக் காஷ்யப் பற்றியும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.
பல்வேறு நடிகர்கள் பிற இயக்குநரின் படத்தில் எப்படி நடிக்கிறார்கள், மணிரத்னம் படத்தில் எப்படி தனித்து தெரிகிறார்கள் என்பதையும் மணிரத்னம் தனது பேச்சிலேயே கூறியிருக்கிறார். முழுமையாக உள்வாங்கிக்கொண்டால் போதும் என ஒரு வார்த்தையில் அவர் கூறினாலும் அதன் பொருள் பெரியது. நேர்காணலில் கூட படம் என்பது கம்பைன்டு ஆர்ட் என சுருக்கமாக சொல்லுகிறார். இதனால்தான் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் அத்துறை சார்ந்த ஆட்களை வைத்து வேலைவாங்கி மணிரத்னம் வெல்லமுடிகிறது.
ஒருவகையில் முன்னர் மணிரத்னம் படங்களை பார்த்திருந்தாலும் நூலை படித்தபிறகு பார்த்தால் அந்தபடங்கள் வேறுவிதமாக ஒளியில் தெரியக்கூடும்.
மணிரத்னம் பார்வையாளர்களுக்கான டெடிகேட் நூல்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக