தானியங்கி கார்களின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் சுணக்கம் ஏன்? முக்கியமான காரணங்கள் இவைதான்!
தானியங்கி கார் ஆராய்ச்சியில் தேக்கம்!
டெஸ்லா கார் நிறுவனம் அண்மையில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது. தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா காரில் எச்சரிக்கை வாசகம் ஊடகங்களில் கவனிக்கப்பட்டது. ’’’தானியங்கி முறையில் இயங்கும் காரில், தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது. எனவே ஸ்டீரியங் வீலில் கைவைத்து வண்டியை இயக்குங்கள். கவனமாக இருங்கள்’'என்று பொறுப்பு துறப்பு வாசகங்கள் கூறப்பட்டிருந்தன.
தற்போதைய வாகனங்களில் டெஸ்லா நிறுவனம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனாலும் முழுமையாக தானியங்கி முறையில் கார்களை இயக்கும் முறையில் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி கார்கள்தான் எதிர்காலம் என உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறின. தானியங்கி கார்கள் தயாரிப்புக்கான காலக்கெடுவை விதித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கின. ஆனாலும் இன்றுவரை ஒரு நிறுவனம் கூட முழுமையான ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கு தடையாக இருக்கும் காரணங்கள் என்ன?
தானியங்கி கார்கள் மொத்தமாக 44,25,69,600 கி.மீ தூரம் விபத்தில்லாமல் சென்றால்தான் அதனை பாதுகாப்பான கார்கள் என்று கூறமுடியும். தானியங்கி கார்களுக்கு பாதுகாப்பு என்பதை எப்படி வலியுறுத்துவது என தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவிக்கின்றனர். வாகனம் ஓட்டும்போது சாதாரணமாக நிறைய தடைகள் ஏற்படும். அதனை ஓட்டுநர்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் தானியங்கி கார்கள் இதனை எப்படி செய்யும்? தானியங்கி கார்கள் 20 சதவீதம்தான் மனிதர்களுக்கு பாதுகாப்பானவை என்று ராண்ட் கார்ப்பரேஷன் அறிக்கை கூறுகிறது. 2009ஆம்ஆண்டு வேமோ என்ற நிறுவனத்தின் தானியங்கி கார், 3,21,86,880 கி.மீ. தூரத்தை விபத்தின்றி பாதுகாப்பாக கடந்துள்ளது. ஓட்டுநர்களுக்கும், நடைபாதையில் நடப்பவர்களுக்குமான பல்வேறு சோதனைகளை நடத்தித்தான் தானியங்கி கார்களை மேம்படுத்த முடியும்.
வளர்ந்த நாடுகளில் கூட தானியங்கி கார்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்புகள் முழுமையாக இன்னு்ம் உருவாக்கப்படவில்லை. இதனால் தானியங்கி கார்களின் சென்சார், கேமராக்கள் மோசமான வானிலை, சாலை தடுப்புகளால் தடுமாறி விபத்துக்குளாக வாய்ப்புள்ளது. தானிங்கி கார்களை பல்வேறு கார் நிறுவனங்கள் தயாரிப்பதால், விபத்துகளை தடுக்கும் வசதிகளில் கூட ஒற்றுமை காணப்படுவதில்லை. போக்குவரத்து விளக்குகளையும் கண்காணிப்பு கேமராக்களையும் கூட மேம்படுத்தப்படவேண்டிய தேவை உள்ளது.
தானியங்கி கார்கள் விபத்துக்குள்ளாகி பாதிப்பை பயணிப்பவருக்கு அல்லது மக்களுக்கு ஏற்படுத்தினால் யார் அதற்கு பொறுப்பு என்பதில் இன்னு்ம சட்டரீதியான குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய சட்டப்படி சாதாரண கார்களில் ஏற்படும் விபத்துக்கு ஓட்டுநர்தான் பொறுப்பு. சட்டவிதிகளை தெளிவாக வரையறுப்பதில் இன்னும் தானியங்கி கார் நிறுவனங்கள் துல்லியமான முடிவுக்கு வரவில்லை.
எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சரக்கு சேவையில் தானியங்கி நிறுவனங்கள் நுழைய அதிக வாய்ப்புளள் உள்ளன. இதன் காரணமாக, ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. வேமோ நிறுவனம், தானியங்கி கார்கள் செய்யும் தவறுகளை மேற்பார்வையாளர்களை வைத்து திருத்தி முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் நாம் அனைவரும் தானியங்கி கார்களை ஆர்டர் செய்யும் நிலை வருவது உறுதி.
Techlifenews
நன்றி
தினமலர் பட்டம்
படம் ஏஐ டிரெண்ட்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக