ஜனநாயக இந்தியா - ஜவாகர்லால் நேரு உரை! - இடைக்கால அரசு பற்றிய நேருவின் உரை மொழிபெயர்ப்பு!
ஜனநாயக இந்தியா
ஜவாகர்லால் நேரு உரை
தமிழில் வின்சென்ட்காபோ
இடைக்கால இந்திய அரசு
நண்பர்களே தோழர்களே ஜெய்ஹிந்த். ஆறு நாட்களுக்கு முன்னர் நான் இந்திய அரசின் நிர்வாக அலுவலக அறையில் அமர்ந்து சக அதிகாரிகளோடு பேசிக்கொண்டிருந்தேன். முழுமையான சுதந்திரம் பெற்று தொன்மை நிலத்திலிருந்து அரசு உருவாகியிருந்தது. அதற்கு வாழ்த்து்கள் தெரிவித்து உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தும் ஏராளமான வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன.
பலர் ஏன் புதிய அரசு அமைந்த வரலாற்று தருணத்தை கொண்டாடவில்லை என்று கேட்கின்றனர். காரணம், நாம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றாலும் நாம் நினைத்த லட்சியத்தை இன்னும் அடையவில்லை. மக்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டுமென்று நான் நினைக்கிறேன். நமது பயணத்தில் நிறைய தடைக்கற்களும், சவால்களும் எதிர்கொள்ள நேரிடும். இப்பயணத்தில் பலவீனத்தை அல்லது மனநிறைவை உணர்ந்தோம் என்றால் அத்தோடு பயணம் முடிவுக்கு வந்துவிடும்.
கல்கத்தாவில் சகோதர ர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதை மறக்கமுடியாது. அச்சம்பவம் நமது இதயத்தை கனமாக்கிக்கொண்டுள்ளது. நாம் அனைவரும் விரும்பிய இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தவர்கள் யாரும் குறிப்பிட்ட மதம், இனம், வர்க்கம் சார்ந்தவர்கள் அல்ல. நாம் அனைவரும் அனைவருக்குமான கூட்டு நலம், சமவாய்ப்பு என்பதை நோக்கி பயணித்தால்தான் வாழ்க்கைக்கான மதிப்பை அறிய முடியும். இந்த நேரத்தில் இந்தியர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பயமும் சந்தேகமும் கொள்ளவேண்டும்?
நான் இன்று உங்களிடம் பேசுவது இந்திய அரசின் கொள்கைகள் அல்லது எதிர்காலத்திற்கான நமது திட்டங்களை அல்ல. அவற்றை பின்னொரு நாளில் நாம் பேசலாம். எங்கள் மீது எண்ணற்ற அளவில் காதலும் அன்பும் கொண்டுள்ளதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நண்பர் எனக்கு தெரிவித்த செய்தியில் புயலிலும் கூட கப்பலை செலுத்தி வருகிறாய். வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். ஆனால் நாம் செல்லும் கப்பல் பழையது என்பதோடு ஏராளமான புயல்களையும் எதிர்நோக்கியுள்ளோம். மேலும் அதனை காலத்திற்கேற்ப மாறுதல் செய்யவேண்டிய தேவையுள்ளது. நமது கப்பல் பழையதாக இருந்தாலும் அதனை இயக்கும் கேப்டனுக்கு கைகொடுக்க பல கோடி இதயங்கள் உள்ளன. எனவே நம்பிக்கையோடு அலைகளை எதிர்கொண்டு கப்பலை செலுத்த தயாராகவேண்டும்.
இந்தியாவிற்கான எதிர்காலம் மெல்ல உருவாகத்தொடங்கிவிட்டது. இந்தியா, மெல்லத் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கிவிட்டது என்றுதான் கூறவேண்டு்ம. இளமையான இந்தியா, ஒளிமிகுந்த கண்களால் தனது தொலைநோக்குத் திட்டங்களின் மீது நம்பிக்கை வைத்து இயங்கி வருகிறது. பல்லாண்டுகளாக இந்தியா கட்டுப்படுத்தப்பட்டு இருட்டில்வாழும்படி நேர்ந்துவிட்டது. ஆனால் இனிமேல் பிற நாடுகளுக்கு இந்தியா நட்புக்கரம் நீட்டி அழைத்து வருகிறது. தற்போதைய உலக நாடுகளுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் இந்தியாவின் பாணி புதிதாக உலகநாடுகளுடன் நட்பு பூண தயாராகவே உள்ளது.
இடைக்கால அரசு, புதிய இந்தியாவிற்கான சுதந்திரமான தனித்துவமான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான மக்களவையை விரைவில் அமைக்க உள்ளது. முழுமையான சுதந்திரம் பெற்ற இந்தியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளைசெயல்பாடுகளை வரையறுக்கவேண்டிய பணி உள்ளது. உலக நாடுகளுடன் நடத்தும் மாநாடுகள் மூலம் நமக்கென தனி கொள்கைகளை வகுத்து நாம் பிறநாடுகளுக்கான செயற்கைக்கோள் போன்று செயல்படமாட்டோம் என்பதை உறுதி செய்யவேண்டும். சுதந்திரம், அமைதிக்கான கொள்கைகளை பிற நாடுகளுடன் நாம் நேரடியாக ஏற்படுத்திக்கொள்வதோடு, ஒத்துழைப்புடனும் நல்லுறவு வளர்ப்பதே நமது நோக்கம்.
அரசியல் குழுக்கள் ஆகியவற்றிடமிருந்து விலகி இருப்பதோடு, ஒரு நாட்டிற்கு எதிராக நிற்பது ஆகியவை உலகப்போர்களுக்கு பல நாடுகளை கொண்டு சென்றதால், இந்தியா முடிந்தளவு இந்த விவகாரங்களில் தள்ளியிருக்கும். சுதந்திரமும், அமைதியும் ஒன்றொடொன்று பின்னிப்பிணைந்தவை. இவை எங்கெங்கு தடுக்கப்படுகிறதோ அங்கு போர் உருவாகிறது. காலனி நாடுகளான பலவற்றுடன் நாம் இணைந்து செயல்படுவதோடு, அவர்களை அங்கீகரித்தும் பல்வேறு இனக்குழுக்களுக்கு சம வாய்ப்புகளை அளிக்க ஆர்வம் கொண்டுள்ளோம். நாஜி போல இனத்தை முன்மொழிந்து ஒருவருக்கு மேல் இன்னொருவர் என ஆதிக்கம் செலுத்த விரும்புவதில்லை. மக்களிடையே சமத்துவமும் நிலவவும், தீண்டாமையை விலக்கவும் கவனமாக இருக்க விரும்புகிறோம்.
உலக நாடுகளில் உள்ள எதிரிகள், வெறுப்பு பேச்சுகள், உள்நாட்டு கலகங்கள், செயல்பாடுகள் ஆகிய அனைத்து நாடுகளும் ஒன்றாக செயல்படும்போது தவிர்க்கமுடியாதவை. சுதந்திரமான இந்தியா இணைந்து செயல்படவிரும்பும் உலகம் வர்க்கம் அல்லது குறிப்பிட்ட குழு ஆகியவற்றால் தடைபடாதவையாக இருக்கும். நமது முந்தைய வரலாறு பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டதாக இருந்தாலும், நாம் இணைந்து செயல்படுவதில் இங்கிலாந்து நாட்டுடனும் எந்த தடையுமில்லை. அந்நாடு காலனியாதிக்கத்தில் வைத்திருந்த பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுடனும் பிரச்னையில்லை.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள சிறுபான்மை மக்களிடம் காட்டப்பட்ட இனவெறியை எதிர்த்து உலகமே பார்த்து வியக்கும் நாயகத்துவமான போராட்டத்தை நாம் செய்துள்ளோம். இந்த இனவெறியை நாம் எதிர்க்காதபோது உலகம் முழுவதும் ஏராளமான கலகங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதோடு முழு உலகமே பெரும் பிரளயத்தில் சிக்கிக்கொள்ளும்.
நாம் அமெரிக்காவின் மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோ்ம். அவர்கள் உலகநாடுகளின் உறவுகளை சீர்செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். அந்நாட்டின் பொறுப்புணர்வு பல்வேறு நாடுகளில் அமைதியையும் மனிதர்களுக்கு சுதந்திரத்தையும் அளிக்கும் என நாம் நம்பலாம். இதற்கடுத்து இதேபோன்று செயல்பாடுகளை செய்து வரும் நாடு, சோவியத் யூனியன். ஆசியாவில் சோவியத் யூனியன் நமது நட்பு நாடு. மேலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஒன்றாக இணைந்து பணிபுரிந்துவருகிறோம்.
ஆசியாவைச் சேர்ந்த மக்கள், ஆசியாவிலுள்ள நம்முடன் அருகில் உள்ளனர். பிறரை விட நெருக்கமாக உள்ளனர். இந்தியா மேற்கு நாடுகள், தெற்கு, தென்கிழக்கு நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. கடந்த காலத்தில் இந்தியாவின் கலாசாரம் பல்வேறு நாடுகளை தன்னிடம் ஈர்த்துள்ளது. முன்னர் இந்த நாடுகள் இந்தியாவிடம் நல்லுறவு கொண்டிருந்தன. இன்னொருபுறம் ஆப்கானிஸ்தான், ஈரான், அபபு நாடுகள் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் இணைந்திருந்தன. சீனா கடந்த காலத்தில் நம்முடன் நட்பு கொண்டிருந்தநாடு. பல்லாண்டுகள் கடந்த பிறகும் அந்த நட்பு வளர்ந்து வருகிறது. இன்று அந்நாட்டில் நிகழும் பிரச்னைகள் தீர்த்து ஒருங்கிணைந்த நாடாக ஜனநாயக சீனா உருவாகும்போது, உலகில் அமைதியும் வளர்ச்சியும் உருவாகும்.
நான் இதுவரை நமது உள்நாட்டு கொள்கைகளைப் பற்றி ஏதும் கூறவில்லை. இப்போது அதனைக் கூறவும் நினைக்கவில்லை. ஆனால் அந்தக் கொள்கை இத்தனை காலமும் நாம் கடைபிடித்து வந்தவழியேதான் உருவாகும். இந்தியாவில் வாழும் எளிய சாதாரண மனிதன் கூட மனநிம்மதி பெறும்படியும் அவனது வாழ்க்கை மேம்படும்படியும் கொள்கைகள் அமையும். நாம் தீண்டாமைக்கு எதிராகவும், பாகுபாட்டை ஊக்குவித்து ஒலிக்கும் குரல்களை எதிர்க்கவும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை பாதுகாக்கவும் முயல்வோம்.
இன்று பல லட்சம் இந்தியர்கள் உணவின்றியும் உடையின்றியும் வீடின்றியும் தவித்துவருகின்றனர். உணவின்றி நாள் முழுக்க பசியால் வாடுவோரும் அதிகம். இந்த அவசரநிலையைக் கருத்தில் கொண்டு நமது அண்டைநாடுகள் உணவு தானியங்கள் நமக்கு அனுப்பி உதவுவார்கள் என நம்புவோம். அனைவருக்குமான சமத்துவம் என்பது காலத்திற்கு அவசியமானது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்திய சுதந்திரத்திற்கான வீட்டை இன்றுவரை கனவுகண்டதுபோல கட்டமுடியவில்லை. நமக்கிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட இந்திய நிலத்தில் ஒன்றாக வாழவும் உழைக்கவும் தயாராக இருக்கவேண்டும். இவற்றை அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் கடைபிடிக்கவேண்டும். வெறுப்பும், வன்முறையில் இந்தியாவின் அடிப்படை விஷயங்களை மாற்றிவிடமுடியாது.
அரசியலமைப்புச்சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியபோது, பலருக்கும் அதில் கருத்துவேறுபாடுகள், விமர்சனங்கள் இருந்தன. நாங்கள் இதற்கு தயாராகவே இருந்தோம். நான் எனது நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும் கூறுவது, நமது கருத்துவேறுபாடு என்பது நாம் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்காக சண்டையிடும் இடம் அல்ல. நாம் ஒரு தீர்மானத்தை ஏற்கவும் மறுக்கவும் அதற்கான ஆழமாக நல்லெண்ணத்தைப் பின்னணியில் கொண்டிருப்பது முக்கியம். அனைத்து சர்ச்சைப்பூர்வமான விவகாரங்கள் குறித்த தீர்வுகளையும் மனதில் நினைத்துக்கொண்டு மக்களவைக்கு செல்லவேண்டு்ம். ஒருங்கிணைந்து நாம் எடுக்கும் முடிவுகளில் பொருந்திப்போகதவர்களையு்ம நாம் அனுசரித்து சக கூட்டாளிகளாக நடத்தவேண்டும். இதனால் பொது பிரச்னைக்காக நாம் ஒன்றுகூடும்போது தனிப்பட்ட பிரச்னைகள் பூசலாக எழாது.
இந்தியா முன்னர் பல்வேறு ஆணைகளை நிறைவேற்றும் பணியாளராக இருந்தது. பிறர் இந்தியாவை காய்களைப் போல நகர்த்தி பல்வேறு செயல்களை செய்துகொண்டனர். ஆனால் இன்று அந்த அதிகாரம் மக்களின் கையில் உள்ளது. அவர்கள் தங்களது வாய்ப்புகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அனைவரும் இணைந்து இந்த பெருமைக்குரிய பணியை செய்து பிற நாடுகளைப் போலவே இந்தியாவை வலுவான நாடாக்குவோம். கதவு திறந்து கிடக்கிறது. இங்கு இப்பணியில் யார் வெல்வார்கள், தோற்பார்கள் என்ற பேச்சுக்கு இடமில்லை. நாம் அனைவரும் ஒன்றுசேர வெல்வோம அல்லது ஒன்றாகவே கீழே வீழ்வோம். இதில் நாம தோற்றுப்போகிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் வெற்றியுடன் முன்னே நகரும்போது சுதந்திர இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரம் மற்றும் நல்வாழ்வை உணரவும் அனுபவிக்கவும் முடியும். ஜெய் ஹிந்த்.
சுதந்திரமான இறையாண்மை கொண்ட குடியரசு
1. இந்த மக்களவை இந்தியா என்ற நாடு இறையாண்மை கொண்ட குடியரசு என்பதோடு எதிர்காலத்திலும் அரசியலமைப்புச்சட்டப்படி செயல்படும்.
2. பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பகுதிகள் இனி இந்திய மாநிலங்களாகவும் அவர்களின் ஆட்சிக்கு அப்பாலுள்ள மாநிலங்களும் இந்தியாவுடையதாகவும்கருதப்பட்டு ஒருங்கிணைந்த இந்தியா என அழைக்கப்படும்.
3. தற்போது வரையறைக்குட்பட்ட இந்தியப்பகுதிகளோடு அப்படி வரையறைக்குட்படாத பகுதிகள் மக்களவையின் மூலம் அரசியலமைப்புச்சட்டத்தினை ஆதாரமாக கொண்டு பிரிக்கப்படும். அதற்கேற்ப அவறுக்கான அதிகாரங்கள், செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவை மத்திய அரசு மூலம் வழங்கப்படும்.
4. இறையாண்மை மிக்க இந்தியாவின் அதிகாரங்கள் அனைத்தும் மக்களிடமிருந்து பெறப்பட்டவை. இவை அரசியலைமைப்புச்சட்டத்தின் வழியில் உருவானவையாக இருக்கும். மக்களவை, அரசியலமைப்பு ஆகியவை அரசின் நீக்கமுடியாத பாகங்கள் ஆகும்.
5. இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு, சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்கள் வழங்கப்படும். மேலும் அவர்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். சட்டத்திற்கு உட்பட்டு மக்கள் நம்பிக்கை, வழிபாடு, செயல்பாடுகளை செய்யலாம்.
6. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பிற பிற்படுத்தப்பட்ட பின்தங்கிய வகுப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
7. அனைத்து மாநிலங்களுக்கும் நிலம், நீர், காற்று என பல்வேறு விவகாரங்களிலும் சட்டத்திற்குட்பட்டு இறையாண்மையுடன் செயல்பட அனைத்து உரிமைகளும் உண்டு.
8. இந்த தொன்மையான நிலம் உலகில் பெருமையோடு கூறப்படுகிறது. உலகில் அமைதி மற்றும் வளம் தொடர்பாக பங்களிப்பை அளிக்கும்.
ஐயா, இது மக்களவை நடைபெறத்தொடங்கிய ஐந்தாவது நாள். நமக்குத் தேவையான பல்வேறு கொள்கைகள் பொருட்கள் வழங்குவது தொடர்பாக நாம் பேசவேண்டும். இதற்காக நாம் நேரம் ஒதுக்கி அவர்கள் நினைத்து பார்ப்பதை செய்ய தயாராக இருக்கவேண்டு்ம். இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சில நாட்களில் இதற்கான களப்பணிகளைச் செய்து முடிக்கவேண்டும். நாம் நிறைய விஷயங்களை செய்யவேண்டியுள்ளது. நாட்டின் கனவு, விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முன்னதாக இப்பணியை எளிமையாக்க இதற்கான கமிட்டிகளை உருவாக்கும் அவசியம் உள்ளது. நாம் இப்போது உள்ள நிலையை நமது நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகளும் கவனித்து வருகின்றன. நாம் என்ன செய்யப்போகிறோம், எங்கு செல்லவிருக்கிறோம் என்பதை அவர்களும் கண்காணித்துக்கொண்டு உள்ளனர். நான் இங்கு அதைக் கூற விரும்புகிறேன். அதனை ஒரு தீர்மானமாக அன்றி உறுதிமொழியாக முன்மொழிய விரும்புகிறேன்.
நான் சொல்ல விரும்புவதை மக்களவையில் கூறினால் அது சரியானபடி மனித உணர்வுகளை பிரதிபலிக்குமா என்று தெரியவில்லை. அறிவிப்புக்கு பின்னாலுள்ள வைராக்கியத்தை வார்த்தைகள் சரியானபடி விவரிக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. நான் இந்தியாவிற்கான கனவை இங்கு சொல்லப்போகிறேன். இந்த விவரிப்பு சற்று நீளமாக இருந்தாலும், இதுதான் எதிர்கால இந்தியாவிற்கானதாக இருக்கும். நான் கூறும் விஷயங்கள் இந்திய மக்களின் இதயங்கள், மனத்தை பிரதிபலிக்கும் என்று முழுமையாக கூறமுடியாது. நாம் இங்கு இதை கூறுவதன் அர்த்தம், நாம் இந்த விஷயத்தை பல்லாண்டுகளாக கனவு கண்டு வந்தோம் என்பதுதான். இப்போதுள்ள நம்பிக்கைப்படி இதனை நாம் எதிர்காலத்தில் சாதிப்போம் என்று கூறலாம். நான் நினைத்துள்ள தீர்மானம் மக்களவையில் நிறைவேறும் என நம்புகிறேன். இந்த தீர்மானத்தை வழக்கம் போல கைகளை தூக்கி நிறைவேற்றாமல் அனைவரும் ஒன்றுபோலவே எழுந்து நின்று இதனை உறுதிமொழி போல ஏற்க வேண்டுகிறேன்.
மக்களவையில் பல உறுப்பினர்கள் வராமல் இருக்கிறார்கள். அவர்கள் சபைக்கு வராமல் இருக்க உரிமை உள்ளது. இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் பல்வேறுகுழுக்கள், இனங்கள், மக்கள், நிலப்பரப்புரீதியாக வேறுபட்ட பகுதிகளிலிருந்து இங்கு வந்துள்ளனர். நாம் இந்த வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்தால் மட்டுமே மக்களவையில் உறுப்பினர்கள் அமரும் இடம் நிறைந்திருக்கும். எதிர்காலத்தில் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் இக்கூற்றுக்கு இணங்கி கூட்டுறவு முறையில் இயங்கமுடியும் என நம்புகிறேன். இங்குள்ள உறுப்பினர்கள் கட்சி குழு சார்ந்து செயல்பட்டு இங்கு பிரதிநிதியாக வந்திருக்கலாம். ஆனால் பலகோடி மக்களுக்காக பாடுபடுகிறோம் என்பதையும், அவர்களின் நலவாழ்வு பற்றியும் யோசிக்கவேண்டியது முக்கியம். கட்சி, இனக்குழுக்கள் என்பதற்கு நாம் இணக்கமாக பணியாற்றும் வேளையில் நாட்டை முக்கியமானதாக கருதுவது அவசியம். நாம் நம் முன் உள்ள பிரச்னையை தீர்க்க வேறுபாடுகளை களைவது முக்கியம். அப்போதுதான் உலக நாடுகள் இந்தியாவை மதிப்பிற்குரிய நாடாக கருதி அங்கீகரிக்கும்.
இந்த அவையில் இல்லாத இன்னொருவர், நமது மனங்களில் நிறைந்துள்ளார். நமது தேசத்தந்தையும், மக்களின் தலைவருமான அவரால்தான் மக்கள்வை உருவாகியுள்ளது. இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் அவரது கருத்தியல், உழைப்பு ஆகியவற்றை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த இடத்தில் உள்ள நம்மை அவரது ஆன்மா ஆசீர்வதிக்கும் என நம்புவோம். புதிய காலம் பிறக்கும் தருவாயில் நாம் உள்ளோ்ம். எனது மனம் பின்னோக்கிச்சென்று இந்தியாவின் 5 ஆயிரம் கோடி வரலாற்றைப் புரட்டுகிறது. அங்கிருந்துதான் மனிதர்களின் வரலாறு தொடங்குகிறது. என்னைக் கடந்து செல்லும் மக்கள் கூட்டம் எனக்கு மகிழ்ச்சியூட்டுவதோடு, ஒருபுறம் கடுமையான அழுத்தத்தையும் தருகிறது. நான் அந்த இறந்த காலத்திற்கு தகுதியானவன்தானா என்ற கேள்வியும் எழுகிறது. எதிர்காலத்தை நான் நினைக்கும்போது பிரகாசமான எண்ணங்கள் தோன்றுகின்றன. வாளின் முனைபோல இறந்தகாலமும், எதிர்காலமும் எனது கண்களுக்கு தெரிகிறது.
நாம் வரலாற்றில் முக்கியமான கட்டத்தில் நிற்கிறோம். என்னால் இதனை முழுமையாக கூற முடியவில்லை என்றாலும் அதனை உணரமுடிகிறது. இதனை ஒரு மாயாஜாலம் போலவே உணர்கிறேன். இரவிலிருந்து பகல் தொடங்குவதைப் போல, பகலில் கடுமையான மேகமூட்டம் இருப்பதைப் போல, அவை விலகியவுடன் சூரியனின் ஒளி தெரிகிறது. நான் இவற்றை உங்களிடம் கூறுவது எனக்கு கடினமானதாக உள்ளது. நான் எனது யோசனைகளை இந்த அவைக்கு தெரிவிக்கும் முன்பு இவற்றை நினைத்துப் பார்க்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பல்லாயிரக் கணககான போராட்டக்காரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். நான் இவர்களைக் கடந்தே இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இன்று நாம் காலங்கள் மெல்ல கடக்க நாம் பல்வேறு நிகழ்ச்சிகளை கடந்து வந்துள்ளோம். மக்களவை தனித்துவமான சூழலை எதிர்நோக்கியுள்ள நிலையில், எனது தீர்மானத்தை பெருமையுடன் இங்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். இங்கு தாக்கல் செய்யப்படும் தீர்மானங்கள் சிறியவை அல்லது பெரியவை என எவையாக இருந்தாலும் அவை மரியாதையுடன் கையாளப்படும். உடனே பெரியளவிலான தீர்மானங்கள் வரும் என நான் நினைக்கவில்லை. இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தாராள மனதோடு அணுகப்படவேண்டும். வாக்குவாதங்களோடும், சண்டைகளோடும் நடைபெறக்கூடாது என நான் நினைக்கிறேன்.
பல்வேறு உலக நாடுகளில் எப்படி ஜனநாயக மக்களவை உருவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அதில் அமெரிக்காவை வலிமையான நாடாக மாற்ற அந்நாட்டின் தேசத்தந்தைகள் நூற்றாண்டுகாலம் கடுமையாக பாடுபட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் பாரீசில் சுதந்திரத்திற்கான உத்வேகத்தோடு பல்வேறு போராட்டங்கள் நடந்துவந்தன. அரசர் மற்றும் அவரின் அதிகார வர்க்கத்தினர் அரசியலமைப்பு சட்டத்தை பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கும்போது சந்தித்தனர். இன்றுவரை அதேபோன்ற சிக்கல்கள் தொடர்ந்து வருகின்றன. அங்கு மக்களவையில் விவாதங்களை நிறைவுறாதபோது அவை டென்னிஸ் மைதானத்தில் வைத்து தீர்க்கப்படுகின்றன. இதனை டென்னிஸ் மைதான சத்தியம் என்று கூறுகின்றனர்.
இங்கு அவர்கள் மன்னர் இருந்தாலும் பிறர் இருந்தாலும் கூட தங்கள் வேலைகளை முடிக்காமல் செல்வதில்லை. நாமும் இந்த எடுத்துக்காட்டை கடைபிடித்து நமது விவாதங்களை குறிப்பிட்ட இடங்களில் தீர்த்துக்கொள்ளவேண்டும் என நாம் விரும்புகிறேன். அடுத்து அண்மையில் புரட்சி நடந்து சிறப்பாக செயல்பட்டு வரும் சோவியத் யூனியன் நாட்டை குறிப்பிடலாம். இந்த நாடு உலகநாடுகளில் முக்கியமானது என்பதோடு இந்தியாவுக்கு நெருக்கமான நாடும் கூட.
நாம் இந்த நாடுகளின் வெற்றி, தோல்விகளை கவனித்து நம்மை வளர்த்துக்கொள்ளவேண்டும். நான் அனைத்து தோல்விகளையும் தவிர்க்க முடியாது என்றாலும் கூட தோல்விக்கான விஷயங்களை அடையாளம் கண்டு மனித முயற்சியால் தடுக்கவேண்டியவற்றை தடுக்கலாம் அல்லவா? நம் கண்முன்னே உள்ள இந்த தடைகள், சவால்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் கனவை அடையமுடியும். தீர்மானத்தை இயற்றி மக்களவையில் தாக்கல் செய்யவிரு்ப்பதால் அதனைப் பற்றி கூடுதலாகவும் குறைவாகவும் கூறும்படி இருக்க கூடாது. கூடுதலாக விவரங்களை வெளியிட்டால் அது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும். குறைவாக சொன்னால் அது தீர்மானத்தை புனிதமாக மாற்றிவிடும். நான் கூறும் தீர்மானம் என்பது அரசியலமைப்போடு இணைத்துக்கொள்ளக்கூடியது அல்ல. அதனைத்தாண்டி அதனை பார்க்கவேண்டும்.
அரசியலமைப்புச்சட்டத்தை சுதந்திரத்துடன் இயற்றுவதற்கு அனுமதி உள்ளதோடு பிறர் வந்து இதனைப் பார்வையிட்டாலும் அதனை தனிச்சிறப்பை உணரவேண்டும் என்பது முக்கியம். இப்பணியில் அரசியல் கட்சிகள், தனிப்பட்ட குழுக்கள், தனிநபர்கள் என யாரும் உள்ளே நுழையமாட்டார்கள். இதன்மூலம்தான் இந்தியா தனித்தன்மை கொண்ட குடியரசு நாடாக மலரும். இறையாண்மையும் சுயமாக நிற்கும் தன்மை கொண்ட குடியரசு நாடாக இந்தியா இருக்கும். நான் இங்கு முடியசசு பற்றி பேசவில்லை. காரணம் அப்படி ஒரு பகுதி இந்தியாவில் எங்குமே இல்லை. மாநிலங்கள் சுயமாக தன்மை அல்லது இறையாண்மை மிக்க மாநிலமாக இல்லையெனில் நாம் உள்ளூர் அரசர்கள் யாரையும் சட்டப்பூர்வ ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்போவதில்லை. எனது நண்பர்கள் ஏன் குடியரசு என்று கூறப்படுகிறது. அதில் ஜனநாயகத்தை சேர்க்கவில்லை என்கிறார்கள். உண்மைதான் குடியரசு என்பதில் ஜனநாயகம் என்பது இருப்பதில்லை. ஆனால் இந்தியாவில் செயல்பட்டு வந்த பல்வேறு அமைப்புகள் நிறுவனங்கள் ஜனநாயகத்தன்மை கொண்டவை.
நாம் ஜனநாயகத்தைத்தான் தேர்ந்தெடுக்கப்போகிறோம். அதன் வடிவம் பற்றி நாம் தீர்மானிக்க வேண்டும். நாம் தற்போது கூறும் ஜனநாயகம் என்பது ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்டது. மேலும் பல்வேறு நாடுகள் இதற்கு உதாரணமாக உள்ளன. இவை உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்துள்ளன. பல்லாண்டுகளாக ஜனநாயகம் உருவாகியுள்ள நாடுகளில் அதன் வடிவம் தொடக்கத்திலும் இப்போதும் எப்படி உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். அதன் வடிவத்தை நாம் அப்படியே நகல் எடுத்து பயன்படுத்துவதை விட அதனை மேம்படுத்துவதைப் பற்றி யோசிக்கவேண்டும். நமது நாட்டு அரசு எந்த வடிவில் உருவானாலும் அதில் முழுமையாக ஜனநாயகம் இருக்கும்படி செய்வது முக்கியம். இதனால்தான் மக்களவையில் நான் ஜனநாயகம் என்ற வார்த்தையை விட குடியரசு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஜனநாயகம் என்பதை உள்ளடக்கியதுதான் குடியரசு என்பதைப் புரிந்துகொண்டதால் நான் தேவையில்லாத பிற வார்தைகளை பேசவில்லை. அதனை மக்களவை கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன். ஜனநாயகம் என்பதில் பொருளாதார ஜனநாயகத்தை நான் விரும்புகிறேன். இதனை தீர்மானத்தில் முன்மொழியும்போது பலரும் இந்தியா சோசலிச நாடு அல்ல என்று இதற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். இந்தியா மட்டுமல்ல உலகமே சோசலிசம் சார்ந்து உருவாக வேண்டும் என்றுதான் அதன் பக்கம் நிற்கிறேன்.
சோசலிச நாடு என்பது என்னுடைய விருப்பம். இத்தீர்மானத்தில் இக்கருத்து சிலருக்கு பிடிக்கலாம். சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். இதையொட்டி இதனை சர்ச்சையாக்கி பேசுவது அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நாம் வெறும் வார்த்தைகளை கோட்பாடுகளை நம்பி நாம் காணவிருக்கும் கனவை உருவாக்க முடியாது. நான் கூறிய குடியரசு என்ற வார்த்தை இந்தியா மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிடித்தமானதாக இருக்காது.
அரசாட்சி முறை என்பது உலகிலிருந்து மெல்ல மறைந்து வருகிறது. எனவே நான் அதனை நம்பவில்லை. இக்கருத்தை நான் எனது தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு உட்பட்டு கூறவில்லை. மாநிலங்களிலுள்ள மக்கள் சமநிலையிலான சுதந்திரத்தை பெறவேண்டும் என்பதே எனது நோக்கம். இன்றுள்ள மாநிலங்களில் அவர்களின் வாழ்க்கை, சுதந்திரம் ஆகியவை குறிப்பிட்ட அளவுகோல்களின்படி உள்ளது. இப்படியன்றி, இந்திய யூனியனிலுள்ள அனைத்து மாநிலங்களும் சமநிலையிலான சுதந்திரத்தை பெறவேண்டும். மாநிலங்களின் பிரதிநிதிகள், மக்களவையில் இதுபற்றி கூறி தெளிவுபடுத்தவேண்டும். இந்திய அரசு மாநிலங்களிடையே ஒற்றுமை கொண்டது போலான அமைப்பை உருவாக்கி பராமரிக்க வேண்டும்.
நாம் உருவாக்கும் அரசியலமைப்பு என்பது உலக நாடுகளிடையே இந்தியாவை வலிமையாகவும், உறுதியாகவும் காட்டவேண்டும். இந்தியா சுதந்திரமாகவும், தன்னிச்சையாவவும் இயங்கும் ஆற்றலுடன் இருக்கவேண்டும். இந்தியா நிலப்பரப்புரீதியாக பெரிய நாடு, மக்கள்தொகையிலும் பெரியது. அதேபோல இந்நாடு கொண்டிருக்கும் இயற்கைவளங்களின் அடிப்படையிலும் நாம் முக்கியத்துவம் பெறுவது முக்கியம். இவற்றின் மூலம் இந்தியா வெளியுறவில் சிறப்பான பங்களிப்பை வழங்கமுடியும். அரசியலைப்பு சட்டத்தில் விவசாயிகளுக்கான உரீமை உலகநாடுகளிடையே நமக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றிய கவனத்துடன்தான் வழங்கப்பட்டுள்ளது. நாம் உலகை நட்பான முறையில்தான் அணுகவுள்ளோம். அனைத்து நாடுகளையும் நட்பு நாடுகளாகவே மாற்றிக்கொள்ள எண்ணுகிறோம். முந்தைய காலத்தில் இங்கிலாந்துடன் கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் அந்நாட்டுடனும் நல்லுறவை கொள்ளவே நினைக்கிறோம்
நான் அண்மையில் இங்கிலாந்திற்கு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று சென்று வந்தேன். அங்கு நான் எங்கும் எனக்கான வரவேற்பை கண்டேன். உளவியல்பூர்வமான தருணம் இந்தியாவுக்கு முக்கியமானது. இந்தியா பிற நாடுகளை ஊக்கப்படுத்தி நட்புகொள்ளவும் ஒருங்கிணைந்து பணியாற்றவே நினைக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டுடன் நமக்கு ஏற்கெனவே ஏராளமான முரண்பாடுகள், பிரச்னைகள் இருந்து வந்துள்ளன. அங்கிருந்து வந்த நான் இந்தியாவை ஊக்குவிக்கும் எந்த செய்தியையும் கொண்டு வரவில்லை.
இந்தியா பற்றிய அந்நாட்டின் அமைச்சரவை கூறிய கருத்துகளை நான் ஏற்கவில்லை. அவர்கள் நம்மை வாழ்த்திப் பேசவேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் நமது பாதையில் குறுக்கே அவர்களது கருத்துகள் நிற்பதை நான் விரும்பவில்லை. சுதந்திரத்தை எதிர்பார்த்து நிற்கும் இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளையும் சட்டத்தின் வழியே செய்யவேண்டும். சுதந்திரத்திற்காக பல்லாண்டுகள் போராடி இப்போதுள்ள நிலையை நாம் அடைந்துள்ளோம். இனி நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய விஷயங்களை உருவாக்க வேண்டும். சுதந்திரமான புதிய இந்தியாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கும்போது புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராகுவது அவசியம். இதற்கான உழைப்பை இந்திய மக்களின் தலைமுறை வழங்கியுள்ளன. இம்மக்களுக்கு பின்னணியில் எவ்வளவு வலிமையான சக்திகளை அழுத்தம் கொடுத்தாலும், புத்திசாலித்தனமாகவும வசீகரமாகவும் சூழலைச் சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். ஒருவரை சரியாக புரிந்துகொண்டுவிடும் திறன் இருந்தால் உங்களால் எப்படிப்பட்ட மனிதர்களையும் சமாளித்து விடமுடியும். அவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளலாம். கடந்த காலகட்டங்களில் நம்மை ஆண்டவர்கள் இந்தியர்களின் பிரச்னைகளை ஆழமாக தெரிந்துகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்களால் நம்மை உள்வாங்கி உணர்ந்து பார்க்க தெரியாததுதான்.
இந்தியாவுக்கு பிறர் எந்த அறிவுரைகளையும், அறிவுறுத்தல்களையும் தரவேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவை நட்புரீதியாகவும், ஒற்றுமையான கூட்டுறவு முறையிலும் எளிதில் அணுகமுடியும். நான் வெளிப்படையாக கூறினால், கடந்த சில மாதங்களாக் நாம் சந்திக்கும் பிரச்னைகள் கூட்டுறவை வேண்டுகின்றன. இச்சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான பதில்களை போதுமானவையாக இல்லை என்றால் நிலைமை கடினமாகவே இருக்கும். நாம் நமது நாட்டு மக்கள் பற்றிய விமர்சனங்களை கூறுகிறோம். அவர்களில் சிலர் இதனை கேட்டு தவறான பாதையில் நடந்துசெல்லவும் வாய்ப்புள்ளது. இன்று, நாளை, அதற்கு மறுநாள் என தொடர்ச்சியாக கூட்டுறவு முறையில் நம் நாட்டிற்காக நாம் உழைத்தேயாகவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்னைகளை நிகழ்காலத்தில் அடையாளம் கண்டு தடுப்பது முக்கியம். நம் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெரியளவில் நாம் பெறவேண்டும். இதன் பொருள் நாம் நாம் மததில் கொண்டுள்ள கருத்தியல்களை விட்டுககொடுதது வாழ்வது அல்ல. நம் வாழ்க்கைக்கு பொருள் கொடுக்கும் அனைத்து விஷயங்களையும் விட்டுக்கொடுத்து நாம் கூட்டுறவுகளை பெறுவதில் அர்த்தமில்லை. இங்கிலாந்து நாட்டுடன் நாம் கொள்ளும் உறவு இந்த சூழ்நிலையில் இருபுறமும் சந்தேகம் கொள்வதாகவே இருக்கும். இந்த உறவு மறுக்கப்பட்டால் இந்தியாவுக்கு அது ஆபத்தாக மாறும். தொலைநோக்கில் இங்கிலாந்து நாட்டிற்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். இதற்கு பின்னர் அது உலகளவில் எதிரொலிக்கும். இப்போதுதான் நாம் உலக போர்களை கடந்து வந்துள்ளோம். புதிய போர்களைப் பற்றி மக்கள் இப்போது விரக்தியாக பேசிவருகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பிறந்துள்ள புதிய இந்தியா உற்சாகத்துடன் பயமற்று, உற்சாகத்துடன் இருக்கவேண்டும். உலகில் இந்த நிகழ்ச்சி முக்கியமானது. நாம் இப்போது செய்யவேண்டிய முக்கியமான பணி, அரசியலைப்பை உருவாக்கு்ம் கடுமையான பணிதான். இதன்மூலம் நாட்டிற்கு கிடைக்கும் நிகழ்கால எதிர்கால பயன்களை கவனிக்கவேண்டும்.
எனவே இந்த அவையை கேட்டுக்கொள்கிறேன். நாம் செய்யும் செயல்பாடுகளை இப்போதுள்ளவர்கள் மட்டுமல்லாது எதிர்காலத்திலும் கூட மதிப்பீடு செய்வார்கள். மதிப்புடைய நிகழ்காலம் பிறக்காத எதிர்காலம் ஆகியவற்றையும் நாம் தீர்மானிக்கவேண்டிய இடத்தில் உள்ளோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக