பொறியாளரின் சுதந்திர வேட்கையை உடைத்து நொறுக்கும் மத, அரசியல் அமைப்புகளின் கோர முகம்! ரோஸ் ஐலேண்ட் 2020
ரோஸ் ஐலேண்ட்
சுதந்திரமாக வாழ நினைக்கும் பொறியாளரின் கனவை அரசியலும் மதமும் இணைந்து எப்படி அழிக்கின்றன என்பதுதான் கதை.
இத்தாலியில் வாழும் பொறியாளர் ஜார்ஜியா ரோஸ். இவருக்கு தனித்துவமாக வேலைகளை செய்வது பிடிக்கும். எனவே, பிற பிராண்டு வண்டிகளை வாங்கி நம்பர் பிளேட் வைத்து ஓட்டாமல் தானே மோட்டார் காரை வடிவமைத்து அதனை ஓட்டிச்செல்கிறார். இவரது கனவு பெரியது. ஆனால் அதனை உலகம் புரிந்துகொள்வதில்லை. ஏன் வழக்குரைஞராக இருக்கும் அவரது காதலி கூட புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை. அப்படியா ஃபைன் என கடந்துபோய்விடுகிறார். தான் சுதந்திரமாக இருப்பதோடு பிறரும் அப்படி வாழும்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்கு காதலி கோபத்தில் திட்டும் ஒரு வாக்கியம்தான் காரணமாக உள்ளது. நீ வேறு உலகத்தில் வாழ்கிறாய். நானும் நீயும் ஒன்றாக வாழ முடியாது. நீ ஏதாவது சாதிக்கணும்னா அதை உன்னுடைய உலகில் உருவாக்கிக்கொள் என திட்டிவிட்டு சென்று செல்கிறாள் கேப்ரியெல்லா.
அந்த வாக்கியம் ரோஸை அதிகம் யோசிக்க வைக்கிறது. எனவே, உடனே தனது தொழிலதிபர் நண்பனைத் தொடர்புகொள்கிறான். அதிக செலவு இல்லாமல் கடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் தீவு ஒன்றை உருவாக்கும் திட்டத்தை சொல்லுகிறான். அவன் நண்பனுக்கு அப்பாவின் அழுத்தம் இல்லாமல் தொழில் தொட ங்கி வெல்லவேண்டும் என்பதுதான் கனவு. அதற்கான பணத்தேவையை அவன் பார்த்துக்கொள்ள, ரோஸின் அற்புதமான பொறியியல் அறிவில் நுணுக்கமாக தயாராகிறது ரோஸ் தீவு.
இங்கு முதலில் வருபவர் ஒரு குற்றவாளி. பின்னர் கிளப்புகளில் மேனேஜர் போன்ற வேலைகளை செய்யும் குடியுரிமை இல்லாத மனிதர் வந்து சேர தீவு களைகட்டுகிறது. குடியுரிமை இல்லாத நண்பரின் உதவியால் தீவுக்கு ஏராளமான மனிதர்கள் வந்து பாட்டு போட்டு கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு வீடு திரும்புகின்றனர். இங்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. மது, மாது, மஜா என்பதுதான் நோக்கம். எனவே ரோஸ் தீ்வில் பணம் கொட்டுகிறது. இதை வந்து பார்வையிடும் கேப்ரியெல்லா, இதை எப்படி தீவு என்கிறாய் வெறும் கிளப் போன்றுதானே உள்ளது. இதில் மனிதர்கள் எப்படி வாழ முடியும்? இதனை தீவாக மாற்ற முயற்சிசெய். ஆனால் இதனால் எல்லாம் நான் உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மறுபடியும் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள்.
இதனால் மனமுடையும் ரோஸ் ஐ.நா அமைப்புக்கு கடிதம் எழுதி தீவை நாடாக பிரகடனம் செய்துகொள்ள வேண்டுகிறார். இதனால் இந்த பிரச்னை நாளிதழ்களில் தீவிரமாக விவாதிக்கப்படும் பிரச்னையாக மாறுகிறது. இதில் தலையிடும் மத தலைவர்கள், அரசியல்வாதிகள் எப்படி இந்த தீவு பிரச்னையைக் கையாளுகிறார்கள், சுதந்திரத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவல நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் ஜார்ஜியா ரோஸாக நடித்துள்ளவரின் உடல் மொழி சர்வமும் அலட்சியம் நிறைந்தது. தான் நினைக்கும் விஷயத்தை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறார். பெற்றோர், காதலி தனது கனவை ஏற்காத போதும் அதைப் பற்றி கவலைப்படாதவர், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்போது சற்றே இறங்கிவருகிறார். ஆனால் கார் கம்பெனியில் தனது வேலையை இழந்துவிடுகிற ரோஸின் தந்தை, அவரிடம் லட்சியம் பற்றி உறுதியாக இரு என்று சொல்லும் காட்சி முக்கியமானது. இறுதிக்காட்சியில் காப்ரியெல்லா ரோஸின் சாதனை பற்றி பரிசுக்கடையில் ரோஸ் தீவு பொம்மையை கையில் எடுத்து பார்த்து உணர்வது, தீவுக்கு சென்று ரோஸிடம் பேசுவது, மக்களுடைய வாழ்க்கையை மாற்ற ஏதாவது முயற்சி செஞ்சியே அதுவே பெரிய விஷயம் என அவரை கணவராக ஏற்பது, காதலியின் ஐடியாபடி ஐ.நா கௌன்சிலில் ஒருவாரம் இருமியபடியே உட்கார்ந்திருப்பது, முதலில் அவரை சந்திக்க மறுத்து திட்டிய அதிகாரி பின்னர் அவரின் ஐடியாவை கொண்டாடுவது என பல்வேறு காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரமான சமூகம் என்பதை பேசும் படம், இத்தாலியில் உண்மையில் நடந்த சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. படம் முடிந்தபிறகு உண்மையில் நடந்த சம்பவங்கள் கருப்பு வெள்ளையில் காட்சிகளாக விரிகின்றன.
தனிப்பட்ட மனிதரின் சுதந்திரத்தை அமைப்புகள் எப்படி நொறுக்கி தன்னை நீட்டித்துக்கொள்கின்றன என்பதை மிகச்சிறப்பாக காட்சிபடுத்தியுள்ள படம்.
சுதந்திரவேட்கை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக