இனவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டம்! - மாந்தருள் தெய்வம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
மாந்தருள் தெய்வம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
காந்தியின் வாழ்க்கையை அவர் பிறந்தது முதல் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெல்வது வரையிலான அவரது வாழ்க்கையைப் பேசுகிறது நூல் இது.
நூலின் சிறப்பு என்னவென்றால், இது பள்ளிக்குழ்ந்தைகளுக்கு காந்தியை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதுதான்.
பனியா என்ற இனத்தில் பிறப்பது, அவரது குடும்ப வாழ்க்கை. தொழில்வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சமூக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை படிக்கும் யாவரும் புரிந்துகொள்ளமுடியும். இதனால் கஸ்தூரிபாய் காந்தி, மணிலால் காந்தி, ஹரிலால் காந்தி ஆகியோர் பற்றிய பகுதிகள் இதில் குறைவாகவே உள்ளன. அதனால் நூலைப் படிக்கும் எவருக்கும் பெரிய குறைபாடாக தோன்றாது.
அந்தளவுக்கு பொதுநலனுக்கு காந்தி என்னென்ன விஷயங்களை யோசித்துள்ளார் என்பது வாசகர்களை ரசிக்க வைக்கிறது.
லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்கும் பகுதி காந்தியின் வாழ்க்கையில் முக்கியமானது. இங்குதான் அவருக்கு உணவு, கலாசாரம் சார்ந்த வேறுபாடுகளை துல்லியமாக தெரிகிறது. மேலும் அவரது பிற்கால வாழ்க்கைக்கான பல்வேறு நண்பர்களையும் சந்திக்கிறார். அதோடு தனது வாழ்வாதாரத்திற்கான தொழில் பட்டத்தையும் பெறுகிறார். தனியாக வாழ்ந்தாலும் தன்னை கவனித்துக்கொள்வதற்கான தைரியத்தையும் பெறுகிறார்.
இந்திய ஆங்கிலேயர், லண்டன் ஆங்கிலேயர் ஆகியோருக்கும் வேறுபாடுகளை அவர் அறியும் சந்தர்ப்பங்கள் வலி நிரம்பியவை. இவை அவருக்கு நேர்மை, சிபாரிசு பற்றிய பாடங்களை வாழ்க்கை முழுக்க கைக்கொள்ள தூண்டுகின்றன. வழக்குரைஞருக்கு படித்தாலும் கூட நீதிமன்றத்தின் தேவை என்பது ஒருவருக்கு மிக குறைவு என எண்ணுகிறார் காந்தி. இதனால் நேரடியாக நீதிமன்றத்தில் வாதிட முடியாத சூழலில் விண்ணப்பங்கள் எழுதிக்கொடுத்து குடும்பத்திற்கான சம்பாத்தியத்தைப் பெறுகிறார். அதேசமயம், இந்த வேலைகள் தொடர்ச்சியாக தனக்கு சம்பாத்தியத்தை தராது என்பதை உணர்கிறார்.
நீதிமன்றத்தில் முறையிடுவோர் தமக்குள் ராஜி செய்துகொள்வது இருவருக்கும் சிறப்பானது என்ற நம்பிக்கையை காந்தி வளர்த்துக்கொள்கிறார். இதுவே அவர் தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகத்தின்போது தளபதி ஸ்மட்ஸின் ராஜதந்திரத்தை அறியாமல் ராஜி செய்துகொள்ள வைக்கிறது.
நூல் முழுக்க காந்தியின் பல்வேறு செயல்பாடுகள் இன்றைய காலத்தில் அர்த்தமற்றவை என்று தோன்றினாலும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் அதனை செய்துள்ளார் என உறுதியாக நினைக்கலாம்.
காந்தியை மாமனிதன் என்று கல்கி எழுதியிருந்தாலும் படிப்பவர்கள் அதனை அப்படியே கருதவேண்டியதில்லை. காந்தி தான் படித்த பல விஷயங்களை தன் வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் சோதித்துக்கொண்டே இருக்கிறார். இதன் அடிப்படையில் பல்வேறு விஷயங்களைக் கண்டடைகிறார். இயற்கை வைத்தியம், சத்தியாகிரகம், இந்து சுயராஜ்யம், மாமிச மறுப்பு, பழ உணவுகள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி கூறலாம். இதோடு இந்தியன் ஒப்பீனியன் என்ற பத்திரிகை பணிகளுக்கான உழைப்பையும் கூறலாம். நஷ்டத்தில் இயங்கினாலும் கூட இப்பத்திரிக்கைக்கான பணிகளை அவர் நிறுத்தாமல் தொடர்கிறார். இந்தியர்களின் வாழ்க்கைக்காக பல்வேறு கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதுகிறார். தம் மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக ஆங்கிலத்தில் நடத்தி வந்த பத்திரிக்கை இது. பிற ஊடகங்களை சந்தித்து தனது கருத்துகளை முன்வைப்பதோடு தனது கருத்துகளை தெளிவாக சாங்கோபாங்கமின்றி முன்வைப்பதற்காக காந்தி தொடங்கிய இம்முயற்சி முக்கியமானது. இதனால் அவரின் சிறந்த கட்டுரைகளை நாம் இன்றும் பெற்று வாசிக்க முடிகிறது.
வன்முறையைக் கைக்கொள்ளாமல் எளிய மனிதன் தான் சார்ந்த தன்னை நம்பியுள்ள இனத்தை காப்பாற்ற முடியுமா என்று சந்தேகம் தோன்றினால் இந்த நூலை கண்டிப்பாக வாசிக்கலாம். இந்தியாவில் இன்றும் நடைபெறும் பல்வேறு அமைதி வழி போராட்டங்களுக்கு காந்தியே முன்னோடியாக உள்ளார்.
அமைதி வழி
கோமாளிமேடை டீம்
நன்றி
இரா.முருகானந்தம்
கருத்துகள்
கருத்துரையிடுக