தேர்ச்சியை கணிக்க அல்காரிதங்களே சிறந்தவையா? - மாணவர்களை பிளவுபடுத்தும் அல்காரிதங்கள்
தேர்ச்சியைக் கணிக்கும் அல்காரிதம்!
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பிரச்னையால், மாணவர்களின் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டு முந்தை ஆண்டு மதிப்பெண்களே வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதற்கிடையில் அவர்களின் மதிப்பெண்களை மதிப்பிட கல்வி அமைச்சகம் அல்காரிதம் ஒன்றைப் பயன்படுத்தியது. இதன் விளைவாக வெளியான தேர்வு முடிவுகளில் ஏ கிரேட் மாணவர்கள் 40 சதவீதம் பேர் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். ஆசிரியர்களின் கணிப்பை விட அல்காரிதத்தின் கணிப்பு முறை மாணவர்களின் தேர்ச்சி தரத்தை குறைத்துள்ளது நாடெங்கும் சர்ச்சையானது.
மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடத்தொடங்கினர். இப்பிரச்னையைத் தீர்க்க இங்கிலாந்து கல்வி அமைச்சகம், ஆசிரியர்களின் யூக தேர்ச்சி முறையை செயல்படுத்துவதாக அறிவித்துவிட்டது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலரும் அல்காரித முறையில் தேர்ச்சியை இழந்துள்ளனர். இவர்கள் சட்டம், இலக்கியம் ஆகிய படிப்புகளை படித்தவர்கள் ஆவர். அல்காரிதத்தில் ஆசிரியர்களின் பரிந்துரை, மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் ஆகியவை உள்ளீடு செய்யப்படவில்லை. எனவே வெளியான முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மாற்றம் செய்யப்பட்ட தேர்வு முடிவுகளின் படியே மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், பள்ளிகளின் தேர்ச்சி எண்ணிக்கை, முதல் மாணவர்கள், தேர்ச்சி தகுதிகள் ஆகியவை அமையவிருக்கின்றன. முந்தைய ஆண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையைக் கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டில் மதிப்பெண்களை வழங்கினாலும் அது பொருத்தமாக இருக்கு்ம என்று கூறமுடியாது.
நாடு முழுக்க உள்ள மாணவர்களின் தகவல்களை செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு அல்காரிதம் கையாளமுடியும். ஆனால் தேர்வு முடிவுகளை வைத்தே மாணவர்கள் மேற்படிப்பு படிக்கமுடியும் என்பதற்காக பலரு்ம் இதனை எதிர்க்கிறார்கள். அமேஸான், யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் அல்காரிதம் மூலமே வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பரிசீலிக்கின்றனர். எனவே, அல்காரிதப் பயன்பாட்டை நாம் முழுவதுமாக தவிர்க்க முடியாது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி பிரான்டிங்காம், பிரட்போல் (Predpole) எனு்ம் அல்காரிதத்தை உருவாக்கினார். இது, ஒருவர் முன்னர் செய்த குற்றங்கள் சார்ந்து எதிர்காலத்தில் அவர் செய்ய வாய்ப்புள்ள குற்றங்களை அடையாளம் காட்டும். அமெரிக்கா, இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் இந்த அல்காரிதத்தால் குறிப்பிட்ட இனக்குழுவினர் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் செயல்பாடு மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதேபோலத்தான் காம்பஸ் (COMPAS) என்ற அமெரிக்க நீதித்துறை அல்காரிதமும் கருப்பினத்தவரையே அதிகம் குற்றவாளிகள் என குறிப்பிட்டது. இதனைக் கண்டித்த பத்து கணித வல்லுநர்கள், இத்தகைய மென்பொருள் பணியில் சக கணிதவியலாளர்கள் பங்கேற்க கூடாது என பகிரங்க கடிதம் எழுதினர். இனம், நிறம், கருத்தியல சார்ந்தும் அல்காரிதங்கள் விமர்சிக்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்து சமூகத்தினரையும் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் அல்காரிதம் உருவாக்கப்பட்டால்தான் கல்வி, காவல்துறை, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளும் பயன் பெறும்.
தகவல்
science focus
science focus magazine
timandra harkness
நன்றி
தினமலர் பட்டம்
படம் பிக்ஸா பே
கருத்துகள்
கருத்துரையிடுக