போர்க்கலையைக் கற்ற பெண்ணை அலைகழிக்கும் ஆண்களை மையப்படுத்திய சீன சமூகம்! முலன் 2020
முலன்
ஆண்களுக்கு நிகரான தனது மூத்த பெண்ணுக்கு முன்னாள் போர் வீரர் பயிற்சி கொடுக்கிறார். அதனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த பெண்ணின் உயிர்சக்தி வலிமையாக உள்ளது. ஆனால் அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவள் பெண் என்பதற்காக அவமானப்படுத்துகிறார்கள். இதனை எதிர்த்து அவள் எப்படி தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்துகிறாள், தனது சுற்றியுள்ள உறவினர்களுக்கு தன்னை எப்படி புரிய வைக்கிறாள் என்பதுதான் படத்தின் மையக்கதை.
படத்தை பார்ப்பவர்களுக்கு சீனத்தின் எப்படி பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி அவர்களை செக்சுக்கு மட்டும் பயன்படுத்தினார்கள் என்பதே மனதில் ஓடும். காரணம், அந்த நாடு மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் பெண்களை அந்த காலத்தில் அப்படித்தான் ஒடுக்கினார்கள்.
முலன் கோழியை எப்படி பஞ்சாரத்தில் அடைக்கிறாள் என்பதைக் காட்டும் காட்சியில் அவளது மன வலிமை, உடல் வலிமை, பெற்ற பயிற்சி என அனைத்தையும் காட்டி விடுகிறார்கள். அதற்கடுத்த காட்சிகளில் பெண் என்பதற்காக அவளை ஒடுக்கி அடிமைப்படுத்துவதைக் காட்டுகிறார்கள். இதற்கிடையில் சூனியக்காரி என்று அழைக்கப்படும் பெண்ணின் காட்சிகள் வருகின்றன. ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் சிறுவயது வாழ்க்கைதான் இப்படி இருக்கிறதோ என்று காட்சி மயக்கம் ஏற்படுகிறது. ஆனால் இருவரின் வாழ்க்கையும் வேறுவேறு என இறுதியில் புரிகிறது.
கழுகாக மாறிய பெண், படை வீரர்களை தாக்கும் காட்சிகள், உருமாற்றம் கொண்டு மன்னரை ஏமாற்றுவது, அங்கீகாரத்திற்கு ஏங்கினாலும் அது எங்கேயும் கிடைக்காமல் போகும் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
முலன் தன் அடையாளத்தை மறைத்து படைவீரர்களுக்கான பயிற்சி பெறுவது, அங்கு அவளுக்கு படைவீரனோடு வரும் மெல்லிய காதல், அடையாளம் தெரிந்துவிடும் என குளிக்காமல் இருப்பது, இறுதியில் சூனியக்காரி அவள் சொல்லும் பொய் அவளை பலவீனமாக்குகிறது என உண்மையைச் சொல்லுவது என காட்சிகள் பல்வேறு இடங்களில் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன..
விசுவாசம், தைரியம், உண்மை, குடும்பத்தின் மீதான பற்று மட்டுமே நாட்டைக் காப்பாற்ற ஒருவனுக்கு முக்கியம் என படத்தின் இறுதியில் கூறப்படுகிறது. பெண்களை அவமரியாதையாக கருதிய பலரும் மெல்ல மனம் மாறுவதை படத்தில் சொல்லுகிற காட்சிகள் நன்றாக உள்ளன.
தனது திறமைக்கான அங்கீகாரத்தை தேடும் பெண்ணின் பயணம்தான் முலன். முடிந்தவரை காட்சிகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் கழுகாக மாறும் பெண்ணோடு மோதுவது போல காட்சிகளை கூடுதலாக சேர்த்திருக்கலாம். ஒவ்வொருவரும் தனது மனதிலுள்ள நம்பிக்கையை இழக்காமல் இருக்கத்தானே பிறரிடம் மோதுகிறார்கள். பொய் சொன்னபோது முலன் சண்டையில் தோற்கிறாள். உண்மையாக இருக்கும்போது அவள் கழுகுப்பெண்ணிடம் சண்டையிட்டு வெற்றி பெறுவது சிறப்பாக இருந்திருக்கலாம்.
விசுவாசம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக