உலகை மெல்ல வளைக்கும் செயற்கை நுண்ணறிவு! - கோவிட் -19 ஏற்படுத்திய மாற்றம்

 

 

 

 

 Robot, Technology, Artificial, Intelligence

 

 


கொரோனா தொடங்கிய ஏ.ஐ புரட்சி!



தானியங்கி எந்திரங்கள் முன்னர் தொழி்ற்சாலைகளில் இயக்கப்பட்டாலும், அதன் பரவலை கோவிட்-19 காலம் வேகப்படுத்தியுள்ளது.


பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றுக்கான தளர்வுகளில் வணிக வளாகங்கள் மெல்ல திறக்கப்பட்டு வருகி்ன்றன. சிங்கப்பூரில் தூய்மை செய்யும் பணிகளுக்கு கூட புற ஊதாக்கதிர்களைக் கொண்ட எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட நேரடி தொடர்புகளை தவிர்த்து, முழுக்க செயலி வசம் அனைத்து செயல்பாடுகளும் வந்துவிட்டன.


உணவு, மருத்துவ சேவைகளுக்கும் கூட பாட் வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ’’பெருந்தொற்று காலம், சுகாதாரமாக வாழவும், மனிதர்களை நேரடித்தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியோடு பல்வேறு விஷயங்களையும் செய்ய வைத்துவிட்டது. செயற்கை நுண்ணறிவின் வேகமான பரவல் நமக்கு நன்மையும் கூடத்தான்’’ என்கிறார் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பாக்.


நான்காவது தொழிற்புரட்சியின் பாகங்களாக செயற்கை நுண்ணறிவை கூறுகின்றனர். இதன் வருகையால், வேலையிழப்பு பாதிப்பும் இப்போது ஏற்படத்தொடங்கிவிட்டது. தானியங்கி கார்கள், இணையத்தில் படங்கள் பார்ப்பது, போன் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்குவது ஆகியவை நவீனத் தலைமுறையினரை ஈர்த்துள்ளது. நீண்டகால நோக்கில் இந்த முயற்சிகள், வேலையின்மை பிரச்னையை உருவாக்கும் என கூறப்படுகிறது.


2017ஆம் ஆண்டு மெக்கின்சி நிறுவனம் செய்த ஆய்வில், 2030க்குள் 80 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலையிழப்பைச் சந்திப்பார்கள் என்று கூறியுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் 47 சதவீதம், இங்கிலாந்தில் 35 சதவீதம் என செயற்கை நுண்ணறிவுப் பணிகளை ஆக்கிரமிக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கார்ல் ஃபிரே, மைக்கேல் ஆஸ்பர்ன் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் 2013இல் எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


அமேஸான், வால்மார்ட் ஆகிய பெரு நிறுவனங்கள் தங்கள் கிடங்குகளில் பணிகளைச் செய்ய ரோபோக்களை நாடியுள்ளன. யூடியூப், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் செய்திகளை மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவை அதிகம் பயன்படுத்துகின்றன. ஐபிஎம்மின் வாட்சன் உதவி மென்பொருளின் விற்பனை 40 சதவீதம்(பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை) அதிகரித்துள்ளது. இதனை ரீடெய்ல் நிறுவனங்களும் கார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் வியாபார விசாரணைகளை எதிர்கொள்ள பயன்படுத்துகின்றன. டிரோன் இயக்குநர், விர்ச்சுவல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தகவல் அறிவியலாளர் என பல்வேறு வேலைகள் உருவாகியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம். எதிர்காலத்தை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து பணிகளை செய்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.


தகவல்

NS


Covid 19’s ai revolution

sandy ong New Scientist 10 oct 2020

நன்றி

 

தினமலர் பட்டம்

imgae pixabay




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்